இன்கண் உடைத்தவர் பார்வல்

குறள் 1152
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
இன்கண் - iṉ-kaṇ   n. இன்¹ +. 1. Delight,pleasure; இன்பம் இன்க ணுடைத்தவர் பார்வல்(குறள், 1152). 2. Kindness, special favour; கண்ணோட்டம் இன்க ணுடைய னவன் (கலித். 37, 22).  

உடைத்து -  உடைதல், உடையது, இருக்கும்

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

பார்வல் - பார்க்கை; காவல்; பறவைக்குஞ்சு; மான்முதலியவற்றின்கன்று; காண்க:பார்வைவிலங்கு.

பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு.

அஞ்சும் - அஞ்சுதல் - பயப்படுதல்

புன்கண் - puṉ-kaṇ   n. புன்-மை +. 1.Sorrow, distress, trouble, affiction, sadness;துன்பம். (பிங்.) புள்ளுறு புன்கண் டீர்த்தோன்(சிலப். 20, 52). 2. Disease; நோய். (பிங்.) 3.Leanness, emaciation; மெலிவு. (திவா.) 4.Poverty, adversity; வறுமை. இரவலர் புன்க ணஞ்சும் (பதிற்றுப். 57, 14). 5. Loss of beauty orcharm; பொலிவழிவு. புன்கண்கொண் டினையவும்(கலித். 2). 6. Fear; அச்சம். பிரிவஞ்சும் புன்கணுடைத்தால் (குறள், 1152). 7. Meanness; இழிவு.பொய்க்கரி புகலும் புன்கணார் (கம்பரா. கிங்கர. 58).

உடைத்தால் - உடைதல் -  இருக்கும்

புணர்வு - puṇarvu   n. id. 1. Combination; சேர்க்கை. 2. Coition; கலவி. புணர்வின்னினிய புலவிப்பொழுதும் (சீவக. 1378). 3. Connection, joining; இசைப்பு. (சூடா.) 4. Body;உடல். (பிங்.) 

முழுப்பொருள்
என் காதலருடைய கண்கள் மிகவும் இனிமை தரக்கூடிய வலிமை வாய்ந்தது. நான் விரும்பும் கண்கள் அவை.  அவருடைய பார்வையோ மன இன்பம் தரும் எங்கள் கூடலை (புணர்வதை) உணர்த்தும் எனக்கு. அனுபவிக்கப்போகும் புணர்ச்சியின்பத்தை நினைத்து நானோ மகிழ்ச்சியில் இருப்பேன்.

ஆனால் இப்பொழுது இவரை தழுவி புணரும் பொழுது இவர் நாளை என்னைவிட்டு பிரிந்துச் செல்ல போகிறார் (வேலை அல்லது போர் நிமித்தமாகவோ) என்று நினைத்துப் பிரிவை அஞ்சி பிரிவு தரும் வேதனையை அஞ்சி என் கண்களில் துன்பம் என்னும் நோயே இருக்கிறது.

இங்கே நாம் காணவேண்டியது 1) பிரிவென்னும் நினைப்பே துன்பத்தை தருகிறது 2) காதலில் புணர்ச்சியின் போது வெளிப்படும் இன்பம் என்பது காதலின் உச்ச வெளிப்பாடாக கருதப்படுவது. அது மிகவும் அகவயமானதும் கூட. ஆனால் பிரிவு என்னும் நினைப்பு தன் அகத்தில் சென்று புணர்ச்சியிலும் வேதனை தருகிறது. பிரிவு எவ்வளவு கொடியது. 

ஒப்புமை
“பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறை” (மதுரைக் 231)
“பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு” (குறுந்.117.2)
“பார்வல் கொக்கின் பரிவேட் பஞ்சா” (பதிற்.21:27)
“பார்வல் பாசறைத் தரூஉம் பல்வேல்” (பதிற்.84:5)
“பார்வல் இருக்கைக் கவிகண் ணோக்கின்” (புறநா.3:19)
“நாரைச் சேவல் பார்வலொடு வதிந்த” (பெருங்.3.4:43)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(பிரிவு தலைமகன் குறிப்பான் அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) அவர் பார்வல் இன்கண் உடைத்து - தழையும் கண்ணியும் கொண்டு பின்னின்ற ஞான்று அவர் நோக்கு மாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்பமுடைத்தாயிருக்கும்; புணர்வு பிரிவஞ்சும் புன்கண் உடைத்து - இன்று அப்புணர்ச்சிதான் நிகழா நிற்கவும் அது பிரிவர் என்று அஞ்சும் அச்சத்தினை உடைத்தாயிற்று; அவர் அன்பின் நிலைமை இது. ('பார்வல்' என்றதனால், புணர்ச்சி பெறாத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. புன்கண் என்னும் காரணப்பெயர் காரியத்தின் மேலாயிற்று. அவ்வச்சத்தினை உடைத்தாதலாவது, 'முள்ளுறழ் முளையெயிற்று அமிழ்தூறுந் தீநீரைக் - கள்ளினும் மகிழ்செய்யும் என உரைத்தும் அமையார், என் ஒள்ளிழை திருத்தும்' (கலித்-பாலை-3)பண்டையிற் சிறப்பால். அவன் பிரிதிற் குறிப்புக் காட்டிஅச்சம் செய்தலுடைமை. அழுங்குவித்தல்: பயன்.)

மணக்குடவர் உரை 
நங்காதலரை வரவு பார்த்திருக்குமது இன்பத்தை யுடைத்து; அவரைப் புணர்ந்திருக்கும் இருப்பு. பிரிவாரோ என்று அஞ்சப்படும் துன்பத்தை யுடைத்து.

மு.வரதராசனார் உரை
அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!.

No comments:

Post a Comment