நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால்

குறள் 1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்
நெய் வெண்ணெயைஉருக்கிஉண்டாக்கும்பொருள்:வெண்ணெய்; எண்ணெய்; புழுகுநெழ்; தேன்; இரத்தம்; நிணம்; நட்பு; சித்திரைநாள்.

'நெய்யால்- நெயினால், எண்ணெயினால்

எரி - நெருப்பு; வேள்வித்தீ; தீக்கடைகோல்; ஒளி; அக்கினிதேவன்; நரகம்; கார்த்திகை; புனர்பூசம்; கந்தகம்; இடபராசி; கேட்டை; வால்மீன்வகை.

எரி - (வி)எரிஎன்ஏவல்; ஒளிர்; அழல்; பொறாமைகொள்; சினங்கொள்; வயிறெரி.

நுதுத்தல் - அவித்தல்; அழித்தல்; நீக்குதல்.
நுதுப்பு - nutuppu   n. நுது-. Quenching,suppressing; தணிக்கை (W.)  ; தணிப்பு

நுதுப்பேம் - தணிப்பேன்

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
என்றற்றால்-' என்று + அற்றால்

கௌவை -ஒலி; வெளிப்பாடு; பழிச்சொல்; துன்பம்; கள்; எள்ளிளங்காய்; ஆயிலியநாள்; செயல்.

யான் - நான்

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

நுதுப்பேம் - தணிப்பேன்

எனல் - என்றது

முழுப்பொருள்
தலைவன் தலைவிக்கும் இடையே உள்ள காதல் என்பது அவர்கள் பழகும் பொழுது வளரும். காதலை நினைத்து நினைத்து வளரும். இதை தெரிந்த ஊர் மக்கள் உறவினர்கள் இந்த காதலை வளரவிடக்கூடாது அழிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இவர்கள் அனைவரும் பல இடங்களில் கூடி நின்று பேசி, எங்களை பற்றி பழிச்சொல் சுழல விட்டு, எள்ளிநகையாடுவது உண்மையில் எங்கள் காதலை வளர்க்குமே தவிர அழிக்காது. இவர்கள் கூடி நின்று பேசுவது என்பது எரிந்துக்கொண்டு இருக்கும் நெருப்பில் நெய்யினை ஊற்றுவது போல் ஆகும். தீயின் செந்தழல் நெய்யினை பருகி பருகி வளரும். அதுப்போல எங்கள் காதலும் வளரும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கௌவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும். (மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிப்போமென்று நினைத்தாற்போலும்; அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல். இது தலைமகன் பின்னுங் களவொழுக்கம் வேண்டினமை கண்டு தோழி கூறியது.

மு.வரதராசனார் உரை
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.

காதலித்து விட்டேனாம் ஊரார் அதைக்
காண்பது போல் செய்தேனாம் என்றும் எங்கும்
கூடி அவர் கொண்டேனாம் ஊரைப் பற்றிக்
கொஞ்சம் கூட நினைப்பின்றி நடந்தேனாம் நான்
தேடி இதை ஊரெங்கும் சொல்வதனால் நான்
திருந்திடவா வாய்ப்புண்டு காமத்தீயைப்
பேசி இவர் அணைத்திடவே நினைத்தல் நெய்யால்
பெருந்தீயை அணைத்திடவே முயல்தல் ஆகும்

No comments:

Post a Comment