கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்

குறள் 329
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
கொலை - உயிர்வதை, உயிரைஉடம்பினின்றுநீக்கல்.

வினை -தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

வினையர் - தொழிலை செய்பவர் 

ஆகிய - ஆக்கம் ; உருவாகிய, ākiya   rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு  

மாக்கள் - மனிதர்கள்; பகுத்தறிவிலார்; குழந்தைகள்; விலங்குகள்.

புலைவினையர் - pulai-viṉaiyar   n. id. +.Abominable, vile persons; men of execrabledeeds; இழிதொழிலாளர்.

புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.

தெரிவு - அறிவு; தெரிந்தெடுக்கை; தெரிந்தெடுக்கப்பட்டது; தோற்றம்; அறியப்பட்டது.

தெரிவார் - அறிந்தவர்கள்

அகத்து -  அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

முழுப்பொருள்
பிற உயிர்களை கொலைச் செய்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள் பகுத்தறியும் திறனில்லாத மாக்கள் எனப்படுவர். அவர் அத்தொழிலில் இழிவையும் அதனால் வரும் பாவத்தையும் அறியாதவர்கள். ஆனால் கொலைச்செயலை இழிவானவர்கள் செய்யும் இழிச்செயல் என்றே நூல்கள்பல கற்றுணர்ந்துத் தெளிவான அறிவுடைய சான்றோர்கள் கருதுவார்கள். ஆதலால் கொலை தொழிலில் ஈடுபட்டு உள்ளவனே, அந்த இழிச்செயலை செய்யாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர்.   

மாக்கள் என்ற சொல்லுக்கு விலங்குகள் என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது சரியான பொருளென்று எனக்குப் படவில்லை. கீழே "மக்கள் - மாக்கள் - மாக்காள் - மாக்கட்கு!" என்ற சிறு கட்டுரையை வாசித்தால் ஏன் என்று விளங்கும். 

இக்குறளில் மாக்கள் என்றால் பகுத்தறியும் தன்மையற்றவர்கள் என்ற பொருளே பொருந்தும். ஏனெனில் கொலை செய்வது ஒருவர் என்றாலும் அதனை ஊனையோ அல்லது தோலையோ பயன்படுத்துவது வேறொருவர் ஆதலால் பயனடைந்தவருக்குத்தான் பாவம் என்று நினைத்துக்கொள்வர்கொலை செய்கின்றவர். பிற உயிர்களை கொலைசெய்வதனால் வரும் பயனை வேறொருவர் பெற்றாலும் அதனை வசதியாக செய்துக்கொடுப்பவர்க்கும் பாவம் உண்டு. ஒருவர் ஒரு உயிரை கொலைசெய்து உண்ணவேண்டும் என்றால், அவர் புலாலை உண்ணவே மாட்டார். ஆதலால் இந்த மாமிச உணவுச் சங்கிலியில் பயனாளர்களுக்கு பாவம் உள்ளதுப்போல அதனை உற்பத்திச் /வணிகம் செய்வோருக்கும் பாவத்தில் பங்கு உண்டு. இதனைப் பகுத்து அறியாதவரை மாக்கள் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

கொலைசெய்வோர் வைக்கும் வாதம் என்னவெனில், நான் வெறுமென கொலை தானே செய்தேன். ஆனால் ஊனை உண்டவர்களும் தோலை ஆடையாக காலணியாக அணிந்துக்கொள்வோரும் தானே இறுதியாக பயன் அடைந்தார்கள். அவர்கள் இல்லையெல் நான் இல்லை என்று. திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் "குறள் 256 தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்". மாமிச உணவை உண்ணுவதற்காக இவ்வுலகில் மக்கள் இல்லையென்றால் மாமிச உணவை விற்பதற்கும் இவ்வுலகில் மக்கள் இருக்க மாட்டார்கள். ஆதலால் எங்களை ஏன் இழிவானவர்களாக கருதுகிறீர்கள்?  
அதற்கான பதில் 
1) திருவள்ளுவர் அங்கே(குறள் 256) ஊனை உண்ணுவோர் இல்லையெனில் விலைப்பொருளாக விற்போர் இருக்க மாட்டார்கள் என்று தான் சொன்னாரே தவிர மாமிசத்தை விற்போருக்கு இழிவு இல்லை என்று சொல்லவில்லை. மேலும் உண்ணுவோர் இருந்தாலும் அவர்களுக்கு ஆசையிருந்தாலும் விற்போர் இல்லையெனில் உண்ணுவோர்க்கு ஏது ஊன்? 
(இந்த வாதம் குறிப்பாக தமிழ்நாட்டில் மதுபானங்கள்/சாராயம் விற்கும் தொழிலதிபர்களுக்கும் பொருந்தும் ஏனெனில் மக்கள் குறைக்க தொடங்கினால் நாங்கள் உற்பத்தியை குறைத்துவிடுவோம் என்று கூறும் இவர்கள். உற்பத்தி செய்யவில்லையென்றால் மக்கள் குடிக்கமாட்டார்கள் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்)

2) திருவள்ளுவர் அங்கு உணவு/தோல் தொடர் சங்கிலியில் நேரடிப் பயனாளர்களை சாடினார். இங்கு மறைமுக பயனாளர்களை சாடுகிறார். (என்ன சொல்கிறீர்கள்?)  பிறர் உயிர்களை கொலைசெய்பவன் பொழுதுபோக்கிற்காகவா கொலை செய்கிறான்? இல்லையே. அவன் ஊனையும் தோலையும் விற்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட அளவு இலாபத்திற்காக அதில் இருந்து வரும் மாத சம்பளத்திற்காக தான் செய்கிறான். ஊரில் வேறுத் தொழில் இல்லையா என்ன? ஆதலால் கொலைச்செய்து தொழில்புரிவன் ஒருவிதத்தில் பயனாளன். ஆதலால் அவனுக்கும் கொலை செய்தலில் சரிசமமான பங்கு உண்டு. அவனுக்கு மட்டும் இன்றி இந்தத் தொடர் சங்கிலியில் இடையில் வாங்கி விற்கும் இடைத்தரகர்களுக்கும் இதில் பங்கு உண்டு என்பதையும் நாம் விளங்கிக்கொள்ளலாம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர், புன்மை தெரிவார் அகத்துப் புலைவினையர் - அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர். (கொலை வினையர் என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள் பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர். இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.
மு.வரதராசனார் உரை
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

சாலமன் பாப்பையா உரை
கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.

மக்கள் - மாக்கள் - மாக்காள் - மாக்கட்கு! (தகவல் மட்டுமே)
"மாக்கள்" என்னும் சொல் பழந்தமிழில் பரவலாக வழங்கி இப்பொழுது வழக்கு வீழ்ந்துவிட்டது. மேற்போக்காக காண்கையில் இது "ஆ" என்பதற்குரிய பன்மை வடிவமான "ஆக்கள்" என்பது போன்று விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல்லான "மா" என்பதற்குரிய பன்மை வடிவம் போலத் தோன்றும். ஆனால் உண்மை அதுவன்று.

தொல்காப்பியத்தின் மூன்றாம் இயலான பொருளதிகாரத்தின் மரபியலில் சில சூத்திரங்கள் உயிர்களை ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் ஈறாக வகைப்படுத்திக் காட்டுதலை அறிஞர் பலரும் அறிவர். இச்சூத்திரங்களுள் ஐந்தறிவுடையன பற்றிய இளம்பூரணர் உரையில்,

"மாவும் புள்ளும் ஐயறிவினவே
 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே"

என்றுள்ளது. ஆனால் பேராசிரியரின் உரையில்,

"மாவும் மாக்களும் ஐயறிவினவே
 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே"

என அமைந்துள்ளது.

இவ்விருவர் பாடங்களுள் தொல்காப்பியரின் எண்ணப் போக்கிற்கு ஏற்புடையது யாதென்பது ஆராய்ச்சிக்குரியது.

உயிர்க்கூட்டத்தில் பறவையினத்திற்குரிய சிறப்பிடத்தை நன்குணர்ந்த தொல்காப்பியர், கருப்பொருள்களை வரிசைப்படுத்தும் பொழுது அதற்கு உரிய இடத்தினை அளிக்கத் தவறினாரல்லர்.

தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அன்னவை பிறவும் கருவென மொழிப - 20 - அகத்திணையியல்

என்பது அவர் திருவாக்கு. மாவையும் விலங்கையும் வெவ்வேறாக ஓதிய ஆசிரியர், தொடர்ந்து,

"எந்நில மருங்கின் பூவும் புள்ளும்
 அந்நில மருங்கின் வாரா வாயினும்
 வந்த நிலத்தின் பயத்த வாகும்"

எனச் சிறப்பு விதியும் வகுத்தார்.

இங்ஙனம் பறவையினத்திற்கு உரிய இடம் வகுத்த ஆசிரியர், உயிர்களை அவற்றின் அறிவிற்கு ஏற்ப வகைப்படுத்தும் பொழுது அவற்றைப் புறக்கணித்திருக்க வாய்ப்பு இல்லை. மேலும் "மா" என்பதனுள் புள்ளை அடக்கிக் கூறினார் என்பதும் அவர் கருத்திற்கு இசைந்ததன்று. எனவே, இளம்பூரணர் கொண்ட பாடமே சரியானது என்று முடிவு செய்தல் தவறாகாது.

மக்கள் என்பார் விலங்குகளினும் மேலானோர் என்பதும், அங்ஙனம் மேன்மையுறுதற்கு அடிப்படையாக அமைவது அவர்க்கு ஐந்தறிவிற்கும் மேலான மனவுணர்வு அமைந்திருத்தலே என்பதுமே தொல்காப்பியர் கருத்து. ஒன்றிரண்டு உறுப்புகள் குறைவாகவுடையோரை எப்பெயரால் அமைப்பது என்பது பற்றி ஆசிரியர் கருதினாரல்லர். அப்படிக் கருதியிருப்பின், சொல்லதிகாரத்தில்,

"உயர்திணையென்மனார் மக்கட்சுட்டே அஃறிணையென்மனார் அவரல் பிறவே"

என்று விளக்கிய இடத்திலேயே மாக்கள் பற்றியும் விளக்கியிருப்பார்.

ஆண் தன்மை மிகுந்த பெண்ணையும்
பெண் தன்மை மிகுந்த ஆணையும்
எவ்வாறு வழங்குதல் வேண்டும் என விளக்கிக் கூறிய இலக்கண ஆசிரியர்கள், "மாக்கள்" என்பார் விலங்கொடு சேர்ந்து எண்ணத்தக்கார் என விதி வகுக்காமை நோக்கத்தக்கது. பகுத்தறிவு இல்லாரை விலங்கொடு சேர்ந்து எண்ணவேண்டும் என்ற கருத்து, பேராசிரியர் காலத்தில் நிலவியதன் விளைவாகவே இப்பாட வேறுபாடு தோன்றியது என்று கருதலாம்! இவ்விடைக் காலக்கருத்தை தொல்காப்பியர் மீது திணித்தலை ஏற்க இயலாது.

நச்சினார்க்கினியர் பேரறிவாளர்.

தொல்காப்பியத்திற்கும் சங்க இலங்கியங்களுள்,
பத்துப்பாட்டு
கலித்தொகை
ஆகியவற்றுக்கும்
சீவகசிந்தாமணிக்கும்
உரை வகுத்த பெருமைக்குரியவர்.

அவருடைய உரைகளை நோக்கும் பொழுது அவர், "மாக்கள்" என்ற சொல்லுக்கு "மனவுணர்ச்சியில்லாதோர்" என்ற பேராசிரியரின் கருத்தினை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் என்பது புலப்படுகின்றது.

அவர் உரையின் சில பகுதிகள் வருமாறு:-

"தவம் செய் மாக்கள் தம்முடம்பு இடாது அதன் பயம் எய்திய அளவை மான" - மிக்க தவத்தைச் செய்கின்ற மாக்கள் தம்முடைய தவம் செய்த உடம்பைப் போகடாதேயிருந்து அத்தவத்தாற் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப. மக்களென்னாது மாக்களென்றார். வீடுபேறு குறியாது செல்வத்தைக் குறித்தலின்.

பொருநராற்றுப்படை (91-92).

"பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்" உரை:- அறிவில்லா தோருடைய வாழ்நாளை இத்துணையென்று அளந்தறியும் பொய்யாத காட்சியை உடையார். (மாக்கள் பொழுதளந்து அறியும் பொய்யாக் காண்கையர் எனச் சொற்களை இடம் மாற்றித் தம் விருப்பத்திற்கு இணங்கப் பொருள் தந்துள்ளார்). முல்லைப்பாட்டு (55).

"மாக்கள்" என்ற சொல் ஐந்தறிவுடையார்க்கே உரியது என்பதே நச்சினார்க்கினியரின் உறுதியான கோட்பாடகத் தெரிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில்,
முழுவலிமாக்கள்
இரியல் மாக்கள்
மதனழி மாக்கள்
ஆகிய தொடர்களுக்கு விளக்கமளிக்கையில்,
முறையே நிரம்பிய மெய்வலியை உடைய மாக்கள்
கெடுதலை உடைய மாக்கள்
வலியழிந்த மாக்கள்
என்றே எழுதிச் செல்கின்றார்.

(நெடுநல். 32; பெரும். 432; மலைபடு 280).

மனிதர் அல்லது மாந்தர் என்று விளக்க இடமிருந்தும் அதனைத் தவிர்த்து "மாக்கள்" என்ற சொல்லையே உரையிலும் பயன்படுத்துகின்றார் மருதன் இளநாகனார்.

இடைக்காலத்து உரையாசிர்களாம் பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகியோரின் கருத்தினை, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பேராசிரியர் சிலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர் டாக்டர் உ.வே.சாமிநாதய்யராவார்.

பத்துப்பாட்டை, நச்சினார்க்கினியர் உரையுடன் வெளியிட்டு உதவிய ஐயரவர்கள் ஓர் அடிக்குறிப்பில் குறிப்பிட்டது வருமாறு:-

"ஐயறிவு - ஐம்பொறியுணர்வு; மாக்கள்
 மனனுணர்வின்றி ஐம்பொறியுணர்வையே
 உடைய விலங்கு போல்வார்;

இதனை,

"மாவும் மாக்களும் ஐயறிவினவே"

"மக்கள் தாமே ஆறறிவுயிரே"

என்னும் தொல்காப்பிய மரபியற் சூத்திரங்களானும் உணர்க! (பட்டினப்பாலை 217ம் அடிக்குரிய உரை)

இதனால், பேராசிரியரின் பாடத்தையே ஐயர் அவர்கள் ஏற்றுக்கொண்டமை புலப்படுகின்றது. அங்ஙனமே, "மாக்கள்" என்ற சொல்லுக்குப் பேராசிரியர் கொண்ட பொருளையே தாமும் மேற்கொண்டமையும் தெரிகின்றது.

ஐயரவர்கள் தாமே உரை வகுத்துவெளியிட்ட குறுந்தொகையில் பல செய்யுட்களில் மாக்கள் என்னும் சொல் இடம்பெறுகின்றது (6, 89,145,146,203,263,265,309). இவற்றுள், 6,89,145 ஆகிய செய்யுட்களின் உரையில் ஐயரவர்கள் பழைய உரையாசிரியர்களையொட்டிய விளக்கத்தையே கூறியுள்ளார்.

இந்நூலின் 145ம் செய்யுளில் வரும், "துயில்கண் மாக்களொடு" என்ற பகுதிக்கு, "துயிலுதல் பொருந்திய கண்களையுடைய அறிவற்ற மக்களோடு" என்று உரை வகுத்து, "மாக்களென்றது இங்கே தோழியை; தன் ஆற்றாமை அறியும் வன்மையில்லாமை பற்றி இங்ஙனம் கூறினாள்",என்று விளக்கமும் அளித்துள்ளார்.

ஐயரவர்கள், குறிப்பிட்ட சில இடங்களில் இப்படிச் சிறப்பு விளக்கங்கள் கொடுத்தாலும், ஏனைய இடங்களில் மாக்கள் என்பதற்கு "மனிதர்" என்றே பொருள் எழுதினார். மக்கள் என்றோ மனிதர் என்றோ எழுத மனமின்றி, மாக்கள் என்றே எழுதிய நச்சினார்க்கினியரிமிடருந்து இவ்வகையில் ஐயரவர்கள் வேறுபடுகிறார்.

இதனால் அறிவதாவது,

மாக்கள் என்ற சொல் பொதுவாக மக்கள் என்ற பொருளிலேயே சான்றோரால் ஆளப்பட்டுள்ளது.

இது மக்கள் என்பதன் நீட்டல் விகாரமாகக் கொள்ளத்தக்கது.

பல நிலைகளையும் சார்ந்த மக்கள் குழுவினர் இச்சொல்லால் குறிக்கப்பட்டனர்.

தொல்காப்பியர் "மாக்கள்" என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இடைக்காலத்தில் ஒரு கருத்துக் குழுவினர் "மாக்களும்" என்ற சொல்லை, "புள்ளும்" என்ற சொல்லின் இடத்தில் புகுத்தினர் என்று கொள்ளலாம்.

சங்க நூல்களில் "மக்கள்" என்ற பொருளில் "மாக்கள்" என்ற வடிவம் 48 முறைகளும், மக்களைக் கொண்டது என்ற பொருளில் "மாக்கட்கு" என்ற வடிவம் இரு முறைகளும், மக்களை என்னும் விளிப்பொருள்பட "மாக்காள்" என்ற வடிவம் ஒரு முறையும் இடம் பெறுதலைக் காண்கிறோம்.

இக்கட்டுரையில் வற்புறுத்தப்பட்டவற்றை அறிஞர் உலகம் ஆய்ந்து ஏற்குமாக.

அ.தட்சிணாமூர்த்தி

நன்றி: தமிழ்மணி (தினமணி)

No comments:

Post a Comment