நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

குறள் 235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]

பொருள்
நத்தம் - இருள்; இரவு; ஆக்கம்; ஊர்; ஊரின்குடியிருப்பிடம்; மனைநிலம்; இடம்; நத்தை; சங்கு; வாழை; காண்க:எருக்கு; நத்தமாலம்; கடிகாரஊசி.

போல்  - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

கேடும் - கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

உளதாகும்  - உளதாதல் - உண்டாதல், தோன்றியிருத்தல்; இருத்தல்.

சாக்காடும் - சாக்காடு - இறப்பு; கெடுதி.

வித்தகர்க் - வித்தகன் -வியத்தகுதன்மையுடையவன்; வல்லவன்; வைரவன்; கம்மாளன்; தூதன்; இடையன்; பேரறிவாளன்.

கல்லால் - ஓர்ஆலமரம்; கல்லாலமரம்; குருக்கத்தி; பூவரசு.

அரிது - அருமை; பசுமை

முழுப்பொருள்
பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.

நிலையிலில்லாத செல்வம் தேய நிலையான புகழ் வளரக்கவும், நிலையில்லாத உடம்பை அழித்து புகழ் உடம்பை வளர்க்கவும் தெரிந்து அதன்படி நடப்பவன் (புகழை வளர்ப்பவன்) வித்தகன் ஏனெனில் அது எளிது அல்ல. செல்வமும் உடம்பும் நாம் பகட்டுக்காக அணிந்துகொள்வது. நிலையில்லாதது. ஆகவே நிலையில்லாத வற்றை கொடுத்து நிலையானவாற்றை பெறுகிறமையால் அவன் வித்தகன்.

உலகிலே வாழ்க்கையிலே தோல்வி புகழிலே வெற்றி என்பதற்கு. உதாரணம் அரிச்சந்திரன். உலகியிலிலே தோற்றுக்கொண்டு இருப்பான் புகழில் வளர்த்துக்கொண்டு இருப்பான். புகழை நிறுத்திவிட்டு இந்த பூத உடம்பை அழித்தவர்களில் தசரதனை உதாரமனாக கூறலாம். "வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் தூயவன் மைந்தனே" என்று தசரதனைப் பற்றி வாலி கூறுவதாக கம்பர் ராமாயணத்தில் கூறுகிறார். இப்படிப்பட்டவற்றை யாரால் செய்ய முடியும் என்றால் அது கெட்டிக்காரர்களால் மட்டுமே செய்ய முடியும். கெட்டிக்காரர் என்றால் வித்தகர்.

பொதுவாக சாமானியர்கள் உடம்பை பாதுக்காக்க புகழை அழிப்பார்கள். புகழை அழித்து செல்வத்தை வளர்ப்பார்கள். ஆனால் வித்தகர்கள் உடம்பை அழித்து புகழை வளர்ப்பர். இவற்றுக்கு காந்தியையும் உதாரணமாக கூறலாம். அவர் தன் உடம்பை நோன்புகளால் வருத்தி, இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தார். அவர் புகழ் வளர்ந்தது.

கோச்செங்கோட் சோழன் கதை
அக்காலத்தில் சோழ மன்னனாகிய சுபதேவனும்,அவன் பட்டத்தரசி கமலவதியும் சிதம்பரம் போய் மக்கட் பேறு கேட்டு வழிபட்டார்கள்.அதன் பின் கமலவதி கருவுற்றாள்.கருமுதிர்ந்து மகவு பெறும் வேளை வந்த போது,‘இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் சொன்னனர்கள்.அவ்வாறு ஒருநாளிகை கழித்துப் பிறப்பதற்காக அரசியை தலைகீழாக மேலே தூக்கி நிறுத்தினார்கள் என பெரிய புராணம் கூறுகிறது குறித்த வண்ணம் ஒரு நாளிகை கழித்து ஆண்குழந்தை பிறந்தது.கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன,ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு ‘என் கோச் செங்கணானனே’என அருமை தோன்ற அழைத்தார். இவனே கோச்செங்கோட் சோழர் ஆவார்.

திரிகடுகப் பாடலொன்று, ”மண்ணின்மேல் வாழ்புகழ் நட்டானும்..சாவுடம்பெய்தினார்.” என்கிறது. “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்குசுட்டாலும் வெண்மைதரும்” என்னும் பாடல் வரிகளை நினைவுகூறலாம்.

மேலும்: அஷோக் உரை

புகழின் வளர்ச்சியால் அன்றாட சராசரி வாழ்வை கெடுத்துக கொள்ளலும், சராசரி வாழ்வு முடிந்து மரணமடையும்போது, அத்துடன் மறைந்துவிடாமல் புகழ் ஒளி என்றென்றும் ஒளி வீசுதலும் வித்தகர்களுக்கு மட்டுமே உரியது என்பது இதன் மேலோட்டமான பொருள்.

அன்றாட வாழ்வில் கவனம் செலுத்தி அதில் பெரு வெற்றி பெற்றவன், சாகும்போது ஏனைய புழுக்கள், விலங்குகள் போல மண்ணோடு மண்ணாகிறான். வித்தகர்கள் தமது, அன்றாட வாழ்வை சிதைத்துக் கொண்டாலும் அவர்களின் மரணத்துக்குப்பின் வாழ ஆரம்பிக்கின்றனர்;

ஒப்புமை
”மண்ணிமேல் வான்புகழ் நாட்டானும்
சாவா வுடம்பெய்தி நார்” (திரி 16)

“மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கள் மாயா
தேந்திய கைகொடிரந்தவ ரெந்தாய்
வீந்தவர் என்பவர் வீந்தவ ரேனும்
ஈந்தவ ரவல்ல திருந்தவர் யாரே” (கம்ப.வேளவி.30)

“பைந்தா ரெங்கள் இராமன் பத்தினி
செந்தாள் வஞ்சி திறத்தி றந்தவன்
மைந்தா வெம்பி வரம்பில் சீர்த்தியோ
டுய்ந்தா நல்ல துலந்த துண்மையோ’ (கம்ப.சம்பாதி 44)


பரிமேலழகர் உரை
நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும், உளது ஆகும் சாக்காடும் - புகழுடம்பு உளதாகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது - சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை. ('நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய் பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல்' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது; புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூதஉடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது; புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால்' அரிது என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஆக்கம்போலக் கேடும் உளதானாற்போலச் சாதலும் வல்லவற்கல்லது அரிது. இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது.

மு.வரதராசனார் உரை
புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.

பிச்சைகாரன் அவர்கள் தனது தளத்தில் இக்குறளை பற்றியும், ஜெயமோகனின் ”எண்ண எண்ணக் குறைவது” [சிறுகதை] பற்றியும் கீழ்க்கண்ட வாறு கூறியுள்ளார்

அப்போதுதான் ஜெயமோபாகனின் எண்ண எண்ணக் குறைவது கதையை படித்தேன்.

அந்த குறளுக்கும் கதைக்குமான ஒற்றுமை ஆச்சர்யப்படுத்தியது

அந்த கதையில் பல அழகான தருணங்கள். 

உதாரணமாக இந்த வரி
ஐம்பது வயதில்கூட நமக்கு எதிர்காலமே நமது மெய்யான ஆற்றல்கள் வெளிப்படும் இடம், நமது சாதனைகள் நிகழும் களம் என்று தோன்றுகிறது

வருங்காலத்தில் ஏதோ ஒரு அற்புதம் நடந்து எல்லாமே மாறப்போகிறது என்ற நம்பிக்கைதான் அனைவரையும் வாழ வைக்கிறது. 

ஆனால் விரும்பியது அனைத்தும் கிடைத்தாலும் மனதின் நிறைவின்மை மாறுவதில்லை. நிறைவு எப்போதும் எதிர்காலத்தில் எங்கோ இருக்கிறது

கடைசியில் எதற்கோ ஆசைப்பட்டு,வாழக்கையை வீணடித்த வெறுமை தோன்றுகிறது

இந்த கதையில் அந்த குறளில் வரும் வித்தகர் ஒருவரின் கடைசி நாள் காட்சி வருகிறது. சக்தி மிகுந்த இளமைப்பருவத்தில் குறிப்பிட்ட நோக்கத்துக்காக தன் ஆற்றலை செலவழிக்கிறார். ஒரு சராசரி மனிதன் பார்வையில் அவர் தன் வாழ்வை சிறுக சிறுக அழித்துக் கொள்வதாகவே தோன்றும்

அனைத்தும் நிறைவேறிய பின் அவர் எடுக்கும் முடிவு, சராசரி மனதால் தற்கொலை என்றே கருதப்படும்

எதிர்காலத்தில் மட்டுமே, எண்ணங்களாலும் கனவுகளாலும் வாழும் மக்களுக்கு வித்தகனின் வாழ்வு கிறுக்குத்தனமாக தோன்றலாம். அவனது மரணம் அதிர்ச்சி அளிக்கலாம்

எனக்கு வெகு மங்கலாகநினைவு தெரிந்த சின்ன வயதில், பேப்பரில் பெரியவர்கள் ஏதோ பரபரப்பாக படித்து,விவாதித்த காட்சி நினைவுக்கு வருகிறது.

இந்திரா காந்தியே கெஞ்சியும் கேட்க, மாட்டேங்கறார். சாப்பிட மறுக்கிறார் என கவலையுடன் பேசிக் கொண்டனர். கிழிஞ்ச சட்டையை பயன்படுத்துவது முட்டாள்தனமில்லையா. தூக்கிப்,போட்ருவோம்ல. அந்த மாதிரி வயசாகி தளரந்த உடம்ப தூக்கிப் போட்றனும்னு நினைக்கிறாரு என வினோபா பாவேயின் மரண உபவாசம் குறித்து சுருக்கமாக சொன்னார் என் தந்தை.

இந்த கதையை படிக்கையில் வினோபாவின் வாழ்வும்,மரணமும் இன்னும் துலக்கமாக புரிந்தது

No comments:

Post a Comment