ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

குறள் 1284
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

ஊடற்கண் - ஊடல் செய்ய நினைத்தேன்

செலுத்தல் - செல்¹(லு)-தல் 
-> To be effective; to have influence;பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி,115).
-> To last, endure, exist; நிலைத்திருத்தல்.செல்லாதவ் விலங்கை வேந்தர்க் கரசென (கம்பரா.இந்திரசித். 56)
எண்பொருளவாகச் செலச்சொல்லி -> Communicating your thoughts in language easy to be understood; சொல்ல வேண்டிய சிந்தனைகளை / கற்றவற்றை எளிமையாக மனதில் புரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லுதல்.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

சென்றேன்மன் -  காண்பதற்கு சென்றேன்

தோழி - பாங்கி; பணிசெய்பவள்; செவிலித்தாயின்மகள்; தேவி; அரக்கு.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

மறந்து - மற-த்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).

கூடல் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு.

கூடற்கண் - கூடவே / புணரவே

சென்றது - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

என் - என்னுடைய

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்துச் சென்றுவிட்டிருக்கிறான். அப்பொழுது தலைவியும் தோழியும் உரையாடிக்கொண்டிருக்க கூடும். அப்பொழுது தலைவி விளையாட்டாகவோ அல்லது திடமாகவோ இப்படிச் சொல்லியிருக்க கூடும் "தலைவன் திரும்பிவந்தால் அவனுடன் ஊடல் புரிவேன் (சண்டைப்போடுவேன்) என்று".

ஆனால் தலைவன் திரும்பிவந்தவுடன் உண்மையில் என்ன நடந்தது என்று தோழியிடம் கூறுகிறாள் தலைவி. "அவருடன் ஊடல் செய்ய நினைத்து அவரிடம் சென்றேன். ஆனால் அவரை கண்டவுடன் நான் நினைத்த எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். அவருடன் கூடு என் நெஞ்சம் சொன்னபடி கூடி மகிழ்ந்தேன்". என் அறிவை விட நெஞ்சமே வென்றது. பொய் பிணக்கை விட உண்மை அன்பே வென்றது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) தோழி - தோழி; ஊடற்கண் சென்றேன் - காதலரைக் காணாமுன் அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது - கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது. (சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன்என் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை' என்பதாம்.).

மணக்குடவர் உரை
தோழி! யான் ஊடலைக் கருதிச்சென்றேன். அவனைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு. இது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

சாலமன் பாப்பையா உரை
தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது.

No comments:

Post a Comment