புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று

குறள் 966
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை 
[பொருட்பால், குடியியல், மானம்]

பொருள்
புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.

இன்று - iṉṟu   . Third person sing. neut. of இல், it is not, இல்லை. 2. An expletive, ஓரசைச்சொல். இன்றேல். If not, if wanting.  

இன்றால் - இல்லை

புத்தேள் -  புதுமை, புதியவள், தெய்வம், தேவர், வானோர், முதற்கடவுள், தேவலோகம்

நாட்டு - நிலை; சுவர்எழுப்புகையில்குறுக்கேவைக்கும்கல்.

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்

உய்யாதால் - நிறைவேறாது 

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

இகழ்வார் - இகழ்-தல் - ikaḻ-   4 v.intr. To be careless,negligent; அசாக்கிரதையாதல். பிரியாரென விகழ்ந்தேன் (திருக்கோ. 340).--tr. 1. To slight, despise;opp. to புகழ்-;அவமதித்தல். (குறள், 698.) 2. Toforget; மறத்தல் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில்(குறள், 538).  

பின் - பிறகு தான்; பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

சென்று - செல்லும்  

நிலை? - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்

மானம் - மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு; பற்று; இகழ்ச்சி; வெட்கம்; குற்றம்; வானூர்தி; கோயில்விமானம்; மண்டபம்; கத்தூரி; சவ்வாது; வானம்; ஒருதொழிற்பெயர்விகுதி; ஓர்இடைச்சொல்.

முழுப்பொருள் 
தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்பதற்காகவோ அல்லது வறுமையில் இருக்கும் பொழுது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஒருவர் தன்னை மதியாதார் அல்லது அவமதிப்போர் அல்லது இகழ்வோர் பின் வெட்கமே இல்லாமல் சென்று நிற்பார் என்றால் அவருக்கு புகழும் இல்லை தேவர்கள் வாழும் வானோர் உலகில் இடமும் இல்லை. ஏனெனில் மானம் வலிமையின் அடையாளம். மானத்தை இழந்து ஒருவர் ஒன்றை பெறுவார் என்றால் அவர் இகழ்ச்சியை தேர்ந்தெடுக்கிறார். அத்தகையவர் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எத்தகைய குற்றத்தையும் செய்யக்கூடும். 

ஆதலால் புகழும் புத்தேள் உலகமும் வேண்டுமெனில் சந்தர்ப்பவாதியாக அல்லாமல் மானத்தை காப்பாற்றிக்கொள்வது அவசியம். 

தம் மானத்தைக் காப்பவர், பசி நோயால் உடல் வற்றி எலும்புக் கூடாகி அழியும் நிலை நேர்ந்தாலும், தகுதியில்லாதார் பின்னே சென்று தமது வறுமையை எடுத்துக் கூறுவரோ? கூறமாட்டார்கள். சொல்லாமலே குறிப்பால் அறிந்துகொள்ளும் பேரறிவு உடையாரிடம் தமது துன்பத்தினைக் கூறாமலிருப்பரோ? கூறுவார்கள் என்கிறது கீழ் காணும் நாலடியார் பாடல்.

என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; – தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.  (நாலடி 292)

நன்றாகக் கஸ்தூரி மணம் கமழும் கூந்தலையுடையவளே! மானம் உடையாரது பெருமித வாழ்க்கை இப்பிறப்பிலும் நன்மையை உண்டாக்கும்; இறந்த பிறகும் புகழைத் தரும்; ஒழுக்க நெறிகள் கெடாத புண்ணியத்தால் மறுமையிலும் நன்மையை விளைவிக்கும். ஆதலால் இதன் மேன்மையை நீ உணர்வாயாக! என்கிறது கேள்வியாகக் கேட்காமல், கருத்தாகக் கூறும் மற்றுமொரு நாலடியார் பாடல்

இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது
உம்மையும் நல்ல பயத்தால்; – செம்மையின்
நானம் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண்
மான முடையார் மதிப்பு.  (நாலடி 294)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இகழ்வார்பின் சென்று நிலை - மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை; புகழ் இன்று - இவ்வுலகத்துப் புகழ் பயவாது; புத்தேள் நாட்டு உய்யாது - ஏனைப் புத்தேளுலகத்துச் செலுத்தாது; மற்று என் - இனி அவனுக்கு அது செய்வது யாது? (புகழ் பயப்பதனைப் 'புகழ்' என்றார். பயனாய இவ்விரண்டும் இன்றிக் கொன்னே மானம் கெடுகின்றது என்னை என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவை செய்தற் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இம்மைப் பயனாகிய புகழைத் தாராதாயின், மறுமைப் பயனாகிய சுவர்க்கத்துப் புகுதலில்லை ஆயின், தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது பின்னை என்ன பயனைக் கருதி? இது தம்மை இகழ்வார்மாட்டுச் சென்று நிற்றலைத் தவிர்க வென்றது.

மு.வரதராசனார் உரை
மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.

சாலமன் பாப்பையா உரை
உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?.

No comments:

Post a Comment