அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

குறள் 247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு 
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

இல்லார்க்கு - இல்லாதவர்க்கு

அவ் - அந்த 

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

இல்லார்க்கு - இல்லாதவர்க்கு

இவ் - இந்த 

உலகம்  - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

இல்லாகியாங்கு - வாழ்க்கை இல்லை அதுபோலே.

முழுப்பொருள்
பொருள் நிலையில்லாதது என்று ஆயிரம் கூறலாம். ஆனால் இந்த வையகத்தில் வாழ பொருள் அவசியம். பொருள் இல்லையென்றால் இந்த இல்லறவாழ்வில் வாழ்வது மிக மிக கடினம். அதிகம் தேவையில்லையென்றாலும் தேவைக்கான அளவாவது பொருள் இருத்தல் வேண்டும். அதுவே நடைமுறை யதார்த்தம். ஆதலால் இல்லறத்தில் வாழ்கிறாய் என்றால் பொருளை பேணுவதில் தவறில்லை. ஆனால் அதுமட்டுமே வாழ்வும் அல்ல. 

அதேப்போல் இவ்வுலக வாழ்க்கைக்கு அதாவது இல்லற வாழ்க்கைக்கு அடுத்த படிநிலையான துறவறத்திலும் அதற்கு அடுத்தபடியான சொர்க்கத்திலும் (வீடுபேறு) அருள் மிக அவசியம். அருள் இல்லையென்றால் அவ்வுலகம் இல்லை. 

பொருள் இல்லையென்றால் இவ்வுலகத்தில் வாழத்தான் முடியாது இவ்வுலகத்தில் இடம் இல்லை என்று இல்லை. ஆனால் அருள் இல்லையென்றால் அவ்வுலகமே இல்லை. 

ஆனால் மேற்கோள் வழக்கில் பொருள்செல்வம் என்பது, பணம் சார்ந்ததாகவே சொல்லப்படுவதை இன்றைய வழக்கிலும், பழம்பாடல்களிலும் கூட காணலாம். குறுந்தொகைப்பாடல்(120:1) ஒன்று, “இல்லோன் இன்பம் காமுற்றாங்கு” என்கிறது. நாலடியார் பாடல் (281), “ஒத்த குடிப்பிறந்தார்க் கண்ணும் ஒன்றில்லாதார் செத்த பிணத்திற்கடை”! அப்பர் சுவாமிகள் கூட, “மாடு தானத்தில்லெனின் மானுடர் பாடுதான் செல்வாரில்லை”  (அப்பர்.கொண்டீச்சரம் 3) என்று வேடிக்கையாகவோ, அல்லது வேதனையுடனோ கூறுவார். “இல்லானை இல்லாளும் வேண்டாள், மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள், செல்லாது அவன்வாய் சொல்” என்பது “நல்வழி”யில் ஔவை வாக்கு. ஆனால் வள்ளுவரே கூட பொருள்செய்வகை அதிகாரத்தில், “இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு” என்று கூறுகிறார். சீவக சிந்தாமணிப்பாடல் (1549) ஒன்று, “எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கிவ்வுலகில் இன்பமேபோல் ஒட்டாவே கண்டீர்” என்று கூறுவதும் பணவசதி சார்ந்த வளப்பத்தைப் பற்றிதான்.

”இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்’ (குறள் 1042)

மஹாகவி பாரதியார் தனது சுயசரிதையில் "பொருட் பெருமை" என்ற தலைப்பில் பொருளின் அவசியத்தையும் கூறியிருப்பார். 
பொருளி லார்க்கிலை யிவ்வுல கென்றநம்
புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண்.
பொருளி லார்க்கின மில்லை, துணையிலை,
பொழு தெலாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால்.
பொருளிலார் பொருள் செய்தல் முதற்கடன்.
போற்றிக் காசினுக் கேங்கி யுயிர்விடும்
மருளர் தம்மிசை யேபழி கூறுவன்:
மாமகட்கிங்கொர் ஊன முரைத்திலன்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல. ( 'அவ்வுலகம், இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.).

மணக்குடவர் உரை
அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல. இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

சாலமன் பாப்பையா உரை
பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
We know that money, materials are transient in nature. However, money/materials alone is not sufficient for life. We can say that the poor do not possess this world. Likewise, the uncompassionate do not inhabit the other world.

Questions that I ask to the kid
Who can live in this world? Who doesn't have place in the other world?

2 comments: