அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்

குறள் 147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை]

பொருள்
அறன் - அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். 
அறம் - தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல்.

இயலான்  - இயலுதல் - கூடியதாதல்; நேர்தல் பொருந்துதல் தங்குதல் செய்யப்படுதல்; அசைதல் நடத்தல் உலாவுதல் உடன்படுதல் அணுகுதல் ஒத்தல் போட்டிபோடுதல்; சித்திரமுதலியனஎழுதுதல்.

இல்வாழ்க்கை - il-vāḻkkai   n. இல்¹ +.Domestic life; the order of domestic life; இல்லறத்தில் வாழ்க்கை (குறள், 5, அதி )  ; மனையாளோடு கூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை.

இல்வாழ்வான் - இல்லறத்தோடு கூடி வாழ்பவன். il-vāḻvāṉ   n. id. +.Householder; இல்லறத்தான். இல்வாழ்வா னென்பான் (குறள், 41).  

என்பான் -  என்று சொல்பவன்; என்று சொல்லப்படுபவன்.

பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

இயலாள் - துணைவியை 

பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்ணுக்குரியகுணம்; பெண்இன்பம்; அமைதித்தன்மை; நிறை.

நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக்கண்டதலைவிதனதுஆசைப்பாடுகூறும்புறத்துறை.

நயவாதவன் -  விரும்பாதவன் 

முழுப்பொருள்
அறத்தின் இயல்புடன் பொருந்திய இல்வாழ்க்கையை வாழ்பவன் யார்? பிறர் மனைவியை விரும்பாதவன். 

எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது, ஆதலால் நான் இல்வாழ்வான் இல்லையா? இல்லை என்று என்கிறார் திருவள்ளுவர்.

எனக்கு குழந்தை பிறந்து விட்டது, ஆதலால் நான் இல்வாழ்வான் இல்லையா? இல்லை என்று என்கிறார் திருவள்ளுவர்.

நான் பிறருடன் அன்புடன் இருக்கிறேன், ஆதலால் நான் இல்வாழ்வான் இல்லையா? இல்லை என்று என்கிறார் திருவள்ளுவர்.

நான் விருந்தோம்பல் பேணுகிறேன், ஆதலால் நான் இல்வாழ்வான் இல்லையா? இல்லை என்று என்கிறார் திருவள்ளுவர்.

நான் இனியவை பேசுகிறேன், செய்ந்நன்றி அறிந்து கொள்கிறேன், அடக்கம் பேணுகிறேன், ஒழுக்கம் பேணுகிறேன், ஆதலால் நான் இல்வாழ்வான் இல்லையா? இல்லை என்று என்கிறார் திருவள்ளுவர்.

இல்வாழ்வான் என்பதற்கு முதல் தகுதி அடுத்தவருக்கு உரிமையான மனைவியை விரும்பாது இருப்பது. 

அறநெறிப்படி வாழ்கின்றவர்கள் பிறன்மனையை இச்சிக்கும் இழிமையைச் செய்யார் என்று கூறி, அறத்துப்பாலின் அடிக்கருத்தாக இருக்கும் அறன்வலியுறுத்தலைச் செய்கிறார் வள்ளுவர்.

ஒரு இல்வாழ்க்கையில் கணவன் மனைவியும் இரு உடலாக இருப்பினும் ஓர் உணர்வாக இருத்தல் வேண்டும். பொதுவாக மனைவி தன்னை தன்னுடைய கணவனுக்காக தான் விரும்பும் காதலனுக்காக தன்னை மாற்றிக்கொள்வாள். ஆனால் கணவன்களால் அது பெரும்பாலும் செய்யப்பட மாட்டாது. மனைவி பிரிந்து போருக்கும் வெளியூர்களில் வேலைக்கும் செல்லும் மனம் கணவர்களுக்கு உண்டு. ஆனால் பெண் அப்படி செய்வதில்லை. ஆதலால் பெண் ஒரு திருமணத்தில் அதிகம் ஈடுபாடுடன் இருக்கிறாள் மிக நுட்பமாக பொருந்தியும் இருக்கிறாள். 

மேலும், இல்லறத்தில் கணவன் மனைவி உறவென்பது அடிவேர். ஆதலால் அவ்வேரினை தோண்டுவதோ அறுப்பதோ மாபெரும் குற்றமாகும். அதனால் தான் பிறனில் விழையாமை அதிகாரத்தை திருவள்ளுவர் வைத்தார். ஆதலால் பிறரின் மனைவியை விரும்புவது, கவர நினைப்பது, அவர்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுவது, அவர்கள் வாழ்வை திசை திருப்புவது என்பது மாபெரும் குற்றமாகும். அதனை இழிச்செயலாக கருதினர். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான், பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன். (ஆன் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.).

மணக்குடவர் உரை
அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான். பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன். இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.

மு.வரதராசனார் உரை
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.

No comments:

Post a Comment