கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்

குறள் 663
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பொருள்
கடைக் - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

கொட்கச் - கொட்கு-தல் - koṭku-   5 v. intr. cf. kuṭ.1. To whirl round; சுழலுதல் வளிவலங் கொட்குமாதிரம் (மணி. 12, 91). 2. To move in an orbit,revolve; சூழவருதல். காலுண வாகச் சுடரொடுகொட்கும் (புறநா. 43, 3). 3. To roam, wander;திரிதல். கொடும்புலி கொட்கும்வழி (சிறுபஞ். 80). 4.To be revealed; to come to view; வெளிப்படுதல் கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை (குறள், 663). 

செய் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

தக்கது - தகுதி; தகுதியானது.

ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை

இடைக் - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு.

கொட்கின்கொட்கு-தல் - koṭku-   5 v. intr. cf. kuṭ.1. To whirl round; சுழலுதல் வளிவலங் கொட்குமாதிரம் (மணி. 12, 91). 2. To move in an orbit,revolve; சூழவருதல். காலுண வாகச் சுடரொடுகொட்கும் (புறநா. 43, 3). 3. To roam, wander;திரிதல். கொடும்புலி கொட்கும்வழி (சிறுபஞ். 80). 4.To be revealed; to come to view; வெளிப்படுதல் கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை (குறள், 663). 

எற்றுதல் - அடித்தல், புடைத்தல்; உதைத்தல்; மோதுதல்; எறிதல்; குத்துதல்; வெட்டுதல்; கொல்லுதல்; உடைத்தல்; நீக்குதல்; நூல்தெறித்தல்; இறங்குதல்; எழுப்புதல்; நீங்குதல்.

எற்றா - நீங்காத

விழுமம் - சிறப்பு; சீர்மை; தூய்மை; இடும்பை; துன்பம்

தரும் - கொடுக்கும்
தருதல் - கொடை,  v. noun. Giving, &c. See தா, v.

முழுப்பொருள்
ஒரு செயலை முடித்தபின்பு அதை பற்றி வெளியே சொல்வதோ அல்லது வெளிப்படுத்துவதோ சரியானது. அவ்வாறு இறுதிவரை செயலை பற்றி வெளிப்படவிடாமல் காப்பாற்றுவதே செயலை புரிய ஓர் தகுதியாகும்.  வலிமை சேர்க்கும். அதற்குமாறாக செயலாற்றும் பொழுதே அதனை முடிக்கும் முன்பே இடையில் அதைப்பற்றி வெளிப்படுத்தினால் அது நீங்காத துன்பத்தை தரும். ஏனெனில் இடையில் கூறினால் அதற்கு (பகைவர்களிடம் இருந்து) புதிய தடைகள்  வர வாய்ப்புகள் இருக்கலாம் அல்லது உள்ளூர் மக்களிடம் இருந்து கேள்விகள் ஆலோசனைகள் என்று குழப்பங்களும் கவனசிதறல்களும் வரலாம் அல்லது பாதி கிணறு தாண்டி விட்டோம் என்ற செருக்கும் வரலாம். இவையாவும் செயல் தோல்வியில் முடிய வழிவகும். தோல்வியால் நீங்காத துன்பம் ஏற்படும். ஆதலால் வெளியே கூறவேண்டியதில்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை - செய்யப்படும் வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் - அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும். (மறைத்துச் செய்வதாவது: அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறரறியாமலும், தான் அறிந்ததூஉம், தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களான் அவன் உய்த்துணராமலும் அடக்கிச் செய்தல். அத்திட்பம் ஆண் தன்மையான் வருதலின் 'ஆண்மை'எனப்பட்டது. எற்றா விழுமமாவன, பகைவர் முன் அறிந்து அவ்வினையை விலக்குதல், செய்வானை விலக்குதல் செய்வர்ஆகலின், அவற்றான் வருவன. விழுமம் : சாதிப்பெயர். இவைஇரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
ஒரு வினையைத் தொடங்கினால் முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மையாவது; இடையிலே மீள்வானாயின் அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும். சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று. இது தொடங்கின வினையை முடியச் செய்யவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

No comments:

Post a Comment