பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

குறள் 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

நீங்கிப் -  நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

பொச்சா-த்தல் - poccā-   12 v. tr. 1. Toforget; மறத்தல். புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க (குறள், 719). 2. To deride, ridicule; இகழ்தல். கொடையளிக்கட் பொச்சாவார் (ஆசாரக். 67).

பொச்சாந்தார் - மறந்தவர் 

என்பர் - என்பார்கள்

அருள் -  சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

நீங்கி - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

அல்லவை - தீயவை; பயனின்மை; மற்றவை ; அல்லாதவற்றை

செய்து  - செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

ஒழுகுவார் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

முழுப்பொருள்
இல்லறவியலுக்கு அன்பு அடிப்படையாகும். துறவறவியலுக்கு அருள் அடிப்படையாகும். மற்ற உயிர்கள் மீது அருள் என்றால் கருணை என்று அர்த்தம். ஆனால் இல்லறத்தில் இருப்பவருக்கும் பொருந்தும். துறவியர்க்கு கட்டாய பண்பு. மனிதர்களுக்கு இது பொது பண்பு.

வாழ்வின் நல்வினைகள் அன்பு அருள் ஆகியவை நீங்கும் வண்ணம் அறச்செயல்கள் புரிவதில் இருந்து விலகி தீயனவற்றை பயனல்லாதவற்றை செய்யும் ஒருவர் இப்பிறவியின் பொருளான வீடுபேறில் இருந்து நீங்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டார் என்று இவ்வுலகம் கூறும்.

மூன்று விதமான துன்பங்கள் உண்டு 1) தன்னால் வருகின்ற துன்பம் 2) பிற உயிர்களால் வருகின்ற துன்பம் 3) தெய்வங்களால் வருகின்ற துன்பம்.

இவற்றை வடநூலார் “தாபத்ரயம்” என்பர். அவை ஆதியாத்மிகம், ஆதிபௌதிகம் மற்றும் ஆதிதெய்விகம் எனப்படும். பின்னாளில் இசைப்பாடல்களில் “தாபத்ரய வெயில்” என்று இவற்றை தகிக்கும் வெயில் சூட்டுக்கு இணையாக இசையாசிரியர்கள் கூட எழுதியிருக்கிறார்கள்.

இவர் முற்பிறவியில் செய்த பயனாக துன்பங்கள் அனுபவிப்பான் . அதையும் மறந்து இவன் இப்பிறவியில் அறம் செய்யாததற்கும் தீவினை செய்வதற்கும் துன்பம் அனுபவிப்பான். அருளை விட்டு நீங்குவான்.

அறிவாளிக்கும் அறிவில்லாதவனுக்கும் என்ன வித்தியாசம்? நாம் வாழ்க்கையில் கடந்து செல்கிற பொழுது ஒரு அனுபவம் ஏற்பட்டால் அவ்வனுபவத்தில் இருந்து ஒரு பாடம் படித்துக்கொள்கிறவன் அறிவாளி. அப்படி இல்லாமல் அந்த பாதையிலே திரும்ப திரும்ப ஒரே அனுபவத்தை கடந்துகொண்டு இருந்தான் என்றால் அவன் அறிவில்லாதவன் / முட்டாள். ஒரு தரம் வாழ்விலே தனது தவறால் (மனிதன் தவறு செய்வது இயல்பு. நிகழ வாய்ப்புண்டு) ஒரு பிரச்சனை வந்தால், ஆறாம் அறிவு எனும் சிந்தனை இருக்கிறது என்பதை சொல்ல ஒருவருக்கு தகுதி இல்லை. அவன் மனிதன் என்று கூற தகுதியற்றவன். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர். (உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய்தொழுகினவர் இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியுமுடையவரென்று சொல்லுவர். இது பொருளில்லையாமென்றது.

மு.வரதராசனார் உரை
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

சாலமன் பாப்பையா உரை
அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.

No comments:

Post a Comment