பெரியாரைப் பேணாது ஒழுகிற்

குறள் 892
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்
[பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை]

பொருள்
பெரியாரைப் - பெரியார் - மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர்.

பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பேணாது - போற்றாமல், மதிக்காமல், பாதுகாக்காமல், பொருட்படுத்தாமல்

ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

ஒழுகின் - நடந்துக்கொள்ளுதல்

பெரியாரால் பெரியார் - மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர்.

பேராழி  - பெருங்கடல்.

பேர் - pēr   adj. [used as a prefix.] Great, large, excellent, principal, பெரிய. See பெருமை.

பேர் - pēr   கிறது, ந்தது, பேரும், பேர, v. n. To become loose, to be detached, சிதைய. 2. To leave, depart, remove, to go away, நீங்க. For other meanings, see பெயர், v.

பேரா - பெரிய; நீங்காத

இடும்பை -  துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
வயதால் பெரியோர் அன்று, ஞானத்தாலும், குணத்தாலும், பண்பாலும், அனுபவத்தாலும் பெரியோர்களை நாம் பேண வேண்டும் - அதாவது அவர்களுக்கு மதிப்பு செலுத்த வேண்டும், அவர்களை போற்ற வேண்டும், பொருட்படுத்த வேண்டும். அது இல்லாது அவர்களை அவமதித்தால் அது நமக்கு நீங்காத பெரிய தீமையை தரும். உதாரணமாக பெரியோர்களுடைய ஞானம். இந்த ஞானம் இந்த பிறவியில் பெற்ற ஞானம் மட்டும் அன்று அது பல நூற்றாண்டுகளின் பெருந்தொகை, விவேகம் ஆகும். இவர்களை மதிக்காவிட்டால் பிறகு அந்த ஞானம் நமக்கு கிடைக்காது தக்க நேரத்தில் துன்பத்தை கொடுக்கும். இந்த ஞானம் அடுத்த தலைமுறையினருக்கு கிடைக்காமல் போனால் இவர்கள் இந்த ஞானத்தை அடைய இன்னும் ஒரு பிறவி அல்லது அதற்கு மேலும் செலவிட வேண்டியது இருக்கும் ஏனெனில் ஞானம் என்பது ஒரு தொடர் விவாதத்தின் விவேகம் ஆகும். அத்தொடர் அறுபட்டால் அதனை முதலில் இருந்து வளர்க்க நேரிடும். பெரியோர்களை மதித்தால் இந்த ஞானம் இப்பிறவியிலேயே கிடைக்கும். இல்லையென்றால் அவ்வளவு எளிதில் நீங்காத துன்பத்தில் உழன்று காலத்தை செலவு செய்வர்.

நாலடியாரில், இதே தலைப்பில் உள்ள அதிகாரத்தில் இக்குறள் கருத்தினையொட்டிய பாடல் இதோ.

பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் – வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட
பேர்க்குதல் யார்க்கும் அரிது. (நாலடி 161)

இக்குறள் சொல்லும் கருத்து, மாணுடை பெரியோர், தம்மை மதியார்க்கு துன்பத்தை வஞ்சத்தால் விளைவிப்பார் என்பதல்ல. அவர்க்கு இழைக்கப்படும் தாமாகவே இழைப்பவர்க்கு வந்துறும் என்பதே இக்குறள் சொல்லும் கருத்து. அதேபோல், மாண்பிலார்க்கு செய்யப்படும் அவமதிப்பு துன்பத்தைப் பொதுவாகத் தருவதில்லை என்றும் உணரலாம்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பொறுப்பர்என் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின்
..................பேர்க்குதல் யார்க்கும் அரிது” (நாலடி.161)

“தீயன கொடியவள் செய்த செய்கையை
நாயினேன் உணரின்நன் னெறில் நீங்கலாத்
தூயவர்க் கிடரிழைத் துழலும் தோமுடை
ஆயவர் வீழ்கதி அதனில் வீழ்கயான்” (கம்ப.பள்ளிபடை.116)

பரிமேலழகர் உரை
பெரியாரைப் பேணாது ஒழுகின் - ஆற்றல்களால் பெரியராயினாரை வேந்தன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின், பெரியாரால் பேரா இடும்பை தரும் - அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவர்க்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும். (அத்துன்பங்களாவன, இருமையினும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களும் ஆம், அவையெல்லாம் தாமே செய்துகொள்கின்றனர் என்பது தோன்ற, ஒழுக்கத்தை வினை முதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொது வகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனாற் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையாற் கூறுப.).

மணக்குடவர் உரை
பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின் அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும். இது முனிவரைப் போற்றா தொழியின் அது குற்றம் பயக்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.

No comments:

Post a Comment