தன்னைத்தான் காதல னாயின்

குறள் 209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் 
துன்னற்க தீவினைப் பால்
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தன்னைத், தான் சுயம்
தன்னைத் தான் - ஒருவன் தன்னையே சுயமாக
காதலன் - அன்பிற்குரியவன்; தோழன்; கணவன்; மகன்
ஆயின் - அப்படி ஆனால்
எனைத்து  - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு.
ஒன்றும் - சிறிதும்

துன் - துர் - tur   a prefix signiffing difficult, bad, evil, ill (opp. to சற், சன்). Before a consonant the ர் is often changed into a homogeneous letter (as in துஷ் கிருத்தியம், துன்மார்க்கம்,; துன்னாற்றம்).
ur
துன் - s. A prefix used in combination signifying evil, ill, bad, deficient; it is often changed to ற், before the hard let ters, to ன் before the soft, as துன்மார்க்கம். Before இடையினம், there is no change. Sometimes ர் is dropped and the relative letter takes its place--as துச்சரிதம், ஒருபசர்க் கை. (See துஷ்.) W. p. 414. DUR.

துன்னற்க - பிறர்க்கு துன்பம் நினைக்காதே, துன்பம் கொடுக்கும் செயல்களை செய்யாதே
தீவினைப் - பாவம்; கொடுஞ்செயல்; அக்கினிகாரியம்; தீவழிபாடு
பால் - குழவி, குட்டி முதலியவற்றை ஊட்டத் தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான நீர்மப் பொருள்; பிணத்தை அடக்கம் பண்ணின மறுநாள் அவ்விடத்திற்பாலும் நவதானியமும் சேர்த்துத் தெளிக்கும் சடங்கு; மரம் முதலியவற்றிலிருந்து வடியும் நீர்மப்பொருள்; வெண்மை; சாறு; பகுதி; அம்மை முதலியவற்றிலிருந்து கசியும் சீழ்; பிரித்துக் கொடுக்கை; பாதி; பக்கம்; வரிசை; குலம்; திக்கு; குடம்; குணம்; உரிமை; இயல்பு; ஊழ்; தகுதி; ஐம்பாற்பிரிவு; ஒருமை பன்மை என்ற இருவகைப் பாகுபாடு; அகத்திணை புறத்திணை என்ற பாகுபாடு; இடையர் குறும்பர்களின் வகை.

முழுப்பொருள்
பிறர்மீது அன்பு செலுத்துவது என்பது இயற்கை. தாய் நம்மை பாலூட்டி அரவணைத்து அன்பு செலுத்துவதனால் அன்பு செலுத்துகிறோம், தந்தை நம்மை பேணி காக்கிறார்கள் என்பதனால் அன்பு செலுத்துகிறோம், நமது மனைவி/கணவன் மீது அவரின் குணங்களினாலும் அவரின் பால் கொண்ட காமத்தினாலும் அன்பு செலுத்துகிறோம், நமக்கு பிறந்த குழந்தை ஆயிற்று என்பதனால் அன்பு செலுத்துகிறோம், நமது நண்பர்கள், உறவினர்கள், அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள் என்பதனால் அன்பு செலுத்துகிறோம். ஆதலால் பிறர் மீது அன்பு செலுத்துவதில் ஆச்சர்யமில்லை. அது மட்டும் இன்றி நமக்கு பிறரை பற்றிய முழுதும் தெரியாது. அவர்களின் நற்குணங்களை மட்டும் எண்ணி அவர் மீது அன்பு செலுத்துகிறோம்.

ஆனால் நம்மை நாம் அவ்வளவு எளிதாக உயர்வாக எண்ணிக்கொள்வது இல்லை. ஆதலால் நாம் நம்மை காதலிப்பது இல்லை. ஏன் என்றால் நமக்கு தெரியும் நாம் செய்த தவறுகள் எண்ணவென்று. ஆதலால் நம்மை நாம் அவ்வளவு நேசிப்பதில்லை.

நம்மை நாம் நேசிக்கவேண்டும் என்றால் நம்மை பற்றிய உயர்வான எண்ணங்களே நம்மிடம் இருக்க வேண்டும். நம்மை பற்றிய கீழ்மைகள் நம்மிடம் இருக்க கூடாது. கீழ்மை செய்தால் தான் கீழ்மையான எண்ணங்கள் வரும். ஆதலால், தன்னை தான் நேசித்துக்கொள்வதற்கு தனக்கும் சரி பிறர்க்கும் சரி துன்பம் தரும் செயல்களை சிறிதளவாயினும் ஒருபொழுதும் செய்யக்கூடாது.  தனக்கு தன்பம் தருவது என்பது உடலை பேணானது, மனதை பேணானது, எண்ணங்களை பேணாதது, நேரத்தை போற்றிப் பேணாதது, ஒழுக்கத்தைப் பேணாதது, அறத்தை பேணாதது, அடக்கத்தைப் பேணாதது என்று பலவற்றை சொல்லலாம். பிறர்க்கு தீங்கு என்பது உடல் முதல் மனம் வரை செய்யப்படும் தீங்கு பலவற்றை சொல்லலாம்.

மேலும் 
குறிப்பு: தீய செயல் செய்யுங் காலத்துப் பிறருக்குத் துன்பம் உண்டாக்குவதாகத் தோற்றினும் விளையுங்கலாத்துத் தனக்கே துன்பந் தருதலின் அது விலக்குதற்குரியது என்றவாறு.

எழுத்தாளர் வண்ணதாசனின் ஒரு கவிதையை வாசித்தேன்.. இக்குறள் நினைவுக்கு வந்தது. பிறருக்கு துன்பம் தறாத வாழ்க்கை எவ்வளவு மகத்தானது
தான் பிடித்த 
பட்டாம்பூச்சியை
அதன் சந்தோஷம் மாறாமல்
இன்னொரு கைகளுக்கு
மாற்ற முடிந்தவர்கள்
பாக்கியசாலிகள்
- வண்ணதாசன் (எ) கல்யாண்ஜி

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன்னைத் தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக. இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.

எழுத்தாளர் லதா என்பவர் கழிவறை இருக்கை என்ற ஒரு கட்டுரை தொகுப்பு புத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாக கலவி (sex) பற்றியும், பெண்ணியம் பற்றியும் ஒரு புத்தகம். பொதுவெளியில் உடலுறவு/கலவி பற்றிப் பேசாத சமூகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு நல்ல நூல். அதில் இருந்து சுய அன்பு/சுய மரியாதை பற்றிய சில பத்திகள் கீழே (அத்தியாயம் - 8 இல் இருந்து) (இது இக்குறளுக்கு முற்றும் சம்மந்தாமான பத்திகள் இல்லை. ஆனால் தன்னை ஒரு காதலிக்கு அன்பு எவ்வளவு முக்கியம். அதற்கு பெற்றோர், ஆசிரியர், சமூகம் செய்ய வேண்டியவை யாவை என்ற கோணத்தில் இருந்து. எல்லாவற்றையும் ஒருவரே செய்து விட முடியாதே. சூழ்நிலைகளுக்கும், சந்தர்ப்பங்களும் முக்கியம் தானே)

நம் மேலான சுய-அன்பையும் மரியாதையையும் அறவே ஒழித்துவிட்டு, மற்றவர்களிடம் அன்புடனும் மரியாதையுடனும் இருக்குமாறு நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுவது என்பது துயரமானதாகும் (உண்மையில் துயரம் என்பது குறைந்த மதிப்பீடே!). இந்தக்காரணத்தால், நாம் மற்றவர்களிடம் அன்பையும், மரியாதையையும் எதிர்பார்க்கிறோம். உண்மையில், நாம் அன்புக்கும் மரியாதைக்கும் யாசித்துக் கொண்டிருக்கின்றோம். நம்மீது அன்பையும் மரியாதையும் செலுத்த, நாம் மற்றவர்களையும் நிர்ப்பந்திக்கிறோம்.    

இந்த ஆழமான கருத்தைச் சிலர் மேலோட்டமாகப் பார்க்க முயன்று புரியாமல் போவதால், இது ஒரு புரியாத் தத்துவம் என கடந்து போக நினைக்கலாம். எனவே நாம் அதை வேறு கோணத்திலும் பார்ப்போம்.  எத்தனை பெற்றோர், ஆசிரியர், நண்பர், சுற்றத்தார், குழந்தைகளுக்குச் சுய அன்பு மற்றும் சுயமரியாதை குறித்து போதிக்கின்றனர்? நம் நாட்டில், சுய இன்பம் மட்டுமே விலக்கப்பட்ட விஷயமன்று; சுய அன்பும், சுயமரியாதையும் கூட விலக்கப்பட்ட விஷயங்களே! ‘சுய அன்பு’ என்பது ‘சுயநலம்’ என்றும், ‘சுயமரியாதை’ என்பது ‘அகங்காரம்’ என்றும் நிலைநிறுத்தப் படுகின்றன. இவை கட்டாயமாக வெவ்வேறானவை; ஆயினும், நம்மில் எத்தனை பேர் இதை உணர்ந்துள்ளோம்? 

ஒருவரின் செல்வம் முழுவதையும் அழித்துவிட்டு அவர் தான தருமம் செய்யவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க இயலும்? நம் எதிர்பார்ப்பில் ஒரு நியாயம் இருக்க வேண்டுமல்லவா? நான்  எத்துணை பணிவானவன் என மற்றவருக்குக் காட்ட நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தி என்னைச் செய்ய வைக்குமிடத்தில், நான் எப்படி என் சுய-அன்பையும் சுயமரியாதையையும் காப்பாற்றிக்கொள்ள முடியும்? மற்றவரின் வற்புறுத்தல் படி நான் வாழத்தொடங்கும் பொழுதே இவை எல்லாவற்றையும் நான் தொலைத்து விடுகிறேன். ஒவ்வோர் ஆன்மாவும் இங்குக் காற்றை போல் சுதந்திரமானது. ஆனால் அந்த ஆன்மாவை மற்றவருக்கு ஏற்றாற்போல் வடிவமைக்க முற்படுகையில் அங்கு ஆன்மா மரணித்து விடுகிறது. இப்படித் தொலைத்ததைத் தொலைத்ததைத் தேடித்தான் தன்னையே தேடுவதற்காகச் சிலர் ஆன்மிகம் என்ற பாதையை பிற்காலத்தில் நாடுகிறார்கள்.  வாழ்வே மாயம் எனத் தோன்ற ஆரம்பிக்கிறது. இந்த உலகின் சூதும் வாதும் புரியாத நிர்மலமான வயதில் தொலைத்ததை இனி எங்கே சென்று தேடுவது? 

அன்பில்லா இதயம் மட்டுமே சுயநல இதயமாகிறது. நம் உள்ளத்தில் அன்பு இல்லை என்று தெரியும். அதனாலேயே, மற்றவர்களுடைய இதயங்களிலும் அன்பு இல்லை என்று நினைக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், தத்தம் தேவைகளை மட்டும் பூர்த்திசெய்து கொள்ளும் முறை ஏற்படுகிறது. அதனால் நான் சுயநலவாதியாகிறேன். என்மேல் எனக்கு மரியாதை இல்லை, அதனால் மற்றவரும் என்னை மதிக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நான் மதிக்கப்பட வேண்டியவன் என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு, நான் அகந்தை உடையவன் ஆகிறேன். சுய அன்பும், சுயமரியாதையும் இல்லாத காரணத்தால் உண்டாகும் மாயையே இது. 

பெற்றோர், ஆசிரியர், மூத்தோர் ஆகிய நாம், அன்பும் மரியாதையும் கொண்ட வாழ்க்கையை அமைத்துக்கொள்ளல் வேண்டும். குழந்தைகள், இதை உள்ளுணர்வில் அறிந்துகொண்டு, இயல்பாகவே அன்புள்ளத்துடனும், மற்றவரை மதிக்கும் குணமுடையவர்களாகவும் இருப்பர். அன்பையும், மரியாதையையும் வெறும் சொற்களால் கற்றுத்தரத் தேவையில்லை. தங்களுடைய பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் அன்பையும் மரியாதையையும் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைகள், உண்மையாகவே, அவர்கள் வாழ்வில் காணும் ஒவ்வோர் ஆண் பெண்ணுடனும் அன்புடன் இருப்பார்கள். செயல்கள், சொற்களை விட உரக்கப் பேசும் என்பதை அறிந்திருக்கிறோம்.  என்னைக்கேட்டால், “செயல் ஒன்றே போதுமானது; மற்றவை தன்னிச்சையாக அதனதன் இடத்தில் அமர்ந்துகொள்ளும்” என்பேன்.

அன்பையும் மரியாதையையும் எப்போதும் கற்றுக்கொடுக்க வேண்டியதுமில்லை; அதற்கான தேவையும் இல்லை. எப்படி ஒரு ரோஜா பூக்கும் சமயத்தில் அதன் மணத்தையும் கொண்டுவருகிறதோ, அப்படியே, ஒரு குழந்தை பிறக்கும் போது, அன்பையும் கொண்டுவருகிறது.

English Meaning - As I taught a kid - Rajesh
If you want to love yourself, even if small do not even think and do not anything bad to others or yourself. Because if you do something bad your heart/conscience itself will burn/kill you

Questions that I ask to the kid
In order to love yourself, what should you do and not do? Why (because conscience will know)?

No comments:

Post a Comment