மன்னர் விழைப விழையாமை

குறள் 692
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்
[பொருட்பால், அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]

பொருள்
மன்னர் - மன்னன்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.
விழைவு - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி.
விழைப - விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc.
விழையாமை - விழையாது இருத்தல்; விரும்பாதிருத்தல்
மன்னரான் - அவ்வாள்வோனாலேயே
மன்னியர் - மதிக்கத்தக்கவர்.
மன்னிய - மதிக்க தக்க
ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து
தரும் - தரும்

முழுப்பொருள்
மன்னருடன் சேர்ந்தொழுகும் ஒருவருக்கு, முக்கியமாக அமைச்சருக்கு முக்கியமான இரு நெறிகளை திருவள்ளுவர் கூறுகிறார்.

1) மன்னர் விரும்புவற்றை மட்டும் சொல்லகூடாது. மன்னர் விரும்பாதவற்றை சொல்லாதிருத்தல் கூடாது. உதாரணமாக ஒரு நாட்டு அரசருக்கு தன்னுடைய நாடு கணினி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கவேண்டும் என்று ஆசைக்கொண்டு இருக்கிறார் என்றால், அவரிடம் அதற்கான முதலீடுகளை பற்றி கூறினால் அவர் பெரும்பாலும் உள்ளக்கிளர்ச்சியினால் அதற்கு சம்மதிப்பார். அவர் சம்மதிப்பார் என்பதற்காக அதனை பற்றி மட்டும் கூறக்கூடாது. அச்சமயத்தில் வாழ்வாதாரத்திற்கான தேவையான விவசாயம், சுகாதாரம் போன்ற பிரச்சனைகளை பற்றியும் பேச வேண்டும்.  ஆதலால் மன்னர் விழையாத செய்திகளைக்கூட மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மை என்றால் அதனை பற்றி மன்னரிடத்தில் அவசியம் கூற வேண்டும்.

2) அமைச்சர் என்பவர் அரசரிடத்தில் மதிக்கதக்க ஆக்கம் தரும் செயல்களை பற்றி பேச வேண்டும். ஒரு அரசர் என்பவர் மக்களின் தலைவர். அவர் மக்களின் நலனிற்காக செயல்படுகிறார், மக்களின் நாட்டின் வளங்களை பயன் படுத்துகிறார். ஆதலால் மக்களிடம் மதிக்கதக்க ஆக்கம் தரும் செயல்களை பற்றி அரசரிடம் பேச வேண்டும். 

அப்படிச்செய்தால் தான் அரசருக்கும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும். 

(பி.கு: இங்கே அரசர் என்பவரிடத்தில் தலைவர் என்றும் நாடு என்னும் இடத்தில் அலுவலகம் என்றும் கொள்ளலாம்.)

இதை ஆசாரக்கோவை பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.

அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்பப் பெருகியக் கண்ணுந் – திறப்பட்டார்
மன்னரின் மேம்பட்ட செய்யற்க செய்யின்
மன்னிய செல்வங் கெடும்.

அதாவது, அறிவுடையோர் தம்மாட்டுச் செல்வம் மிகப் பெருகிய விடத்தும், அறத்தினையுங் கல்யாணத்தினையும் முயற்சியையும் வீட்டினையும் அரசர் செய்வதினும் மேம்படச் செய்யாதொழிக; செய்வாராயின் தம்மாட்டுற்ற செல்வம் கெடும். இக்குறளின் விளக்கமாகவே இப்பாடல் உள்ளது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“பெரியார் உவப்பனதாம் உவவார்” (ஆசாரக் 64)
“அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்பப் பெருகியக் கண்ணும் - திறப்பட்டார்
மன்னரின் மேம்படச் செய்யற்க செய்பவேல்
மன்னிய செல்வம் கெடும்” (ஆசாரக் 85)

பரிமேலழகர் உரை
மன்னர் விழைப விழையாமை - தம்மால் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும். (ஈண்டு 'விழைப' என்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மை என்றிவை முதலாயின. இவற்றை ஒப்பிற்கு அஞ்சித் தாம் விழையா தொழியவே, அவ்வச்சம் நோக்கி உவந்து,அவர்தாமே எல்லாச் செல்வமும் நல்குவார் என்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பின் கேடு தரும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
எல்லார்க்கும் பொதுவாகக் கருதப்பட்டவையன்றி மன்னரால் விரும்பப்பட்டவற்றை விரும்பாதொழிக; அவ்விரும்ப¬£ம அம்மன்னராலே நிலையுள்ள செல்வத்தைத் தருமாதலான். அவை நுகர்வனவும் ஒப்பனை முதலாயினவுமாம். இஃது அவற்றைத்தவிர்தல் வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.

சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment