துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்

குறள் 42
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]

பொருள்
துறந்தார்க்கும் - துறந்தார் - பற்றுவிட்டமுனிவர்

துவ்வு - உணவு; அனுபவம்; ஐம்பொறிநுகர்ச்சி; இழிவு.

துவ்வாதவன் - ஐம்புல நுகர்ச்சியை நாடாதவன்
துவ்வாதவர்க்கும் துவ்வாதவர் - tuvvātavaṉ   n. துவ்வு¹- +ஆ neg. +. Poverty-stricken, indigent person;தரித்திரன். துறந்தார்க்குந் துவ்வாதவர்க்கும் (குறள், 42).

இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்

இறந்தார்க்கும் - வாழ்வை கடந்தவன்; மரணம் அடைந்தவன்

இல்வாழ்வான் இல்வாழ்க்கை - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை

என்பான் - என்றுசொல்பவன்; என்றுசொல்லப்படுபவன்.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

முழுப்பொருள்
இல்வாழ்க்கையில் வாழ்பவன் தான் உண்டு தன் வேலையுண்டு, தன் குடும்பம் உண்டு தன் மனைவியுண்டு தன் பிள்ளைகள் உண்டு என்று குறுகிய வட்டதில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பது தான் இக்குறள் சொல்லாமல் சொல்கின்ற பொருள்.

இல்வாழ்க்கை என்பது சுயநலத்தினாலான எளிய வாழ்க்கை முறை இல்லை என்பது இங்கு உறுதியாகிறது. இல்வாழ்க்கையில் இருப்பவர்கள் இச்சமுதாயத்திற்காற்றவேண்டிய கடமைகளை இங்கு கூறுகிறது. அதாவது இல்வாழ்க்கையில் வாழ்பவர் என்பவர் எல்லாம் துறந்த துறவிகளுக்கும், வறுமையில் இருப்பவர்களுக்கும், இறந்தவர்களுகும் தன் கடனை செலுத்தியாக வேண்டும். துறவிகளுக்கும் வறுமையில் இருப்பவர்களுக்கும் தங்க இடம், உண்ண உடை, உடுக்க ஆடை ஆகியவற்றை வழங்கி உதவ வேண்டும். துறவிகளுக்கும் வறுமையில் இருப்பவர்களுக்கும் துணையாக இல்வாழ்க்கையில் இருப்பவர்கள் திகழவேண்டும். அவ்வாறு செய்வது ஒரு அறச்செயல்.

இறந்தார்  என்றால் மூதாதையர். இன்று நாம் ஒரு நல்ல நிலைமையில் இருந்தால் அது ஒரு சில வருடங்களில் அடைந்த வளர்ச்சியல்ல. நமது மூதாதையர் சந்ததி சந்ததியாக உழைத்து பலவற்றை துறந்தும் இழந்தும் நாம் பிறக்கும் பொழுது ஒரளவேணும் நல்ல நிலையில் நம்மை பிறக்க வைத்திருப்பர். அப்படி இருந்த ஒரு தளத்திலேயே ஒருவர் அவரது வாழ்க்கையை கட்டமைக்கின்றனர். அப்படி இறந்தவரை மனதார நினைத்து அவர்களுக்கு நீர்கடனளிப்பது ஒருவருடைய கடமை. அது ஒருவிதத்தில் அவர்களுக்கு நாம் மனதார ஆற்றும் ஒரு நன்றி. முன்னோர்களை, அவர்கள் வாழ்வை நாம் நினைத்துப் பார்த்துப் பெருமைகொள்ள, நம்மை செம்மைபடுத்திக்கொள்ள, முறியாத உயிர்சங்கிலியின் தொடர்பாக இருந்தமைக்காக நன்றியறிதலை நாம் ஆண்டுதோறும் தெரிவித்துக்கொள்ளச் செய்வதே அவர்களுக்குச் செய்யும் நீர்கடன்கள்

மேலும்: அஷோக் உரை
வறியவர்களுக்காக, உண்ணும் உணவு, இருக்குமிடம், உடுக்க உடை போன்றவற்றை சமுதாயத்தினரே தங்கள் அறச்செயல்களில் ஒன்றாகச் செய்தல் வேண்டும். முந்தைய நாட்களில் அன்ன சத்திரங்கள் ஆயிரம் நாட்டியதும் அதனால்தான். பின்னாளில், பெரும்பாலான சத்திரங்கள் சோம்பேறி மடங்களாகப் போனதும் உண்மைதான். அது தனி கதை! சமுதாயத்தினரின் ஒருங்கிணைந்த வள்ளன்மையே, வறுமையை முழுதாக ஒழிக்கக்கூடிய வழி!

பரிமேலழகர் உரை
துறந்தார்க்கும்- களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும் - நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவருமன்றித் தன்பால்வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் 'துணை'-இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை (துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான். (வறுமையாளர், கைவிடப்பட்டவர், திக்கற்றவர்). மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

சாலமன் பாப்பையா உரை
மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
இல்லாதாருக்கு இல்லறத்தார் உதவ வேண்டும்.

No comments:

Post a Comment