செவுக்குண வில்லாத போழ்து

குறள் 412
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
[பொருட்பால், அரசியல், கேள்வி]

பொருள்
செவிக்கு - காது; கேட்கை/கேள்வி; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை

உணவு - சோறு; உணவுப்பொருள்; மழை

இல்லாத - இல்லை, வறுமை
இல்லாத்தனம் - illā-t-taṉam   * n. இல்² +.Poverty, destitution; தரித்திரம்

போழ்து - பொழுது, காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன்

சிறிது - அற்பம், சிறு-மை. That whichis small, trifling or insignificant; அற்பமானது.

வயிற்றுக்கும்  - (stomach)உதரம்; கருப்பப்பை; நடுவிடம்; உள்ளிடம்; மனம்.

ஈயப்படும் -  ஈ - (வி)ஈயென்ஏவல்; பகிர்ந்துகொடு; தா, சொரி

முழுப்பொருள்
அறிவானவற்றை செவிகள் கேட்டுக்கொண்டு இருப்பதே எக்காலமும் ஒருவரின் செயலாக இருக்க வேண்டும். ஆதலால் செவிக்கு(கேள்விக்கு) உணவு இல்லாத நேரத்தில் சிறிது அளவு உணவு இந்த வயிற்றுக்கு கொடுக்கலாம் என்கிறார் திருவள்ளுவர். "வயிற்றுக்கும் ஈயப்படும்" என்று மட்டும் கூறி இருக்கலாம். ஆனால் "சிறிது" என்று கூறியதால் இங்கே உணவு எடுத்துக்கொள்ளவேண்டிய (சிறு) அளவு மற்றும் உணவுக்காக நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய (சிறு) காலம் ஆகியவற்றை திருவள்ளுவர் கூறுவதையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். 

மேலும் ஒருவருக்கு கற்று உணர்ந்து நடந்து சான்றோன் ஆவதே செயலாகும். வீணாக தேவைக்கு அதிக உணவை உண்டு சோம்பலை வளர்த்து மனதை மற்ற இச்சைகளுக்கு அடிமையாக்குவது சிறுமையாகும். 

மேலும்
வயிற்றுக்கு ஈயப்படும் உணவு “சிறிது” என்றது, அதிகமாயின், நோயும், காமமும் பெருகுதலால், என்கிறார் பரிமேலழகர். காமம் என்பது “இச்சை” என்பதனால், உடம்பை வளர்க்க இச்சைகளே வளரும், அறிவு வளராது என்பதனால் “சிறிது” என்ற சொல் அழுத்தம் பெறுகிறது.
ஆனால் திருமூலர், உடம்பைப் பேணுதலினை முக்கியமாகச் சொல்லுகிற இப்பாடலைப் பார்ப்போம்.
‘‘உடம்பாற் அழியின் உயிரால் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!
இப்பாடலில் “சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுதவேண்டும்” என்கிற பழமொழிக்கேற்ப, உடம்பைப் பேணுதலை வலியுறுத்துகிறார்.  உடம்பால் அழியின், உயிரால் அழிந்து, திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்” என்று சொல்லி, கூடவே உடம்பை வளர்பது ஒரு உபாயம் என்கிறார்.  அந்த உபாயம்தான் வள்ளுவர் “சிறிது” என்பதோ? மற்றொரு பழமொழி, “உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக்கூட ஆகாது, சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்” என்று கூறுவதிலிருந்து, உடம்பை பெருக்காமால் திட்டமாக வைத்துக்கொள்வதே நல்லது தெரிகிறது

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செவிக்கு உணவு இல்லாத போழ்து - செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத பொழுது, வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் - வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.
(சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வி உள்ளபொழுது வெறுக்கப்படுதலான் 'இல்லாத போழ்து' என்றும், பெரிதாயவழித்தேடல் துன்பமேயன்றி நோயும் காமமும் பெருகுதலான் சிறிது என்றும் அதுதானும் பின்இருந்து கேட்டற்பொருட்டாகலான் 'ஈயப்படும்' என்றும் கூறினார். ஈதல், வயிற்றது இழிவு தோன்ற நின்றது. இவை இரண்டு பாட்டானும் கேள்வியதுசிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
செவிக்கு உணவாகிய கேள்வி யில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கத் தகும். பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாதலான், சிறிது என்றார். இஃது எல்லாக்காலமும் கேட்க வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

சாலமன் பாப்பையா உரை
செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

No comments:

Post a Comment