மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்

குறள் 52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்
[அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்]

பொருள்
மனை - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய்

மாட்சி - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு.

இல்லாள் - மனைவி; மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; வறுமையுடையவள்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இல்- இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

ஆயின் - ஆனால்; ஆராயின்; அவ்வாறாக அமைந்தால் ; ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

எனை - என்ன; எவ்வளவு; எல்லாம்

மாட்சித்து - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு.

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
ஒரு குடும்பத்தில் அல்லது ஒருவரது இல்வாழ்க்கையில் பெருமை மற்றும் அழகு எனப்படுவது அவ்வீட்டில் அமைகின்ற மனைவியின் கையிலே உள்ளது. அந்த மனைவி குடும்பத்திற்கும் வாழ்க்கைக்கும் விழி/கண் போன்றவர். நல்ல குணங்களும் அமைந்து நல்ல செயல்களை செய்து குடும்பத்தை முன்னேற்றம் காண செய்யவேண்டியது மனைவியின் பொறுப்பு. விழி சரியாக அமைந்தால் தான் நாம் போகிற இடம் சரியாக அமையும் அன்றாடம் காணுகிற காட்சியும் வண்ணமயமாக இருக்கும். அதுபோலவே மனைவியும் என்கிறது இக்குறள்.

ஒருவீட்டிற்கு பெருமையை அழகை அளிக்கக்கூடிய மனைவி சரியாக அமையாவிட்டால் அவ்வீட்டில் அல்லது ஒருவரது வாழ்க்கையில் எத்தனை பெருமைகளை அடைந்தாலும் அவருக்கு நிம்மதி என்பதும் இல்லை அவர்க்கு சிறப்பும் சேராது.

உதாரணம்: தமிழில் 1985 ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல்மரியாதை திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் மனைவியாக வரும் வடிவுக்கரசி கதாபாத்திரத்தை கூறலாம். சிவாஜி அவர்கள் ஊரில் எல்லோரும் போற்றப்படும் ஒரு மனிதராக திகழ்வார். ஆனால் அவருடைய வீட்டில் தப்பி அமைந்த வடிவுக்கரசி போன்ற மனைவியால் அவர் திருமணவாழ்வில் ஒருநாளும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

கேளடி கண்மணி திரைப்படத்தில் வரும் "கல்யாணமாலை" பாடலில் "அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே" என்று ஒரு வரி வரும். அதே பாடலில் "கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து,
பாடென்று சொன்னால் பாடாதம்மா! தோகை மயில் தன்னைச் சிறை வைத்துப் பூட்டி, ஆடென்று சொன்னால் ஆடாதம்மா!" என்று வருகின்ற வரிகள் மனைவி சரியாக அமையவில்லை என்றால் நிம்மதி இல்லை என்பதை பறைசாற்றும் வரிகள்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
குறள் 51, 53
“மனையின் மாட்சியை அழித்திழி மாதவப் பன்னி” (கம்ப.அகலிகை 70)

“விழைதக்க மாண்ட மனையாளை இல்லாதான் இல்அதர்
காண்டற் கரியதோர் காடு” (நாலடி 361)

“தாரம் மாணாதது வாழ்க்கை யன்று” (முதுமொழிக் 42)

பரிமேலழகர் உரை
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. ('இல்' என்றார் பயன்படாமையின்.).

மணக்குடவர் உரை
குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.

மு.வரதராசனார் உரை
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
வந்தவள் சிறந்தால், வாழ்க்கை சிறக்கும்.

No comments:

Post a Comment