இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

குறள் 229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் 
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]

பொருள்
இரத்தலின் - இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இன்னாது - தீது; துன்பு

மன்ற - maṉṟa   perh. மன்னு-. adv. 1.Clearly; தெளிவாக. (தொல். சொல். 267.) 2.Certainly; நிச்சயமாக. சென்று நின்றோர்க்குந்தோன்று மன்ற (புறநா. 114). 3. Abundantly,plentifully; மிக. மன்ற வவுணர் வருத்திட (கந்தபு.தேவ. போற். 6).--part. An expletive; ஓர் அசைச்சொல். (யாழ். அக.); maṉṟa   s. certainty, தேற்றம்; 2. abundance, மிகுதி.; ஓர்அசைச்சொல்; உறுதியாக; தெளிவாக; மிக

நிரப்பிய - நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச்சூழப்போடும்நெல்; மங்கலக் குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி.

தாமே - தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

தமி - தனிமை; ஒப்பின்மை; கதியின்மை; இரவு
தமியர் -தமி-த்தல் - tami-   11 v. intr. தமி¹. Tobe alone, lonely; தனியாதல். நூறுசெறுவாயினுந்தமித்துப்புக் குணினே (புறநா. 184, 3)., தண்டித்தல் என் குற்றத்தைப் பார்த்துத்தமிக்க நினைத்தாராகில் (ஈடு, 1, 4, 7).  

உணல் -உண்ணல் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

முழுப்பொருள்
தான் ஈன்ற செல்வத்தையும் தன்னிடம் இருக்கும் செல்வத்தையும் பிறருக்கு கொடுத்து உதவாது தனது தனது என்று தானே தனிமையில் உண்ணுவதை போல உண்ணுகிறவர் தன் செல்வத்தை தனக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டு பாதுக்காத்துக்கொள்கிறவர் மிகவும் இழிவானவர். அவருடைய இச்செயல் பிறரிடம் இரத்தலை விட தீயது/துன்பமானது. வறுமையில் யாசிப்பவரைவிட துன்பமானது.  

அப்படியென்றால் இரத்தல் தீதா? ஆம் இரத்தல்(யாசித்தல்) தீது ஏனெனில் இரத்தல் தீதில்லை என்றால் எல்லோரும் இரந்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் தான் கொடுத்தலை உயர்த்தி இரத்தலை இகழ்கிறார்கள். கொடுப்பவர்கள் எண்ணிக்கைஉயரும் வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையும். இது லட்சியவாதம். யதார்த்தம் வேறு. அதனால் தான்  இரத்தல் முழுவதுமாக தீதில்லை. இரத்தலும் இன்பம் என்று இரவு அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ளார். 

“விருந்து புறத்திருக்கக்” என்னும் குறளிலும் வள்ளுவர் சொல்லியிருப்பார். விருந்தோம்பும் பண்பினர், செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருக்கும் தகைமையினர். அது அவர்களிந் ஈகைப் பண்புமாம்.

புறநானூற்றுப் பாடல் வரி(182:3), “தமியர் உண்டலும் இலரே” என்பதிலிருந்து, தனித்திருந்து உண்ணாததைச் சிறப்பாகச் சொல்லலை அறியலாம். பதிற்றுப்பத்துப் (38-13) பாடலொன்று, தனியாக நுகர்வோம் என்ற எண்ணம் எழாமல், பிறரோடு பகிர்ந்து உண்ணும் வேட்கை கெடாமல் நுகரக்கொடுத்த சேரமானது வள்ளமன்மைப் பற்றி இவ்வாறு கூறுகிறது.
“வசையில் செல்வ வான வரம்ப
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்
தருகென விழையாத் தாவினெஞ் சத்துப்
பகுத்தூண் டொகுத்த வாண்மைப்
பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே”


“என்னை இரவூக்கும் இன்னா இடும்பைசெய்தாள்” (கலி.141:13-4)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நிரப்பிய தாமே தமியர் உணல் - பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல் இரத்தலின் இன்னாது மன்ற - ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக. (பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்: தேடின உணவைத் தாமே தமியராயிருந் துண்டல். தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.

மு.வரதராசனார் உரை
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

No comments:

Post a Comment