அறிவினுள் எல்லாந் தலையென்ப

குறள் 203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
அறிவினுள் - அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

எல்லாம் - முழுதும்

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

என்ப - என்று சொல்லப்படுவன; என்று சொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

தீய - தீமையான; போலியான.

செறுதல் -  அடக்குதல்; தடுத்தல்; சினத்தல்; வெறுத்தல்; வருத்துதல்; வெல்லுதல்; அழித்தல்; வேறுபடுதல்.

செறு - வயல்; குளம்; பாத்தி; கோபம்

செறுதொழில் - தீச்செயல்.
செறுவார்க்கும் - தீச்செயலை செய்வார்க்கும்

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்யா  -  இயற்றாமல் இருத்தல்

விடல் - விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம்.

முழுப்பொருள்
நாம் பெறக்கூடிய அறிவென்பது இவ்வுலகில் பல. ஆனால் அவற்றினுள் எல்லாம் சிறந்தது எது தெரியுமா? நமக்கு தீயவற்றை செய்யும் பகைவர்க்குக்கூட தீயவற்றை கெடுதலை செய்யாது இருத்தல்.

ஏன் பகைவர்க்குக்கூட என்று சொல்ல வேண்டும் ? பகைவரிடம் தான் நமக்கு உச்சகட்ட கோவம் வரும். ஆனால் அவருக்கு கூட நாம் கெடுதல் செய்யக்கூடாது என்றால் நமது நண்பர்கள், உறவினர்கள் என்று யாராவது நமக்கு தீயது செய்தால் நாம் அதை மறந்து கடந்து செல்வதே சிறந்தது என்பதை சொல்லாமல் சொல்கிறார். நண்பரும் உறவினரும் பகைவராய் மாறினால்க்கூட இக்குறள் பொருந்தும் யார்க்கும் தீது செய்யாதே என்று.

ஏன் அறிவினுள் எல்லாம் சிறந்தது இது? ஏனெனில் பிறருக்கு தீயவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்துவிட்டால் அது நமது நிம்மதியை சிதைத்துவிடும். அதுப்போல தீது நமக்கு வேறேதும் இல்லை. ஆதலால் பிறருக்கு (அவர் நமக்கு தீது செய்யும் பகைவரானாலும்க்கூட) தீது செய்யக்கூடாது என்பதே நாம் பெறக்கூடிய அறிவினுள் எல்லாம் சிறந்தது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறிவினுள் எல்லாம் தலை என்ப - தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர், செறுவார்க்கும் தீய செய்யா விடல் - தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை. (விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும் , செய்யத் தக்குழியுஞ் 'செய்யாது' ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். செய்யாது என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர் நல்லோர்; தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை. இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.

மு.வரதராசனார் உரை
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

No comments:

Post a Comment