வாள்போல பகைவரை அஞ்சற்க

குறள் 882
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு
[பொருட்பால், நட்பியல், உட்பகை]

பொருள்
வாள் - ஒளி; கத்தி; கத்தரிகை; கூர்மை; ஈர்வாள்; விளக்கம்; புகழ்; கொல்லுகை; கலப்பை; உழுபடையின்கொழு; கயிறு; நீர்; கச்சு.

வாள்போல் - கத்தியைப் போன்று கூர்மையுடைய

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

பகைவரை - பகைவர் - எதிரியை

அஞ்சற்க -  கண்டு அஞ்ச (பயப்பட) வேண்டாம்

அஞ்சுக - கண்டு அஞ்சுக (பயப்படுக)

கேள் - உறவு; நட்பு; நண்பன்; கணவன்.

கேள்போல் - நண்பர் போன்று வேடம் போட்கொண்டு உள்ள

பகைவர் - பகைவர் - எதிரியை

தொடர்பு - உடன் கொண்ட உறவினை, நட்பினை

முழுப்பொருள்
சர்வ வல்லமை பெற்ற பகைவரை கண்டும் உயிர்குடிக்கும் கூர்மையான அவருடைய வாளை கண்டும் அஞ்ச தேவையில்லை. ஏனெனில் நம் மனதிற்கு தெளிவாக தெரியும் அவர் எதிரி என்று. அவரை வெல்ல நம்மை நாம் எவ்வாறு தகுதிப் படுத்திக்கொண்டு நமது போர் பயிற்சிகளை செய்யவேண்டும் என்று தெரியும். நமது மன தைரியத்தாலும் உழைப்பாலும் பகைவரை வெல்லலாம். மாறாக பகைவரிடம் போராடி தோற்றாலும் ஒரு முறை தான் மரணம்.

ஆனால் நம்மீது அன்பும் அக்கறையும் கொண்டோர் போன்று நம்முடன் போலி உறவு வைத்துள்ள உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார்களை கண்டு அஞ்ச வேண்டும். ஏனெனில் இவர்கள் முகமூடி அணிந்த பகைவர்கள். இவர்கள் தேன் ஒழக பேசுவர் ஆனால் பின்நின்று நம்மை கொல்லுவர். நமக்கு இவர்களை பற்றி ஒருவேளை தெரிந்தாலும் சாட்சியில்லாததால் அவரை தண்டிக்கவும் முடியாது. அப்படியே சாட்சி இருந்தாலும் மன்னித்துவிடு என்று நம் உறவினர்களும் நண்பர்களும் உபதேசம் செய்வர். இத்தகைய போலி உறவுகளிடம் போராடவும் முடியாது. இவர்களுடன் தோற்றும் போவோம். இது ஒரே பிறவியில் பலமுறை மரணம் கொள்வதுப்போல் ஆகும். ஆதலால் இவர்களை போன்ற போலி நண்பர்களையும் உறவினர்களையும் கண்டு அஞ்ச வேண்டும்.

கி.வா.ஜ-வின் ஆராய்ச்சிப் பதிப்பிலே மேற்கோளாக இடப்பட்டுள்ள பழமொழிப் 188 பாடல், இக்குறளின் முற்றுக் கருத்தையும் எவ்வாறு கூறுகின்றது என்று பார்ப்போம்.

இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும்
தம்மைப் பரியார் தமரா – யடைந்தாரின்
செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?
மைம்மைப்பின் நன்று குருடு.

இப்பிறப்பில் பழியையும் பின்வரும் பிறவிகளில் பாவத்தையும், தம்மினின்றும் நீக்காராய் உட்பகையோடு தம்மவர்போல் ஒட்டிவாழும் உறவையும் சுற்றத்தையும்விட, நேர்முகமாகப் பகைக்கொண்டு தன்னை ஒட்டி ஒழுகாதவர்கள் தீயோரோ எனில் அன்று!  ஒளி குன்றிய பார்வையுடைய கண்ணினும் பார்வையின்றி நிற்கும் கண்ணே போதும் என்பது பழமொழி.

கண்ணின் மணியேபோல் காதலராய் நட்டாரும்
உண்ணும் துணையும் உளராய்ப் பிறராவர்
எண்ணி உயிர்கொள்வான் ஏன்று திரியினும்
உண்ணும் துணைக்காகும் கூற்று (பழமொழி 89)

நண்ணின மனிசரை நண்பு புண்டனை
எண்ணினை செய்வினை என்னை வெல்லுமா
றுன்னினை அரசின்மேல் ஆசை யூன்றினை
திண்ணிதுன் செயல்பிறர் செறுநர் வேண்டுமா (கம்ப.விபிடணன் 6)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வாள் போல் பகைவரை அஞ்சற்க - வாள்போல எறிதும் என்று வெளிப்பட்டு நிற்கும் பகைவர் பகையினை அஞ்சாதொழிக; கேள் போல் பகைவர் தொடர்பு அஞ்சுக - அங்ஙனம் நில்லாது கேள்போல மறைந்து நிற்கும் பகைவர் நட்பினை அஞ்சுக. (பகைவர் : ஆகுபெயர். முன்னே அறிந்து காக்கப்படுதலான், 'அஞ்சற்க' என்றும், அங்ஙனம் அறியவும் காக்கவும் படாமையின் கெடுதல் ஒருதலை என்பது பறறி 'அஞ்சுக' என்றும் கூறினார். பின் செய்யும் பகையினும் கொடிதாகலானும் காக்கலாகாது ஆகலானும், அஞ்சப்படுவது முன் செய்த அவர் தொடர்பாயிற்று. இவை இரண்டு பாட்டானும் உட்பகை ஆகாது என்பது கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
வாள்போலக் கொல்லுந் திறனுடைய பகைவரை அஞ்சாதொழிக; புறம்பு நட்டாரைப் போல மனத்தினாற் பகைத்திருப்பார் தொடர்பை அஞ்சுக. இது பகை அஞ்சுவதினும் மிக அஞ்சவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
வாளைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; நண்பரைப்போல் வெளியில் காட்டி மனத்துள் பகைவராக‌வே இருப்போரின் தொடர்புக்கு அஞ்சுக.

No comments:

Post a Comment