நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

குறள் 149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை]

பொருள்
நலக்கு - நலக்கு-தல் - nalakku-   5 v. intr. prob. நலம்.To do good; நன்மைபயத்தல். உயிர்க்குயிராய்நலக்கு மிறை (திருவானைக். புராணவா. 41).

உரியார் - உரி - உரி-மை கொண்டாடுபவர்

யார் - யாவர்

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்

நாமநீர் - அச்சத்தைத் தரும் கடல்; விந்தைகள் பல நிறைந்த/சூழ்ந்த பெருங்கடல் 

வைப்பில் - வைப்பு - வைக்கை; பாதுகாப்புநிதி; புதையல்; இடம்; நிலப்பகுதி; ஊர்; உலகம்; செயற்கையானது; செயற்கைச்சரக்கு; வைப்பாட்டி; கலிப்பாவகையின்இறுதியுறுப்பு.

பிறற்கு - பிறர் - அயலார்; மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

உரியாள் - உரியவள்; உரிமையானவள் 

தோள் - புயம்; கை; தொளை

தோய்தல் - முழுகுதல்; நனைதல்; நிலத்துப்படிதல்; செறிதல்; அணைதல்; உறைதல்; கலத்தல்; பொருத்துதல்; முகத்தல்; கிட்டுதல்; ஒத்தல்; அகப்படுதல்; நட்டல்; துவைச்சலிடுதல்.

தோயாதார் - அணைக்காதர் ; முழுகாதார் 

முழுப்பொருள்
இல்லறத்தில் கணவன் மனைவி உறவென்பது அடிவேர். ஆதலால் அவ்வேரினை தோண்டுவதோ அறுப்பதோ மாபெரும் குற்றமாகும். அதனால் தான் பிறனில் விழையாமை அதிகாரத்தை திருவள்ளுவர் வைத்தார்.

“நாம்” என்ற சொல் அச்சத்தைக் குறிப்பதால் பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் “நாமநீர்” என்பதற்கு அச்சத்தைத் தரும் கடல் என்று பொருள் செய்திருக்கிறார்கள். “நாமம்” என்றால் “வியப்பு”, ”இணக்கம்”, “ஐயம்”, “கோபம்”, “நிச்சயம்”, “நிந்தை”, “நினைப்பு” போன்ற பலவிதமாகப் பொருள் கொள்ளலாம். இவற்றுள் “வியப்பு” என்கிற சொல் பொருந்திவருகிறது. கடலானது பல வியத்தகு பரிமாணங்களையும், செல்வங்களையும் தன்னகத்தே கொண்டது. கடல் என்பது கடப்பதற்கு அரியது என்கிற அச்சத்தைத் தரக்கூடியதுதான்.

நாம் வாழ்கிற இந்த பூமி பெருங்கடலினால் சூழப்பட்டு உள்ளது. அக்கடல் அதனுடைய சமநிலையை தவறினால் இவ்வுலகத்தில் உள்ள எல்லோரும் அழிய நேரிடும். ஆனால் அவ்வச்சத்துக்காக மனிதன் ஒருநாளும் தன்னுடைய பயணத்தை நிறுத்தியதிலை, தேடலை மூடவுமில்லை. 

வாழ்க்கைக் கடலைப்போல கடினமான, அச்சம் தரும் அபாயங்களை உள்ளடக்கியது, கடப்பதற்கு பல சவால்களை, தவறான தூண்டுதல்களை கொண்டது, அதிலும் பிறன்மனையைக் கவர்ந்தடைதல் போன்ற பாவங்களில் மனிதனை செலுத்தக்கூடியது. அதனால் அச்சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டு, பிறர் மனைவியை நினைக்காமல், பிறர் மனைவியின் தோள் சேராமல், ஒழுக்கம் பிறழாமல் நடக்கும் மனிதனுக்கு, எல்லா நன்மைகளும் உண்டு.. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நாம நீர் வைப்பின் - அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து; நலக்கு உரியார் யார் எனின் - எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின், பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார். (அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர்' என்றார். 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக்குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
நலத்துக்கு உரியார் யாரெனின் நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார். நலக்குரியார்- விரும்புதற்குரியார்.

மு.வரதராசனார் உரை
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே.

No comments:

Post a Comment