கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

குறள் 686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது
[பொருட்பால், அமைச்சியல், தூது]

பொருள் 
கற்று - கற்கை - படித்தல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

அஞ்சுதல் - பயப்படுதல்

அஞ்சான் - அஞ்சாதவன் ; அச்சம் இல்லாதவன் ; பயம் இல்லாதவன்

செலச்சொல்லித் - செலுத்தல்
செலுத்தல் - செல்¹(லு)-தல்
-> To be effective; to have influence;பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி,115).
-> To last, endure, exist; நிலைத்திருத்தல்.செல்லாதவ் விலங்கை வேந்தர்க் கரசென (கம்பரா.இந்திரசித். 56)
எண்பொருளவாகச் செலச்சொல்லி -> Communicating your thoughts in language easy to be understood; சொல்ல வேண்டிய சிந்தனைகளை / கற்றவற்றை எளிமையாக மனதில் புரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லுதல் -

காலத்தால் - காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

அறிவதாம் - அறிதல் -  உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

தூது -  இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராச தூதர் தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூது மொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி.

முழுப்பொருள் 
கண் என்றால் அறிவு என்றும் பொருள் உண்டு என்பதை நினைவில் கொள்க. தூதருக்கு தேவையான தகுதிகள் என்ன?
1. நூல்கள் பல கற்று ஆராய்ந்து அறிவை பெற்று இருப்பது
2. பகைவரை கண்டு அஞ்சாது இருப்பது. தன் மன்னர் அல்லது அரசு கூறியதை பகைவரிடத்தில் எவ்வித அச்சமில்லாமல் கூறுவது.
3. பகைவருக்கு (பிறருக்கு) எளிதாக விளங்கும் வண்ணம் தெளிவான சொற்களை தேர்ந்தெடுத்து பிறருக்கு ஐயமற கூறுவது.
4. காலத்திற்கு சூழ்நிலைக்கு ஏற்றவற்றை அறிந்துகொள்ளுதல், வியூகங்களை அமைத்துக்கொள்ளுதல் இன்றியமையாததாகும். இது சில சமயம் பகைவரிடம் அகப்பட்டால் தப்பிக்க உதவும். மேலும் பகைவரிடத்தில் இருந்து அவர்கள் அறியாமல் அவர்களின் குறிப்பு சொற்கள் உடல்மொழி ஆகியவற்றின் மூலமும் மற்றவர்கள் மூலமும் அறிந்துக்கொண்டு அச்செய்தியை அரசிடம் கொண்டு சேர்ப்பது.

மேற்சொன்ன நான்கும் ஒரு தூதருக்கு தேவையான தகுதிகள்.

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
கற்று -நீதி நூல்களைக் கற்று; செலச்சொல்லி - தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி; கண் அஞ்சான் - அவர் செயிர்த்து நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; காலத்தால் தக்கது அறிவது தூதாம் - காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க உபாயம் அறிவானே தூதனாவான். (அவ்வுபாயம் அறிதற் பொருட்டு நீதி நூற்கல்வியும், அதனானன்றிப் பிறிதொன்றான் முடியுங்காலம் வரின் அவ்வாறு முடிக்கவேணடுதலின் காலத்தால் தக்கது அறிதலும், இலக்கணமாயின.).

மணக்குடவர் உரை
தன்னரசன் சொன்ன மாற்றத்தைச் சொல்லுங்கால் பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்றுதற்காம் உபாயத்தைக் கற்று, எவ்விடத்தினும் அஞ்சுதலின்றி மகிழ்ச்சி வருமாறு இசையச் சொல்லி நாளோடே கூடச் செய்யத் தகுவன அறிந்து சொல்ல

மு.வரதராசனார் உரை
கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.

சாலமன் பாப்பையா உரை
அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.

No comments:

Post a Comment