உட்கப் படாஅர் ஒளியிழப்பர்

குறள் 921
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]

பொருள்
உட்கண் - அறிவு, ஞானம்

உட்கப் படாஅர் - பகைவரால் அஞ்சபடார்; மதிக்கபடார்

ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.

இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு.

இழப்பர் - இழப்பார்கள்

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

கள்  - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை, பொய்

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

கொண்டு - கொள், குறித்து

ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

ஒழுகுவார் - நடந்துக்கொள்வோர்

முழுப்பொருள்
கள் உண்டால் உடம்பு மட்டும் இன்றி உள்ளம் அறிவு சிந்தனை ஆகியவற்றையும் சிதைத்துவிடும். ஆதலால் எக்காலத்திலும் கள் மீது இச்சை கொண்டு அதில் வேட்கையுடன் இருக்கும் அரசரை (தன் நாட்டு மக்கள் மட்டும் அல்ல) பகைவர் கூட அஞ்சமாட்டார்கள் மதிக்க மாட்டார்கள். அத்தகைய அரசன் தான் எய்திய அறிவினையும், ஞானத்தையும், பெருமையும், புகழையும், மாண்பையும், நன்மதிப்பையும், வெற்றிகளையும் இழப்பான். 

பி.கு: இக்குறள் கள் என்னும் மதுவிற்கு மட்டும் அல்ல. எவன் ஒருவன் ஒரு பொருள் மீது மோகம் கொண்டு அதில் எக்காலமும் போதை மயக்கம் கொண்டு இருக்கிறானோ அவன் தன்னுடைய மதிப்பை இழப்பான். உதாரணமாக சோம்பல் போன்றவற்றில் போதைக்கொண்டு எச்செயலும் செய்யாது இருந்தால் அவன் இதுவரை ஈன்ற எல்ல புகழையும் பொருளையும் நன்மதிப்பையும் இழப்பான்.

இவ்வாறு குடியைக் கெடுக்கும் குடியைப் பற்றி, அறநெறிச் சாரப்பாடல் சொல்லி, அதை விட்டொழிக்க வலியுறுத்துகிறது.

ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடையார் என்று உரைக்கும் தேசும் – களியென்னும்
கட்டுரையால் கோதப்படுமேல் இவையெல்லாம்,
விட்டொழியும் வேறாய் விரைந்து. (அறநெறி.144)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனி, ஒழுக்கமும் உணர்வும் அழிதற்கண் அவ்வரைவில் மகளிரோடு ஒப்பதாய கள்ளினை உண்ணாமையது சிறப்பு எதிர்மறை முகத்தால் கூறுகின்றர்.]

கள் காதல் கொண்டு ஒழுகுவார் - கள்ளின்மேற் காதல் செய்தொழுகும் அரசர்; எஞ்ஞான்றும் உட்கப்படார் - எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார்; ஒளி இழப்பர் - அதுவே அன்றி முன் எய்திநின்ற ஒளியினையும் இழப்பர். (அறிவின்மையால் பொருள் படை முதலியவற்றாற் பெரியராய காலத்தும் பகைவர் அஞ்சார், தம் முன்னோரான் எய்தி நின்ற ஒளியினையும் இகழற் பாட்டான் இழப்பர் என்பதாம். இவை இரண்டானும் அரசு இனிது செல்லாது என்பது இதனான் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை 
பிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் இழப்பர், எல்லா நாளும் கள்ளின்கண் காதல்கொண்டு ஒழுகுவார். இது மதிக்கவும் படார்: புகழும் இலராவரென்றது.

மு.வரதராசனார் உரை
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

சாலமன் பாப்பையா உரை
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

No comments:

Post a Comment