அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

குறள் 150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை] 

பொருள்
அறன் - அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். 
அறம் - தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல்.

வரைதல் - எழுதுதல்; ஓவியம்எழுதுதல்; கணித்தல்; அளவுபடுத்தல்; அடக்குதல்; விலக்குதல்; கைவிடுதல்; ஒப்புக்காணல்; அறவழியில்பொருளீட்டுதல்; தனக்குரியதாக்குதல்; திருமணஞ்செய்தல்.

வரையான் - (அறத்தை) தனக்கு உரியதாக கொள்ளாமல் 

அல்ல  - மற்ற / அறம் அல்லாதவற்றை / பாவத்தை  தீயதை  ; அறத்திற்கு புறம்பான பாவங்களைச்

செயினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

பிறன் - அயலார்; மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

வரையாள் - உரிமையானவள் 

பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்ணுக்குரியகுணம்; பெண்இன்பம்; அமைதித்தன்மை; நிறை.

நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக்கண்டதலைவிதனதுஆசைப்பாடுகூறும்புறத்துறை.

நயவாமை - விரும்பாது இருத்தல் ; பின் செல்லாது இருத்தல் 

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
ஒருவன் அறம் செய்யாது பாவம் செய்பவனாகவும் இருக்கலாம், ஆனால் பிறர் மனைவியை மனதால் நோக்காமல் இருப்பது நல்லது. பிறர் மனைவியை நோக்காது இருப்பது ஒரு நல்ல தகுதியாகும். அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக திருவள்ளுவர் அறம் செய்யாது பாவம் செய்தாலும் பரவாயில்லை பிறர் மனைவியை நோக்காதே என்றார். அதனால் அறம் செய்யக்கூடாது பாவம் செய்யலாம் என்று இல்லை.

எவ்வளவு பெரிய தகுதி உடையவராக இருப்பினும் பிறர் மனைவியை நோக்கினால் அவரை கீழே இறக்கிவிடும். அதுவே எவ்வளவு தகுதி இல்லாதவர்காக இருப்பினும் பிறர் மனைவியை நோக்காது இருந்தால் அவனுக்கு அதனால் ஒரு தனி மதிப்பு உண்டாகும். 

இல்லறத்தில் கணவன் மனைவி உறவென்பது அடிவேர். ஆதலால் அவ்வேரினை தோண்டுவதோ அறுப்பதோ மாபெரும் குற்றமாகும். அதனால் தான் பிறனில் விழையாமை அதனை செய்யாதே. அதை செய்யாது இருந்தால் மதிப்பு உண்டாகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறன் வரையான் அல்ல செயினும் - ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - அவனுக்குப் பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று. (இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன் இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும் பிறனிடத்து ஆளானவளது பெண்மையை விரும்பாமை நன்று. இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை
அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.

No comments:

Post a Comment