நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்

குறள் 328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

ஆகும்  - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

பெரிது - பெரியது; மிகவும்.

எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும்.

சான்றோர்க்கு - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

கொன்று கொல் கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

ஆகும்  - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஆக்கம்  - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.
கடை - (வி)குடை; சிலுப்பு; தயிர்கடை; பருப்புமுதலியனகடை; மரம்முதலியனகடை; தீக்கடை.

முழுப்பொருள்
ஒருவர் ஒரு உயிரைக்  கொலைச்  செய்து அதனால் மிகப் பெரிய நன்மையும் இன்பமும், செல்வமும் பெறுவார் என்றாலும் அப்பயனை சான்றோர் பெரிதாக கருத மாட்டார் கீழ்மையாகவே கருதுவார் ஏனெனில் அது கொலை செய்து (ஒரு பாவச்செயலினால்) வந்தது. கொலை செய்வது பிறர் உயிர்களுக்கு துன்பம் செய்வது. இன்னா செய்யாமை சொன்ன திருவள்ளுவர் பிறர் உயிர்களை கொலை செய்வதை பாவமெனவே கருதுவார். 

இது குறிப்பாக துறவறத்தில் இருப்போருக்கு பொருந்தும். ஏனேனில், இல்லறத்தில் இருப்போருக்கு வேண்டுமெனில் செல்வமும் இன்பமும் தேவையான ஒன்றாக இருக்கும். இல்லறத்தோர்க்கு துறப்பது அவசியம் இல்லை. துறப்பதை ஒரு பகுதியாக கடைபிடித்து அதன் பயனை அறுவடை செய்வர். அதில் தவறில்லை. 

ஆனால் துறவறத்தில் இருப்போர் பொருட்செல்வத்தை பெரிது என கருதக்கூடாது. நிலையில்லா செல்வம் துறப்பதற்கான ஒன்று. வீடுபேறு என்னும் செல்வம்/நன்மையே அவர்களுக்கு மேலான இலக்கு. கொலை செய்தல் கீழ்மையாகும். ஆதலால் துறவறத்தில் இருந்துக்கொண்டுக் கொலை செய்தால் வீடுபேறுக் கிட்டாது. 

அதனால் தான் வேள்விகள் செய்து தேவர்களை மகிழ்வித்து செல்வம் பெறலாம். ஆனால் அது இல்லறத்தாருக்கு இன்பம் தரும். ஆனால் துறவத்தார் பிற உயிர்களை வேள்வியின் பொருட்டு செய்தாலும் அவர் வீடுபேற்றினை அடைய முடியாது. மீண்டும் பிறவியெடுத்து இப்பிறவிப் பெருங்கடலில் நீந்தவேண்டுயிருக்கும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“....... நன்குணர்ந்தார்
என்பெறினுங் கொல்லார் இயைந்து” (சிறுபஞ்ச.47)

பரிமேலழகர் உரை
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம் பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும், சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை - துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை. (இன்பம் மிகும் செல்வமாவது, தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும். பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்குக் ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கியவாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும் ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது. இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது.

மு.வரதராசனார் உரை
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.

1 comment: