ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு

குறள் 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் 
வானம் நணிய துடைத்து.
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
ஐயத்தின் - ஐயம் - சந்தேகம்; அகப்பொருள்துறைகளுள்ஒன்று, ஐயக்காட்சி; ஐயவணி; இரப்போர்கலம்; பிச்சை; சிலேட்டுமம்; சிறுபொழுது; குற்றம்; மோர்.

நீங்கித் - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

தெளிவு - விளக்கம், துலக்கம்; உடற்செழிப்பு; பதநீர்; நினைவு; மனஅமைவு; அறிவு; நற்காட்சி; உளக்குறிப்பு; நீக்கம்; சான்று; ஆராய்வு; நம்பிக்கை; சாறு; கஞ்சித்தெளிவு; இலாபம்; பொருள்புலப்படஅமையும்செய்யுளின்குணம்; பாடற்பயன்வகை.
தெளிதல் - தெளிவாதல்; அமைதியுறுதல்; ஒளிர்தல்; வெண்மையாதல்; குணப்படுதல்; செழித்தல்; ஒழிதல்; துளைத்தல்; அறிதல்; முடிவுக்குவருதல்; ஆராய்தல்; தேறுதல்; நம்புதல்; இலாபம்காணுதல்.
தெளிந்தார்க்கு -  தெளிந்தவர்களுக்கு, மெய் உணர்ந்தவர்களுக்கு,

வையகம் - மண்ணுலகம்; விலங்குஇழுக்கும்வண்டி; கூடாரவண்டி; சிவிகை; ஊர்தி; உரோகிணிநாள்.
வையத்தின் - உலகத்தில்

வானம் - விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்தகாய்; உலர்ச்சி; உயிரோடுஇருக்கை; போகை; மணம்; நீர்த்திரை; புற்பாய்; கோபுரத்தின்ஓருறுப்பு.

நணியது - naṇi   n. நண்ணு-. Nearness, proximity; அணிமையான இடம்
உடைத்து - உடையது, இருக்கிறது

முழுப்பொருள்
வாழ்வின் உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று நோக்கி தன்னுள் உள்ள ஒவ்வொரு ஐயங்களையும் ஆராய்ந்து அதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் (நூல்கள் பல கற்தல், மெய்ப்பொருள் கண்ட சான்றோர்களுடன் உரையாடி விவாதித்தல் என்று பல வழிகளில்) மேற்கொண்டு மெய்ப்பொருள் என்ன என்ற தெளிவு தனை அடைவதே சிறப்பாகும். இல்லையேல் வாழ்வில் அடி மேல் அடி வாங்கி செல்வது காலத்தை விரையமாக்கும். அப்படி நெறியான வழியில் மெய்யுணர்ந்து அதன் படி வாழ்ந்தால் அவருக்கு வானம் எனப்படும் வீடு அல்லது தேவர்கள் வாழும் வானுலகம் என்னும் பேறு மிக அருகில் இருக்கிறது என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஐயம் நீங்கிஎம் அறிவுமதித் தொழுகிய” (பெருங் 4.8:68)

பரிமேலழகர் உரை
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணிய துடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து. (ஐயமாவது, பலதலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றின் துணிவு பிறவாது நிற்றல், பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ? எனத்துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் என்றும் அவர்க்குஅவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல்உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தன்வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார். கூறவே ஐயஉணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து. துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை
சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

No comments:

Post a Comment