இருமனப் பெண்டிரும் கள்ளும்

குறள் 920
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு
[பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்]

பொருள்
இருமனம் - iru-maṉam   * n. இரண்டு +. 1.Double-mindedness; வஞ்சகம் இருமனப் பெண்டிரும் (குறள், 920). 2. Irresolution, indecision;துணிபின்மை. இருமனமுள்ளவன் தன்வழிகளிலெல்லாம் நிலையற்றவன் (விவிலி. யாக். 1, 8).  

விலைநலப்பெண்டிர் - vilai-nala-p-peṇṭir   n. id. + நலம் +. Harlots; பரத்தையர். விலைநலப்பெண்டிரிற் பலர்மீக் கூற (புறநா. 365).

பரத்தை - A harlot, strumpet, pros titute, courtezan, as பரஸ்திரி. 2. A shrub. the shoe-flower. See செம்பரத்தை; [ex பர.]; பொதுமகள்; தீயநடத்தை; 

பெண்டிரும்  -பெண்

இருமனப் பெண்டிரும் - பரத்தையர்; விலைமகள், பொதுமகள்

கள்ளும் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை; s. Toddy, vinous liquor, மது. 2. The plural termination of nouns, pro nouns and verbs, பன்மைவிகுதி. 3. (p.) Honey of flowers, தேன். 4. Stealing, theft, களவு. 5. Lying, falsehood, deception, பொய்.

கவறும் - கவறு - சூதாடுகருவி, தாயக்கட்டை; சூது; பனம்பட்டை.

திரு -  திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.

நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

நீக்கப்பட்டார் -  அகற்றப்டோர்; கைவிடப்பட்டோர்

தொடர்பு - தொடர்கை; நட்பு; உறவு; நியதி; ஒட்டுகை; பாட்டு; பரம்பரைத்தொடர்பு; வரிசை; காரணகாரியசம்பந்தம்.

முழுப்பொருள்
உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்டோர் பரத்தையர் (பொதுமகள்). இவர்கள் வஞ்சகர்கள் நிலையற்றவர்கள் என்பதை அறிவோம். இவர்களிடத்தில் உறவு கொண்டால் உடலையும் உள்ளத்தையும் (இரண்டுமே வாழ்க்கைக்கு தேவையான் பொருள்கள்) கெடுத்துக்கொண்டு தனது அழகினை, மாண்பினை, செல்வத்தினை கெடுத்துக்கொள்வர்.

கள் என்பது மதுவை குறிக்கும். சிந்தையை மயக்குறுத்துவதும் போதையைத் தருவதுமாகிய கள். ஆதலால் கள் ஒருவருக்கு தீங்கானது.  அது ஒருவனுக்கு கேட்டை விளைவிக்கும். அது மட்டும் இன்றி, கள் என்ற சொல்லுக்கு களவு அதாவது திருடுதல் என்ற பொருளும், பொய் சொல்லுதல் என்ற பொருளும் உண்டு என்பதை அறிக. [கள் உண்பதற்காக திருவோரும், பொய் சொல்வோரும் பற்றிய கதைகளை நாம் அறிவோம்] கள் உண்டால் உடல் நலம் கேடாகும், அறம் தவறுவோம். ஆதலால் பொருள் இழப்போம். 

கவறு என்பது சூதாட்டத்தில் பயன்படுத்தப்படும் பனம்கட்டையை குறிக்கும். எவன் ஒருவன் சூதாடுகிறானோ அவன் தீப்பயனை அறுப்பான். சூதாட்டாத்தில் ஒன்று போட்டால் நூறு கிடைக்கும் என்றால் அதுப்போல் நூறு போட்டால் ஒன்று அல்லது பத்து மட்டும் கூட கிடைக்கும் என்பதை அறிந்தும் அல்லது அறியாமலும் அதில் ஈடுபடுவோருக்கு ஒருநாள் நஷ்டம் ஏற்பட்டு எல்லா பொருளையும் இழப்பர். 

ஆதலால் பரத்தையருடன் உறவுக்கொள்வோர், கள் உண்ணுபவர்கள், சூதாடுபவர்கள் செல்வம் என்னும் பொருளை இழப்பார்கள். இவர்களிடம் இருந்து மாட்சிமை நீங்கும். 

இம்மூன்றையும் குறிக்கும் திரிகடுகப்பாடலொன்று, வேசியரைச் சேர்வதாகிய நீசத்தன்மையும், கள்ளுண்டலாகிய பிறர் எச்சிலை யுண்பதும், பொய்யை மேற்கொள்வதாய சூதாடுமிடத்திற் சேர்வதும் அறவழி நில்லாதார் தொழில்களாம் என்கிறது. அப்பாடல்:

“புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல்
கலமயக்கம் கள்ளுண்டு வாழ்தல் – சொலைமுனிந்து
பொய்மயக்கம் சூதின்கண் தங்கல் இவை மூன்றும்
நன்மையி லாளர் தொழில்.” (திரி.39)

”ஒருபால் படாதோர் உள்ளம் போல” (பெருங் 1.49:40)
“மகளிர் நெஞ்சமே, போற்பல கவர்களும்” (சீவக.1212)

“கஞ்சமெல் லணங்கும் தீரும் கள்ளினால்” (கம்ப.கிட்கிந்தை.95)

மேலும்: அஷோக் உரை

மு.வரதராசனார் உரை
இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.

சாலமன் பாப்பையா உரை
உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.

பரிமேலழகர் உரை
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் - கவர்த்த மனத்தினையுடைய மகளிரும் கள்ளும் சூதும் என இம்மூன்றும்; திருநீக்கப்பட்டார் தொடர்பு - திருமகளால் துறக்கப்பட்டார்க்கு நட்பு. (இருமனம் - ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒரு காலத்தேயுடைய மனம். கவறு - ஆகுபெயர். ஒத்த குற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன. வடநூலாரும் இக்கருத்தான் 'விதனம்' என உடன் கூறினார். வருகின்ற அதிகார முறைமையும் இதனான் அறிக. திணைவிராய் எண்ணியவழிப் பன்மைபற்றி முடிபு கோடலின் ஈண்டு அஃறிணையாற் கொண்டது. திரு நீக்கப் பட்டமை இக்குறிகளான் அறியப்படும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் சேர்வார் இழிந்தோர் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கவர்த்த மனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும் திருமகளால் கடியப்பட்டாரது நட்பு. இது நல்குரவாவார் சார்வரென்றது.

இரு மனம்: வஞ்சகம்.

‘இரு மனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப் பட்டார் தொடர்பு’

என்பது வரைவின் மகளிர் அதிகாரத்துக் குறள்.

‘இரு மனப் பெண்டிரும் கள்ளுண்டு கவறாடும் இறை முறை பிழைத்த அரசும்’ என்பான் கம்பன்.

No comments:

Post a Comment