பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி

குறள் 1276
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து
[காமத்துப்பால், கற்பியல், குறிப்பறிவுறுத்தல்]

பொருள்
பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத.

பெரிது - peritu   id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27).

ஆற்றிப்ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

பெட்பக் - s. desire, lust, ஆசை; peṭpa   adv. பெள்-. Much, exceedingly; மிக. பெட்ப நகுகின்றது (சீவக. 1662). peṭpa   adv. பெள்-. Much, exceedingly; மிக. பெட்ப நகுகின்றது (சீவக. 1662).

பெட்பு - பெருமை; விருப்பம்; அன்பு; தன்மை; பேணுகை; பாதுகாப்பு.

கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்.

அரிது - அருமை; பசுமை; That which is difficult, unattainable, rare, precious; அருமையானது.

ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று

சூழ்வது - சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது

முழுப்பொருள்
என் தலைவன் எனக்கு பொறுக்கமுடியாத துன்பத்தை பிரிவாக தந்தார். அத்தகையவர் இப்பொழுது மிகவும் ஆசையாக என்னுடன் கூடுகிறார் /புணருகிறார். இம்மகிழ்ச்சி அருமையானதாக இருந்தாலும் இதனை நான் எவ்வாறு எடுத்துக்கொள்வது? ஏனெனில் அவர் என்னைவிட்டு மறுபடியும் பிரிந்து செல்லக்கூடும் என்பதற்காக எனக்கு இம்மகிழ்ச்சியை அதிகமாக தருகிறார் என்று அர்த்தமாகுமா?

அதாவது இக்கூடல் பிரிவிற்கான ஒரு குறிப்பா? அப்படியெனில் அவருக்கு (தலைவனுக்கு) பிரிந்து செல்லும் எண்ணம் கூடலின் பின் இருப்பதால் இங்கே கூடல் (அன்பின் வெளிப்பாடானாலும்) மிகுந்த அன்பின்மையின் வெளிப்பாடாகவே தெரிகிறது எனக்கு/தலைவிக்கு.  என்னை பிரிதல் அன்பின்மையின் வெளிப்பாடு. கூடல் பின்வரும் பிரிவின் குறிப்பானால் பின்பு கூடல் அன்பின்மையின் வெளிப்பாடாகும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து. (பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவுடைத்து. இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.

No comments:

Post a Comment