அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

குறள் 226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]

பொருள்
அற்றார் - பொருள்இல்லாதவர்; முனிவர்

அழி - கேடு; வைக்கோல் வைக்கோலிடும்கிராதி; கிராதி வண்டு மிகுதி வருத்தம் கழிமுகம் இரக்கம்

பசி - உணவுவேட்கை; வறுமை; தீ.

அழிபசி - மிக்கபசி

தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்.

பெறுதல்  - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
பெற்றான் - பெறுவான்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

வைப்பு - வைக்கை; பாதுகாப்புநிதி; புதையல்; இடம்; நிலப்பகுதி; ஊர்; உலகம்; செயற்கையானது; செயற்கைச்சரக்கு; வைப்பாட்டி; கலிப்பாவகையின்இறுதியுறுப்பு.

உழி - இடம்; பக்கம்; ஏழனுருபு; பொழுது; அளவு.

முழுப்பொருள்
கடும் பசியில் இருப்பவனுக்கு நீ உணவளித்து அவனுடைய பசியை ஆற்றுவாயானால் நீ எங்கு போனாலும் உன்னுடன் இருக்கும் செல்வமாக அது அமையும்.

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று வள்ளலார் கூறுகிறார். ஆதலால் பிறர் உயிர்கள் பசியால் வாடும் பொழுது அவற்றின் பசியை போக்குவது சிறப்பு. கடமையாகும்.

வைப்பு என்றால் பாதுகாப்பு நிதி என்பது. சேமிப்பு எனலாம். ஒருவன் பசியை தீர்த்து வைத்தால் அதனுடைய பலன் (தருமம், புண்ணியம்) வைப்பாக அமைந்து தக்க நேரத்தில் காத்து உதவும்.  (தருமம் தலை காக்கும்).

பசியின் கொடுமை, உடம்பை மட்டுமல்லாது, மானம், வெட்கம், நல்ல பண்புகளில் உள்ள நம்பிக்கை போன்றவற்றை அழித்துவிடும். வயிற்றுக்கு இல்லாத கொடுமைக்கு திருடச் செல்பவர்கள் உண்டு. பெரும்பாலும் ஆரம்ப நிலைத் திருடர்கள் தங்கள் வயிற்றுக்கோ, தங்கள் குடும்பத்தினரின் வயிற்றுப் பசிக்காகவோதான் திருட ஆரம்பிக்கிறார்கள். அத்தகைய பசியையே “அழிபசி” என்று குறிக்கிறோம். அது கொண்டவரை அழித்து, சமூகத்தினரையும் அழித்துவிடும். மணிமேகலையில் வரும் கீழ்கண்ட வரிகளைப் படித்தால் பசிப்பிணி என்பது எதையெல்லாம் செய்யும் என்கிற பட்டியலே கிடைக்கும். இதேயே பரிமேலழகர் “மிக்க பசி” என்று அதிகத்தன்மையைக் குறிப்பதாகக் கூறியுள்ளார்.

“குடிப்பிறப்பழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்வி பெரும்புணை விழூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூணணி மாதரோடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி”  (மணிமேகலை: 11:76-80)

பசிப்பிணி என்பதையே வள்ளுவர் அடுத்த குறளில் “பசியென்னும் தீப்பிணி என்பார். நோய் மட்டுமல்ல, தன்னையும், பிறரையும் அழிக்கவல்ல தீயவை தரும் நோய் என்பார் வள்ளுவர்.

ஔவையார் கூறிய பசி வந்திட பறந்து போகும் பத்தாவன:
மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”அழிபசி வருத்தம்” (சிறுபாண் 140)

“வைத்ததனை வைப்பென் றுணரற்க தாமதனைத்
துய்த்து வழங்கி யிருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி யறம்செய்யின் அஃதன்றோ
எய்ப்பினில் வைப்பென் பது” (பழமொழி 37)

பரிமேலழகர் உரை
அற்றார் அழிபசி தீர்த்தல் - வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க, பொருள் பெற்றான் ஒருவன் வைப்புழி அஃது - பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான். (எல்லா நன்மைகளும் அழிய வருதலின், 'அழி பசி' என்றார். 'அறம் நோக்கி' என்பது எஞ்சி நின்றது. 'அற்றார் அழிபசி தீர்த்த' பொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
பொருளற்றாராது குணங்களையழிக்கும் பசியைப் போக்குக. அது செய்ய ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றானாம். இது பகுத்துண்ணப் பொருளழியாது என்றது.

மு.வரதராசனார் உரை
வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

4 comments:

  1. முனிவர் பொருள் அற்றவர் என்ற கூற்று பொருளற்றது!

    ReplyDelete
    Replies
    1. https://agarathi.com/word/%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d இல் காண்க அற்றார் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள். ஒன்று முனிவர். மற்றொன்று பொருள் இல்லாதவர். A=B, A=C in dictionaries doesn't mean B=C. I hope you have that understanding ... Just like Cool. You did a cool stuff doesn't mean I did ice-cream. He/She is hot doesn't mean that they are more than some 200deg celcius

      Delete
  2. மேற்படி குறளுக்கு தற்கால உரையாக வைப்புழி என்றதற்குபசித்தவர் வயிறு என்று கூறலாமா

    ReplyDelete
  3. வைப்பு உழி - வைக்கும் இடம். நாம் பசியைத்தான் ஆற்றுகிறோம். வைற்றில் எல்லாம் விறைவாக செரிமானம் ஆகிவிடும்.

    ReplyDelete