இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

குறள் 1294
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]

பொருள்
இனி - இப்பொழுது; இனிமேல் பின்பு இப்பால் இதுமுதல்

அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

நின் - உனது

நின்னொடு - உன்னோடு

சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

சூழ்வார் - சூழ்வோர் - அமைச்சர்; உறவினர்; சூழ்ந்துநிற்பவர்.

யார் - யாவர்; காண்க:நத்தைச்சூரி

நெஞ்சே! - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

துனி - வெறுப்பு; சினம்; புலவிநீட்டம்; பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

துவ்வு-தல் - tuvvu-   perh. 5 v. து-.tr. To eat, enjoy; நுகர்தல் (திவா.) துவ்வா நறவின் சாயினத்தானே (பதிற்றுப். 60, 12).--intr. Tobe strong; வலியுறுதல். ஆன்ற துணையிலன் றான்றுவ்வான் (குறள், 862).

துவ்வாய் - நுகரமாட்டாய்

காண் - காட்சி; அழகு; காணுதல்; முன்னிலையில்வரும்ஒர்உரையசை.

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்து சென்று இருக்கிறான். அப்பொழுது பல நேரங்களில் நெஞ்சிடம் புலம்பும் பொழுது சொல்கிறாள் "அவர் திரும்பிவந்தால் எல்லாவற்றையும மறந்து உடனே கூட மாட்டேன். அவருடன் ஊடல் புரிந்து அவர் செய்த (பிரிவெனும்) தவறை நான் பட்ட (பிரிவால்) துன்பத்தை அவருக்கு விளக்குவேன். அவர் அதை உணர்ந்து என்னைவிட்டு பிரியமாட்டேன் என்று கருதவேண்டும்". இது எல்லாவற்றிற்கும் "ஆம்", "ஆம்" என்று கூறி கேட்டது அவள் நெஞ்சம்.

ஆனால் தலைவன் வந்த பிறகு, அவள் முன்பு பேசியதற்கு மாறாக, அவள் நெஞ்சம் பிரிவின் துன்பத்தையெல்லாம் மறந்து அவருடன் இன்பத்தை நுகர உடனே சென்றுவிட்டது. ஆதலால் நெஞ்சத்திடம் கூறுகிறாள் "இனி உன்னிடம் முன்புபோல் வந்து புலம்ப மாட்டேன் ஏனெனில் நீ நான் சொன்ன எதையும் செய்யவில்லை என்னையும் செய்யவிடவில்லை". ஊடலுக்கு எதிரான விழைவை எனக்கு தந்து உடனே கூட வழி செய்துவிட்டாய். தன்னுடைய தவறுகளை நெஞ்சத்தின் மேல் கடத்துகிறாள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; துனி செய்து மற்றுத் துவ்வாய் - நீ அவரைக் கண்ட பொழுதே இன்பம் நுகரக் கருதுவதல்லது அவர் தவறு நோக்கி, முன் புலவியை உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய்; இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் - ஆகலான், இனி அப்பெற்றிப்பட்டவற்றை நின்னொடு எண்ணுவார் யார்? யான் அது செய்யேன். (அப்பெற்றிப்பட்டன - புலக்கும் திறங்கள். 'காண' என்பது உரையசை. 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து, பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினாள்.).

மணக்குடவர் உரை
நெஞ்சே! நீ புலவியை நீளச்செய்து பின்னை நுகரமாட்டாய்: ஆதலான் இனி அப்பெற்றிப்பட்ட எண்ணத்தை நின்னோடு எண்ணுவார் யார்? இல்லை.

மு.வரதராசனார் உரை
நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.

No comments:

Post a Comment