வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

குறள் 674
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]

பொருள் 
வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

என்ற - eṉṟa   part. என்-. An adjectivalexpression signifying comparison; ஓர் உவமவாய்பாடு. வாயென்ற பவளம் (தொல். பொ 286, உரை; eṉṟa   a. -NNa, -nna -ண்ண, -ன்ன b. -nkra -ங்கற a. said above (pt.) b. called (pt.)

இரண்டின் - ஆகிய இரண்டு

எச்சம் - காரியம், எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலே வரும் குறை: குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில் பிண்டம் என்னும் எட்டுவகை ஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபு முற்று எச்சங்கள் கொண்டு முடியும் பெயர் வினைகள்; பெயரெச்ச வினையெச்சங்கள்

நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

நினையுங்கால் - நினைக்கும் பொழுது

தீயெச்சம் - அவிக்கப்படாத நெருப்பின் மிச்சம்

போலத் - போன்று

தெறும் - தெறுதல் - சுடுதல்; காய்ச்சுதல்; கோபித்தல்; வருத்துதல்; தண்டஞ்செய்தல்; அழித்தல்; கொட்டுதல்; பகைத்தல்; கொல்லுதல்; தங்கல்; நெரித்தல்.

முழுப்பொருள் 
விறகு எரிந்துகொண்டு இருக்கும். அதை முழுதாக அணைக்கவில்லையென்றால் வெளியே சாம்பல் தெரியும் ஆனால் உள்ளே நெருப்பு இருக்கும். சாம்பல் இருக்கிறதே என்று கை வைத்தால் உள்ளே இருக்கும் நெருப்பு சுடும். ஆதலால் நெருப்பை முழுவதுமாக அணைக்கவேண்டும். மிச்சம் வைக்கக்கூடாது.

அதுப்போல செய்ய தொடங்கிய செயலில் முழுவதுமாக முடிக்காமல் மிச்சம் வைக்க நினைத்தாலோ அல்லது அழிக்க முற்பட்ட பகையினில் அல்லது பகைவர்களில் மிச்சம் வைக்க நினைத்தாலோ அது நமக்கு அவிக்க படாத நெருப்பின் மிச்சம் போன்று சுடும் அல்லது கொல்லும். ஏனெனில் முடிக்கப்படாத காரியம் பிற்காலத்தில் தீங்கு விளைவிக்க நேரலாம். முற்றிலும் அழிக்கப்படாத பகைவர் பின்பு வளர்ந்து நம்மை அழிக்கலாம்.

மேலும் நாம் விட்டொழிய நினைக்கும் கெட்ட பழக்கம் (உதாரணமாக சிகரேட்  /cigarette குடிப்பது) விட்டொழிந்தால் முழுவதுமாக விட்டொழுக வேண்டும். அன்றொருநாள் இன்றொருநாள் என்று அந்த பழக்கத்தை பின்பற்றினால் அது நம்மில் சமயம் பார்த்து விருட்சமாக மீண்டும் வேகமாக முளைத்தெழும். நம்மை அழிக்கும்.

சில செயல்கள் தொடங்கிய பின் நடுவிலே முடிக்கவோ அல்லது கைவிடவோ நேரும். அது காலத்தையும் சூழ்நிலையும் பொருத்ததாகும். ஆனால் இங்கு திருவள்ளுவர் அடிக்கோடு இடுவது நினையுங்கால் என்ற வார்த்தையை. காரணமின்றி சோம்பலினாலும் செருகினாலும் தொலைநோக்கு பார்வையில்லாமல் நினைத்தால் நமக்கு அழிவு வரும் என்கிறார் திருவள்ளுவர்.

இதையே ஒளவையார் "செய்வன திருந்த செய்" என்று ஆத்திச்சூடியில் கூறியிருக்கிறார்.

பாரதியார் தனது கீழ்காணும் பாடலில் ஒரு தீப்பொரியின் வலிமையை உணர்த்துகிறார். அதுபோலவே மிச்சங்கள் பெரிதாய் வளர்ந்து ஒரு காட்டை அழிப்பது போல் அழித்துவிடும்.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

மேலும் : அஷோக் உரை 

ஒப்புமை
”பணிக்குறை வருத்தம்” (குறுந்.333:5)

“கருப்பை போற்குரங் கெற்றக் கதிர்சுழல்
பொருப்பை ஒப்பவர் தாமின்று பொன்றினார்
அருப்பம் என்று பகையையும் ஆரழல்
நெருப்பை யும்இகழ்ந் தால்அது நீதியோ” (கம்ப.முதற்போர்.92)

பரிமேலழகர் உரை
வினை பகை என்ற இரண்டின் எச்சம் - செய்யத் தொடங்கிய வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் - ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப்பின் வளர்ந்து கெடுக்கும். (இனி,இக்குறை என் செய்வது? என்று இகழ்ந்தொழியற்க, முடியச் செய்க என்பதாம், பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந் திறம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வினையும் பகைமையு மென்னும் இரண்டினது ஒழிபு விசாரிக்குங்காலத்துத் தீயின் ஒழிவுபோலக் கெடுக்கும். எச்சம்- சேஷம். இது வினைசெய்யுங்கால் சிறிதொழியச் செய்தோமென்று விடலாகாதென்றது.

மு.வரதராசனார் உரை
செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).

No comments:

Post a Comment