ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

குறள் 228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஈத்து - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

உவக்கும் -  உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல்

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

அறியார்கொல் -  அறிய மாட்டார்கள்; அறியாதவர்கள்

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை

வைத்து - வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு
இழக்கும் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல்.

வன்கண் - மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை.
வன்கணவர் - கொடுமையானவர்; அருளற்றவர்

முழுப்பொருள்
பிறருக்கு கொடுப்பதால் (கொடுத்து உதவுவதால்) ஒருவர் மகிழும் இன்பத்தை அனுபவித்தால் தான் உணரமுடியும். அதை பெறுபவரும் இன்பம் அடைகிறார். ஆனால் கொடுப்பதில் இருக்கும் இன்பத்தை அறியாத பேதைகள் தன்னிடம் இருக்கும் (நிலையில்லா) உடைமைகளை பொருட்செல்வத்தை தனது தனது என்று பிறருக்கு கொடுக்காது பேணிப்  பாதுகாக்கின்றவர் மிக கொடுமையானவர். அவர் பின்பு ஒரு நாள் எவரிடமோஅச்செல்வத்தை இழந்து வேதனை அடைவார். பிறருக்கு கொடுத்து உதவாதவருக்கு அருள் கிடையாது. 

கொடுக்காததனால் ஒருவர் செல்வத்தை இழப்பர் என்று கூறியுள்ளார் திருவள்ளுவர். ஆனால் கொடுப்பதனால் செல்வத்தை இழப்பர் என்று கூறவில்லை ஏனெனில் ஈகை அளிப்பவர்களுக்கு அருள் பெருகும். அதனால் செல்வமும் பெருகும் அவ்வருளும் அச்செல்வத்தை காக்கும் என்றும் நாம் உணரலாம்.
மூன்று செய்திகளை இக்குறள் சொல்கிறது.  
1) ஈகை அளிப்பது உவகையும், மனநிறைவையும் அளிக்கும். 
2) ஈகை குணம் இல்லாதவர் மனத்தளவில் வறியர். 
3) அச்செல்வம் இருப்பதினால், மகிழ்ச்சியில்லை. மாறாகக், குறையக்கூடாதே, களவாடப்படக்கூடாதே என்னும் கவலைதான் எஞ்சும். கவலை ஒரு நோய். பின்பு தங்கள் செல்வத்தை முறையில்லா வழிகளிலோ அல்லது களவாடப்பட்டோ இழப்பர். அது அவர்களுக்கு நோயை தரும். ஆதலால் செல்வதை பிறருக்கு கொடுக்காது கட்டிக்காப்பது என்பது நோயை கட்டிக்காப்பது போல் ஆகும். 

ஐசக் நியூட்டன் கூறிய “ஒவ்வொரு வினைக்கும், அதே அளவிலான ஓர் எதிர் வினை உள்ளது” என்பது ஓர் இயற்பியல் விதி மட்டுமல்ல. இந்த வாழ்வின், நாம் இருக்கும் பிரபஞ்சத்தின் அடிப்படை விதி! நாம் கொடுப்பதால், அதே அல்லது அதைவிடப் பல மடங்கு நாம் திரும்பப் பெறுகிறோம். நாம் மற்றவர்களுக்கு உதவினால், நமக்கு உதவி தேவையான சமயத்தில் கேட்காமலேயே கிடைக்கிறது! இதை நாம் அனுபவபூர்வமாக உணரலாம். 

கிணற்று நீர் இறைக்க இறைக்க மேலும் மேலும் ஊறும் அல்லவா? அதுபோல, கொடுப்பவர்களுக்கு மேலும் மேலும் செல்வங்கள் வந்து குவியும்.

நூறு ரூபாய்க்கு தானம் செய்து விட்டு, “இதோ பார், நான் தானம் செய்து விட்டேன்” என்று ஐநூறு ரூபாய்க்கு விளம்பரம் செய்யக் கூடாது. “அரை கொத்தரிசி அன்ன தானம், விடிய விடிய மேள தாளம்” என்றொரு பழமொழி உண்டு!

அமெரிக்காவைச் சேர்ந்த சக் ஃபீனீ(Chuck Feeney) என்னும் தொழிலதிபர் தன்னுடைய 6 பில்லியன் வருமானத்தில் 99% அளவு தானமாக அளித்துள்ளார்! மிகவும் எளிமையாக வாழும் முறையைக் கொண்ட இவர், “மற்றவர்களுக்கு உதவி செய்யவே நமது செல்வம் பயன்பட வேண்டும். இந்த எண்ணமே என்னிடம் எப்பொழுதும் இருந்துள்ளது.” என்கிறார். இவர் பல வருட காலமாக யாருக்கும் தெரியாமலேயே தொண்டு செய்துள்ளார். பின்னாளிலேயே இவர் தானம் செய்து வந்து கொண்டிருந்து தெரிய வந்தது. அவர் “நான் செய்யும் வேலை மற்றவர்களுக்கு உதவியாக இருக்குமானால் மட்டுமே எனக்குச் சந்தோஷமாக இருக்கும்“ என்றும் கூறுவார்!

கல்வி: “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றார் பாரதியார். கல்வி தானம் என்பது தானங்களிலேயே மிகவும் சிறந்த தானம்.
பெற்றுக் கொள்பவருக்கு அதிகரிக்கும் அதே சமயத்தில் கொடுப்பவருக்கும் கல்வி அறிவு சிறிதளவும் குறையாது!

நேரம்: வயதானவர்கள், தீராத நோய் வாய்ப்பட்டவர்கள், ஆகியவர்களுடன் பேசுவது. அவர்கள் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பது போன்று நமது நேரத்தை மற்றவர்களுக்கு உபயோகமாகச் செலவிடலாம்.

உணவு, உடை மற்றும் பொருள்: இவற்றை இல்லாதவர்களுக்கு வழங்கலாம்.

உடல் உழைப்பு: ராமர் பாலம் கட்ட அணில் சிறியதாக உதவி செய்த மாதிரி ஏதாவது வழியில் மற்றவர்களுக்கு உதவி செய்யலாம், கண் பார்வையற்றவர்களுக்குத் தேவையானவற்றை உடன் இருந்து கவனிக்கலாம்.

பாலம் கலியான சுந்தரம் அவர்கல் தனது கல்லூரிப் பேராசிரிய பதவியில் 35 ஆண்டுகள் சம்பாத்தித்த அனைத்தையும் ஏழைகளுக்காகச் செலவிட்டார் (மொத்தம் 30 லட்சம் ரூபாய்). குடும்பச்சொத்தில் கிடைத்த ரூபாய் 50 லட்சத்தையும் தானமாக தந்தார். அமேரிக்கா இவரை Man of the Millennium என்று விருது வழங்கி கௌரவித்தது. அப்பொழுது கிடைத்த ரூபாய் 30 கோடியையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து விட்டார்.

இத்தகைய ஈகையை இளமையிலேயே செய்ய வேண்டும். பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டால் அந்த வாய்ப்பு வராமலே போகலாம். அல்லது வயதான காலத்தில், நோய் மற்றும் முதுமையுடன் அறிவு மயக்கமும் வந்து ஈகை/தர்மம் செய்ய முடியாமல் போகலாம். அதையே திருவள்ளுவரும் கூறியுள்ளார்

எந்த உன்னதம் வாய்ப்பினும்
நீங்களே வைத்துக் 
கொண்டிராதீர்கள்
உடனே யாரிடமாவது சேர்த்துவிடுங்கள்.
அதுவே அதி உன்னதமானது
----- வண்ணதாசன்

 “ஈயார் தேட்டை தீயார் கொள்வர்” என்று ஔவையார் சொல்லியிருப்பது போல, செல்வமிருந்தும் பிறர்கீவதற்கு மனமில்லாத கஞ்சர்களின் செல்வத்தை, பிறை களவாடிச் செல்வர், அவர்களே அறியாத வழிகளில்.

“ஈதல் இன்பம் வெஃகி” (அகநா 69:5)

சம்பந்தர் ஆக்கூர் தேவராப்பதிகத்தில், “இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்கும் தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே” என்கிறார். “செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எநிநே தப்புந பலவே” என்கிறது புறநானூற்றுப் பாடலொன்று (189:7-8). “கொன்னே வழங்கான் பொருள்காத்திருப்பானேல் அஆ இழந்தான் என்றெண்ணப்படும்” (நாலடியார் 9), “கொடாஅது வைத்தீட்டினார் இழப்பர்” (நாலடியார் 10) என்ற நாலடியார் பாடல்களும் இக்குறளின் கருத்தையொட்டியன.

"பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் (குறள் 88)" என்றும் திருவள்ளுவர் விருந்தோம்பல் அதிகாரத்தில் கூறியிருந்தார். 
 
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் - வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ! (உவக்கும் என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம் என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சியைக் கண்டறியாரோ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக்கின்ற வன்கண்ணர். இஃது இடார் இழப்பரென்றது.

மு.வரதராசனார் உரை
தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

சாலமன் பாப்பையா உரை
இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?.

English Meaning - As I taught a kid - Rajesh
Sharing and giving our wealth to others in various forms will give us happiness / fulfillment in life. A person can realize it only by giving. But the selfish / self centric people who protect their money will not know the real fulfillment gained by giving. These selfish people who protect their money saying "mine", will loose their wealth in some other form. These selfish people are cruel people. Because this excessive amount of wealth actually doesn't belong to them. They had received it more in the name of profits, salary, from ancestors etc which actually belonged to the people

Questions that I ask to the kid
Who will loose everything that will have?
Who is a cruel person?

No comments:

Post a Comment