கல்லாதான் ஒட்பம் கழியநன்

குறள் 404
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்
[பொருட்பால், அரசியல், கல்லாமை]

பொருள்
கல்லாதான் - கல்வி கற்காதவன் 

ஒட்பம் - அறிவு; அழகு; நன்மை; மேன்மை.

கழிய - மிகவும்

கழிதல் - மிகுதல்; கடந்துபோதல்; நடத்தல்; குறைபடுதல்; அழிதல்; ஒழிதல்; சாதல்; முடிவடைதல்; வருந்துதல்; மலம்முதலியனவெளிப்படுதல்; அச்சங்கொள்ளுதல்.

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

கொள்ளார் - மனம்பொறாதவர்; பகைவர்.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

உடையார் - உடையவர்கள்

முழுப்பொருள்
பல உரைகள் ஒட்பம் என்ற சொல்லுக்கு அறிவு என்ற அர்த்தத்திலேயே பொருள் கூறுகின்றன. ஆனால் ஒட்பம் என்ற சொல்லுக்கு அழகு என்ற சொல்லும் பொருந்தும். ஆதலால் கல்விகற்காதவர்கள் எவ்வளவு மிகுதியாக அலங்காரம் / ஒப்பனை / பாவனை/ ஆடம்பரம் செய்தாலும் அது நன்றாக இருந்தாலும் அவர்களை கற்றோர் சான்றோர் ஏற்கமாட்டார்கள். 

படிக்காதவர்கள் உலகத்தில் பலர் உள்ளனர். ஆனால் அதில் சிலர் தங்களின் செயல்கள் மூலம் நாட்டிற்கு தொண்டாற்றினவர்கள். செயல் வீரர் அவர்கள். அவர்களை ஏற்காமல் இருக்க முடியாது. திருவள்ளுவர் அவர்களை நிராகரிக்க மாட்டார். இன்றைய காலகட்டத்தில் கல்விகற்காமலும் தொண்டாற்றிய பல கர்மவீரர்களுக்கு சாதனையாளர் விருது அளித்து கௌரவித்து உள்ளது சான்றோர் உலகம். ஆதலால் ஒட்பம் என்ற சொல் அழகு ஆடம்பரம் என்ற அர்த்தத்திலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். 

பழமொழிப்பாடல் வரிகள் ஒன்று, 
“அறிவில்லான் மெய்த்தலைப் பாடு பிறிதில்லை
நாவற்கீழ்ப் பெற்ற கனி” (பழமொழி 138)
“கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால்” (பழமொழி 367) 
என்கிறது. 

சிறுபஞ்சமூலப்பாடல் (4) ஒன்று, 
“கல்லாதான் தான்காணும் நுட்பமும்… 
நல்லார்கள் கேட்பின் நகை” என்கிறது.


மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும், அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார்.
(ஒண்மை: அறிவுடைமை, அது நன்றாகாது, ஆயிற்றாயினும் ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற நூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.).

மணக்குடவர் உரை
கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும் அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார். ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது.

மு.வரதராசனார் உரை
கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

No comments:

Post a Comment