கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய்

குறள் 1162
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்
[காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்]

பொருள்
படர் - செல்லுகை; ஒழுக்கம்; வருத்தம்; நோய்; நினைவு; பகை; மேடு; துகிற்கொடி; படைவீரர்; எமதூதர்; ஏவல்செய்வோர்; இழிமக்கள்; தேமல்; தூறு; வழி; தறுகண்மை
படர் - (வி)தொடர், படர்என்ஏவல்.படர்

மெலிந்து - மெலிதல் - வலிமைகுறைதல்; உடல்இளைத்தல்; வருந்துதல்; அழிதல்; எளியதாதல்; வல்லினம்தனக்கினமானமெல்லினமாகமாறுதல்; ஓசையில்தாழ்தல்.

இரங்கல் - அழுகை; நெய்தல் உரிப்பொருள் ஒலி யாழ்நரம்போசை.

கரத்தலும் - கரத்தல் - மறைத்தல்; கவர்தல்; கெடாதிருத்தல்; அழித்துமுதற்காரணத்தோடுஒடுக்குதல்; கெடுதல்.

ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றேன் - செய்யமுடியுமோ

இந் - இந்த

நோயை - நோய்

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்தார்க்கு - உண்டாக்கியவருக்கு

உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

உரைத்தலும் - சொல்லுதல்

நாணுத் - நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று.

தரும் - ஈட்டும்; தரும்

முழுப்பொருள்
அவர் மேல் நான் காதல்கொண்டு உள்ளேன். இதனை நான் அறிவேன். ஊரார் அறியமாட்டார்கள். ஆனால் இந்த ஆசைநோயால் நான் படும் பாடு சொல்லி மாலாது. என் மனதிற்குள்ளே இருக்கும் இக்காதலை மற்றவர்களிடம் சொல்ல கூடாது என்று தான் நினைக்கிறேன். ஆனால் என்மேல் படர்ந்துள்ள (காதலினால் ஆன) பசலைநோயானது மறைக்ககூடிய ஒன்றோ? இல்லை. இது உலகிற்கு என்காதலை அறிவித்துவிடும். அதற்கு முன்னர் என் காதலருக்கு என் காதலை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனோ பாழாய்போன என் நாணம் என்னும் வெட்கம் என்னை தடுகிறது.

ஒருபக்கம் என் பசலைநோய் என்காதலை வெளிப்படுத்த தள்ளுகிறது மறுபக்கம் என் வெட்கம் என்னை தடுகிறது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('ஈண்டையார் அறியாமல் மறைத்தல் ஆண்டையார் அறியத் தூது விடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று செயல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது). இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன்-இந்நோயை ஈண்டை அறியாமல் மறைத்தலும் வல்லேனாகின்றிலேன்; நோய் செய்தார்ககு உரைத்தலும் நாணுத் தரும் - ஆகாக்கால், நோய் செய்தவர்க்கு உரைக்க எனின், அதுவும் எனக்கு நாணினைத் தாரா நின்றது, இனி என் செய்கோ? (ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலின், 'கரத்தலும் ஆற்றேன்' என்றும், சேயிடைச் சென்றவர்க்கு இது சொல்லித் தூதுவிட்டால் இன்னும் இருந்தேன் என்பது பயக்கும் என்னும் கருத்தால், 'நாணுத் தரும்' என்றும் கூறினாள்.)

மணக்குடவர் உரை
இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன். இந்நோயைச் செய்தார்க்குச் சொல்லவும் நாணமாகாநின்றது என்றவாறு.<br /> இது குறிப்பறிதற் பொருட்டுக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.

சாலமன் பாப்பையா உரை
இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.

மறைத்து விட முடிகிறதா இந்தக் காதல்
மனத்திற்குள் கிடக்கிறதா அந்தோ அந்தோ
இறைத்து விட்ட நீர் போல ஊரார்க் கெல்லாம்
எப்படித் தான் தெரிந்ததுவோ புரியவில்லை
உரைத்திடலாம் அவருக்கென் துன்பம் என்றால்
உடன் பிறந்த நாணம் அதோ தடுக்கிறது
தரத் தந்தான் நோயிதனை அவனே யன்றோ
தானாகத் தழுவி இதைத் தீர்க்க வேண்டும்

No comments:

Post a Comment