நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

குறள் 194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]

பொருள்
நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; அடுத்தல்; பொருந்தியிருத்தல்; கலத்தல்; உறவுகொள்ளுதல்; ஒத்தல்; சாய்தல்.

சாரா - பொருந்தாத

நன்மையின் - நலம்; பயன்; உதவி; சிறப்பு; நன்னெறி; நற்குணம்; ஆக்கம்; நற்செயல்; நல்வினை; வாழ்த்துமொழி; மிகுதி; மேம்பாடு; புதுமை; அழகு; நல்லருள்; காண்க:நன்மையாதல்.

நீக்கும் - நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

சாராப் - பொருந்தாத

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

பல்லார்  - பலர்

அகத்து - உள்ளம் - அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

முழுப்பொருள்
நயன் சாரா சொற்கள் என்றால் நீதி இல்லாத சொற்கள், நயம்  (மேன்மை) இல்லாத மலிவான சொற்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.  பயன் சாரா சொற்கள் என்றால் நற்பலன் இல்லாத சொற்கள் என்று பொருள். பண்பில்லா சொற்கள் என்றால் அழகில்லாத முறையில்லாத இயல்பில்லாத சொற்கள் என்று பொருள்.

நீதி இல்லாத, நயம் இல்லாத, பயன் தராத, அழகில்லா முறையில்லா பண்பில்லா சொற்களை பலர் கூடி இருக்கும் அவையில் பேசினால் அது அவருடைய புகழை கெடுக்கும். அது வரையில் அவர் ஈன்ற நன்மைகளை அகற்றிவிடும்.

பொதுவாக வீட்டில் சொல்லுவார்கள் நல்ல பெயர் வாங்குவது மிக கடினம் பல நாட்கள் ஆகும். ஆனால் கெட்டப் பெயர் வாங்க ஒரு நொடி ஒரு கணம் ஒரு நிகழ்வு போதும். ஒரு தடவை கெட்டப் பெயர் வாங்கினால் அதற்கு முன் வாங்கிய நற்பெயர் எல்லாம் நீங்கி விடும். இது நயன் சாராமால் பயன் சாராமல் பண்பில்லாமல் பேசுவதற்கும் பொருந்தும்.

மேலும்: அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச்சொல்லுமாயின், நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும். (பண்பு- இனிமையும், மெய்யும் முதலாய சொற்குணங்கள், 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின் அவன் நடு சாராது நன்மையினீங்கும். இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.

மு.வரதராசனார் உரை
பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

No comments:

Post a Comment