அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

குறள் 72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம், அருள், பக்தி, கருணை,பக்தி,நேசம் , பாசம் 

இலார் - இல்லாதவர்

எல்லாம் - எல்லா பொருள்களும்

தமக்கு - தனக்கு மட்டும்

உரியர் - உரி - உரி-மை கொண்டாடுபவர்

அன்பு - அன்பு

உடையார் - உடையவர்கள்

என்பும் - என்பு - எலும்பு; எலும்புக்கூடு; உடம்பு; புல்

உரியர் - உரிமை உண்டு

பிறர்க்கு - மற்றவர்களுக்கு 

முழுப்பொருள்
மனிதர்களிடம் அன்புடைய நெஞ்சங்களை பற்றி பேசுகிறார் திருவள்ளுவர். பிறரின் பால் துளியும் அன்பு இல்லாதவர்கள் தன்னுடைய செல்வங்களையும் தனக்கு பெற்றோர்வழி வந்த செல்வங்களையும் தனது தனது என்று தனக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாடுவர். தன் உற்றார் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு என்று ஒரு இம்மியளவும் உதவாதவர்கள். இவர்களுக்கு இயற்கையின் மீதும் சிறிதும் அன்பு இல்லாதவர்கள். இயற்கை வளங்களை சூரையாடுவது, அழிப்பது, மாசு படுத்துவது என்று அனைத்தையும் செய்யக்கூடியவர்களே. ஆதலால் தான் திருவள்ளுவர் இவர்களை அன்பிலார் எல்லாம் தமக்குரியர் என்கிறார்.

ஆனால் பிறர் மீது, பிற உயிர்கள் மீது, இயற்கையின் மீது அன்பு கொண்டவர்கள் தன்னுடைய எல்லா செல்வங்களும் மற்றவர்களுக்கு என்று மட்டும் இல்லாமல் தன் உடம்பும் கூட மற்றவர்களுக்கு என்று எண்ணுபவர்கள். உள்ளத்தால் மட்டும் அன்பு செலுத்தாமல் தன் உடம்பால் கூட அனைத்து உழைப்பையும் கொடுத்து அன்பு செலுத்துவார்கள். தான் வாழ்வது தனக்கான ஒன்றாக இல்லாமல் பிறர்க்காக வாழ்வதே சிறந்தது என்று எண்ணி வாழ்பவர்கள்.

இதனால் தான் வள்ளுவர் பின்பு 



உதாரணமாக: ததீசி முனிவரின் முதுகெலும்பு வஜ்ராயுதமாக மாறியதை பார்ப்போம்.

புராணங்களிலே, இந்திரன் வஜ்ராயுதத்தைப் பெற்ற வரலாறு பேசப்படுகிறது. விருத்திராசுரனை வதைக்க, வலிமைமிக்க ஆயுதம் இந்திரனுக்குத் தேவைபட்டபோது, திருமாலின் வழிகாட்டுதலில், மிகவும் தவவலிமையும், சற்றும் ஆசை, பொறாமை இல்லாமல் தனக்கென வாழா தகைமை உடைய ததீசி முனிவரின் முதுகெலும்புக்கே அவ்வலிமை உண்டென்பதை அறிந்து, அவரைச் சென்றடைந்து வேண்டவும், அவரும் சற்றும் தயங்காது, தன் உயிரைமாய்த்துக்கொண்டு, அவ்வெலும்பை இந்திரனுக்கு ஈந்ததார். அவ்வெலும்பைக்கொண்டு வஜ்ராயுதம் என்கிற வலிமைமிக்க ஆயுதத்தை உருவாக்கிக்கொண்டான் இந்திரன்.

இந்திய அரசின் உயர்ந்த விருதான “பரம் வீர் சக்ரா”வில் உயர்ந்த தியாகத்துக்கும், வலிமைக்கும் அடையாளமாக, தீயசக்திகளை அழிக்கும் வலிமைமிக்க ஆயுதமான இவ்வெலும்பினால் செய்யப்பட்ட வஜ்ராயுதத்தின் படமே உள்ளது என்பது அறியப்படவேண்டிய செய்தி.

Param-vir-chakra-medal.png
(பரம் வீர் சக்ரா விருதின் பதக்கம்)

எழுத்தாளர் ஜெயமோகன் உரை (சுட்டியைத் தட்டவும்)
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”

என்பது ஒரு நீதியே அல்ல, ஒரு பெரும் மானுடக் கனவு மட்டுமே. மானுடத்தை இன்று வரை இயக்கி வரும் ஒரு மகத்தான இலட்சியக் கற்பனை. இவ்வெல்லையை சென்று தொடுவதனால் தான் குறள் நீதி நூலாக அல்லாமல் பேரிலக்கியமாக ஆகிறது.

மேலும்: அஷோக் உரை

 1999 இல் ஒருமுறை நான் ஏதோ பேருந்து நிலையத்தில் ஒரு குமுதம் வாங்கினேன். காத்திருந்து சலித்து அதில் உள்ள எல்லா வரிகளையும் வாசித்தேன். அதில் ஒரு கதை கந்தர்வன் எழுதியது.

ஒர் இளம்பெண்ணை அவளைவிட சிறுவயது இளைஞன் ஒருவன் பேருந்தில் கூட்டிச்செல்கிறான். கூடவே ஒரு கைப்பிள்ளைக்காரி. பிள்ளை இந்தப்பெண்ணின் பிள்ளை போல் இருக்கிறது. கூட்டமில்லாத இரவுப்பயணம். பெண் நிலைகொள்ளாமல் இருப்பதை எல்லாரும் கவனிக்கிறார்கள். அவள் ஏறும்போதே அரைமயக்கத்தில் இருப்பது போல் இருக்கிறாள். முந்தானையைகூடப் பிள்ளைக்காரி ஒருத்தி தூக்கித் தூக்கி விடவேண்டியிருக்கிறது. பெண் ஏதோ முனகுகிறாள், அழுவதுபோல ஒலி எழுப்புகிறாள்.

சட்டென்று அந்தப்பெண் எழுந்து கூச்சலிடுகிறாள் ”பாவிகளா பொய் சொல்லாதிங்கடா… கண்ணு அவிஞ்சு போயிடும்டா . காளி கேப்பாடா உங்களை.வெட்டோடை காளி கேப்பாடா உங்களை” அந்த இளைஞனும் கைப்பிள்ளைக்காரியும் அவளை சமாதானம் செய்கிறார்கள். வலுவாக இழுத்து அமரச்செய்கிறார்கள்.

டிரைவரின் முதுகைப்பாத்து ”இபப்டித்தானே வந்தான், நான் அவன்கிட்ட பேசவே இல்லியே…டேய் பாவிகளா…வெட்டோடை காளி கேப்பாடா” இளைஞன் அந்தப்பெண்ணை இழுத்து அமரச்செய்து ரகசியமாக அதட்டுகிறான். அவள் கைகளை முரட்டுத்தனமாகப் பிடித்து முறுக்கி அடக்குகிறான்.

ஆனால் அவள் கொந்தளித்துக்கொண்டே இருக்கிறாள். மீண்டும் கூச்சல் ”நான் உத்தமிடா, நான் பத்தினிடா” அவளை அமரச்செய்ய இளைஞனால் முடியவில்லை. அவள் முந்தானை இழுபட எழுந்து நின்று பெருங்குரலில் ”டேய் நான் உத்தமிடா..பத்தினிடா நான்”என்று கூவுகிறாள்

இளைஞன் அவளை மாறி மாறி செவிட்டில் அறைந்து இழுத்து அமரச்செய்கிறான். அடி அவள் மேல் படவேயில்லை என்பது போல அவள்” மாத்திரையைப்போட்டு என்னை சாவடிக்கப் பாக்கிறியா? ஏண்டா என்னை அடைச்சு வைக்கிறே? டேய் நான் பத்தினிடா” என்றாள். அவன் அடிக்கிறான், இழுத்து அமரச்செய்துவிட்டு மீண்டும் மூர்க்கமாகத் தாக்குகிறான்.

பேருந்தில் இருப்பவர்கள் அனைவருமே சங்கடம் கொள்கிறார்கள். அந்தப்பெண்ணுக்கு மனநிலை சரியில்லை என்று தெரிகிறது. டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு எழுந்து வந்து ”மேலூரிலே இருந்து உசுரை எடுக்குது சத்தம்” என்று அதட்ட இளைஞன் சங்கடமாக மன்னிப்புக் கோரும் பாவனையில் பார்க்கிறான். ”இப்படியெல்லாம் பொது பஸ்ஸிலே கூட்டிட்டு வரலாமா? மத்தவங்களுக்குக் கஷ்டம்ல?” என்று ஒருவர் கேட்கிறார்

அவள் தம்பிதான் அந்த இளைஞன். பிள்ளைக்காரி அவன் மனைவி. அக்காவை மதுரையில் இருந்து கூப்பிட்டுக்கொண்டு செல்கிறார்கள். ”எப்பவும் மாத்திரை சாப்பிட்டா தூங்கிடுவாங்க…இன்னைக்கு சாப்பிட மாட்டேன்னு சொல்றாங்க” என்கிறான் இளைஞன். அவர்கள் புதுக்கோட்டையில் இறங்குகிறார்கள். வீடுவரைக்கும் டாக்ஸியில் போகப் பணமில்லை. ஆட்டோ வைக்கலாமா என்று யோசிக்கிறார்கள். அந்தப்பெண் ‘டேய் பத்தினிடா…நான் பத்தினிடா” என்று அலறுகிறாள். பேருந்து நகர்கிறது.

அந்த நள்ளிரவில் எனக்கு வேர்த்துவிட்டது. அன்று என்னிடம் செல்பேசி இல்லை. இருந்திருந்தால் தமிழகத்திலுள்ள அத்தனை நண்பர்களையும் கூப்பிட்டு சொல்லியிருப்பேன். தமிழின் மகத்தான சிறுகதைகளில் ஒன்று இது. சிறுகதை என்ற வடிவம் எதற்காக உள்ளதோ அதைப் பயன்படுத்திக்கொண்ட ஆக்கம்.

அந்தப்பெண்ணின் கதை என்ன? எதற்காக அவள் அப்படிக் கதறுகிறாள்? மாபெரும் அநீதி ஒன்றின், ஆற்றமுடியாத துயரம் ஒன்றின் கதை புதைந்து கிடக்கிறது இந்த சிறு நிகழ்ச்சியில். ஏதோ உடம்பிலிருந்து வெட்டுப்பட்டு நம் பாதையில் கிடந்து அதிரும் உயிருள்ள தசைத்துண்டு போல இருந்தது அந்தக்கதை.

நான் ஊருக்கு வந்ததுமே குமுதத்துக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதி அக்கதை ஒரு சாதனை என்று சொன்னேன். என் நண்பரும் வாசகருமான ஒருவருக்கு எழுதிக் குமுதத்திலும் விகடனிலும் கந்தர்வன் எழுதிய எல்லாக் கதைகளையும் எடுத்துத் தரச்சொன்னேன். பல கதைகளில் தமிழின் பெரும் கதைசொல்லி ஒருவரைக் கண்டு கொண்டேன்.

கந்தர்வனின் விலாசத்தைத் தேடி அவருக்கு ஒரு கடிதம் போட்டேன். அவர் எழுதிக்கொண்டிருப்பவை தமிழின் மாபெரும் சிறுகதைகள் என்று சொன்னேன். அவர் எனக்கு பதில் ஏதும் போடவில்லை. அடுத்து விகடனில் கந்தர்வனின் இன்னொரு சிறந்த கதையான ‘தாத்தாவும் பாட்டியும் ‘ வந்திருந்தது.

கச்சிதமான சிறிய கதை அது. இரு கதாபாத்திரங்கள். தாத்தா நித்யகல்யாண ஆசாமி. எந்தப்பொறுப்பும் இல்லாதவர். சொத்தை அழித்த சொகுசுக்காரர். தன் சாப்பாடு, தன் சௌகரியங்கள் அல்லாமல் எதைப்பற்றியும் கவலை இல்லாதவர். பாட்டி அவர் மீது நீங்காத பிரியம் கொண்ட மனைவி. அந்தப் பிரியமே அவரை அப்படி வைத்திருக்கிறது என்று கூடச் சொல்லலாம். அந்தப்பிரியம் பாட்டிக்கு அத்தனைபேர் மீதும் இருக்கிறது.

ஆகவே சொத்து பங்கு வைக்கும்போது மகன்களும் மகள்களும் அம்மா என்கூட வந்து இருக்கட்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். சண்டை போடுகிறார்கள். ஆனால் யாருமே தாத்தாவைத் தங்கள் கூடவே வைத்துக்கொள்ளத் தயாராக இல்லை. அவரைப்பற்றிய பேச்சே எழுவதில்லை என்பதைப் பஞ்சாயத்தார் கவனிக்கிறார்கள்.

பிள்ளைகள் எல்லாருமே நல்ல நிலையில் இருக்கிறார்கள். கடைசிப்பெண் மட்டும்தான் கஷ்டப்படுகிறார். அவள் கணவன் ராசு மைத்துனன்களுக்கு எடுபிடியாக இருந்து வசைகள் வாங்கியே தன் ஆளுமையை இழந்து அப்பிராணியாக ஆனவர். ‘அப்பத்தா நீ யாருடன் இருக்கிறாய்?’ என்று அம்மாவிடம் கேட்கிறார்கள். அம்மா ‘ராசு கூட இருக்கேன்’ என்று உறுதியாகச் சொல்லிவிடுகிறாள். பிள்ளைகளுக்குப் பேரதிர்ச்சி. ராசு வீட்டில் ஒழுங்காக சாப்பாடே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ராசு முகம் மலர்கிறது. அம்மா பிடிவாதமாக இருக்கிறாள்.

அப்பாவுக்கு பிள்ளைகள் சேர்ந்து ‘சவரட்சணை’ செலவு கொடுப்பது என்று முடிவாகிறது. தாத்தா காதில் கைவைத்து எல்லாவற்றையும் கேட்டுவிட்டுத் தன் தேவைகளைச் சொல்கிறார். மாதம் ஒரு பிள்ளை அல்லது பெண் அவரைப் பராமரிக்க வேண்டும். காலையில் ஒரு தேக்சா வெந்நீர் குளிப்பதற்கு.குளியல் பொருட்கள் எல்லாம் தேவை. காலைப்பலகாரம் ஐந்து சூடான இட்டிலிகள், தொட்டுக்கொள்ளும் வகையறாக்கள். மதியம் வாழை இலையில் சூடான சோறும் குழம்பும் இரு தொட்டுக்கொள்ளும் விஷயங்களும். இரவும் அதேபோல சுடுசோறும் குழம்பும் பொரியலும். இதைத்தவிர டீ காபி முதலியவை. கைச்செலவுக்கு காசு. ராசு சித்தப்பா வீட்டில் அம்மா தங்குவதனால் அவருக்கு விதிவிலக்கு.

தாத்தா குடும்பத்தின் எந்தக் கஷ்டத்தையும் கண்டுகொள்பவரல்ல. உடம்பெங்கும் விபூதி சார்த்தி திண்ணைச்சுவர் முழுக்க சாமிபடங்கள் மாட்டி எந்நேரமும் பூஜையில் இருப்பார். அவர் தங்கியிருந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு டைபாயிடு கண்டு உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. ஆனால் தாத்தா ஆருத்ரா தரிசனத்துக்கு திரு உத்தர கோச மங்கை போகவேண்டுமென்று பாடிக்காட்டிக்கொண்டிருக்கிறார். கோபமடைந்த மகன் பூஜைப்பொருட்களை அள்ளி முற்றத்தில் வீசிவிடுகிறான். ஆனால் அதற்கும் சேர்த்து தாத்தா அபராதம் போடுகிறார்

படிப்படியாக விவசாயம் நொடிக்கிறது. குடும்பங்களில் பட்டினி கிளம்புகிறது. ஆனாலும் தாத்தாவுக்கு அவரது சேவைகள் கிடைத்தாகவேண்டும். அவருக்கு மட்டுமாக கைப்பிடி அரிசியும் உளுந்தும்போட்டு அரைத்து ஐந்தே ஐந்து இட்டிலி சுட்டு கொடுத்துவிட்டுப் பிள்ளைகளுக்குக் கஞ்சியும் களியும் கொடுக்கிறார்கள்.அவர் இட்டிலி சாப்பிடுவதைப் பிள்ளைகள் எட்டிஎ ட்டிப் பார்க்கின்றன.

எந்தப்பட்டினியில் இருந்தாலும் சரியான வேளைக்கு தாத்தாவுக்குச் சாப்பாடு தேவை. சாப்பிடக்கூப்பிட்டால் உரக்க ‘நான் தயார்’ என்று கத்துவார். அந்த சொற்றொடரே அவருக்கு அடைமொழியாக ஆகிவிட்டது. நீண்டநாள் உயிர்வாழ்வதற்காக தாத்தா வெங்காயத்தை நசுக்கி சாப்பிட்டு அந்த வாசனையுடன் இருக்கிறார்.

மறுபக்கம் பாட்டி ராசு குடும்பத்தின் பட்டினியைப் பங்கிட்டுக்கொள்கிறாள். ராசு சித்தப்பா பகல் முழுக்க அரிசிக்கு பணம் தேடி அலைந்து ஏமாந்து திரும்புகிறார். சித்தி முகம் வீங்கி அமர்ந்திருக்க பாட்டி சோளத்தையோ கம்பையோ மிச்சம் பிடித்திருந்ததை வைத்து கூழ் காய்ச்சிக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறாள். அந்த வீட்டில் எப்போதும் களியும் கூழும்தான். பிரிந்துபோன மற்ற வீடுகளில் எப்படியோ சாப்பாட்டுக்கு ஒப்பேற்றி விடுகிறார்கள். ரங்கூனில் இருக்கும் பிள்ளைகள் வீடுகள் செழிப்பாகவே இருக்கின்றன. அவர்கள் நயந்தும் பயந்தும் பாட்டியைக் கூப்பிட்டுப் பார்க்கிறார்கள். பாட்டி மறுத்துவிடுகிறார்.

எந்நேரமும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு வாதநாராயண மரத்தடியில் அமர்ந்திருக்கும் பாட்டி ”உங்க தாத்தா ஊரிலே இருக்காரா?” என்று எங்கோ இருப்பவரைக் கேட்பது போல தாத்தா பற்றி விசாரிக்கிறாள். உண்ணாமல் வைத்து பேரப்பிள்ளைகளுக்குக் கொடுத்து தொடர்பட்டினியால் நைந்து பாட்டி இறக்கிறாள். ‘ஒருவருஷம் கூழுமட்டும் குடிச்சா தாங்குமா’ என்கிறார் வைத்தியர். பாட்டியைத் திண்ணைக்கு கொண்டுவந்துபோடுகிறார்கள். பிள்ளைகள் அலறியடித்து வந்து கூடுகிறார்கள். பால்தயிர் கலந்து ஊட்டுகிறார்கள். ஹார்லிக்ஸ் புட்டிகள் ஆரஞ்சு ஆப்பிள்கள் வந்திறங்குகின்றன…பாட்டி அவற்றைப் பார்க்காமலேயே செத்துப்போகிறாள்.

கல்யாணமரணம். ஆகவே கொட்டு பேண்ட் மேளத்துடன் இழவு எடுக்கிறார்கள். பதினாலு ஊர் அழைப்பு உண்டு. உள்ளே ஏதோ சடங்கு நடக்க தற்காலிகமாக மேளங்கள் நின்றன. அந்த அமைதியில் யாரோ யாரையோ அழைக்க தன்னைத்தான் அழைப்பதாக எண்ணிக்கோண்டு திண்ணையில் எந்தக்கவலையும் இல்லாமல் இருந்த தாத்தா ‘நான் தயார்’ என்று கூவுகிறார்

கந்தர்வனின் இந்தக்கதையில் இரு குணச்சித்திரங்கள் வாழ்க்கையின் இரு துருவங்கள் போல எதிரெதிராக நிற்கின்றன. இந்த விசித்திரமான முரணுக்கு எந்த விளக்கமும் வாழ்க்கையை வைத்துச் சொல்லிவிடமுடிவதில்லை. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்று வள்ளுவர் கூட அந்த வியப்பையே பதிவுசெய்துவிட்டுச் செல்கிறார்.



ஒப்புமை
”பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர்வரை யன்னே” (புறநா 108:5-6)

“நெகுதற் கொத்த நெஞ்சம் நேயத் தாலே யாவி
உகுதற் கொத்த வுடலும் உடையேன்” (கம்ப.நகர்ங்கு 60)

பரிமேலழகர் உரை
அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர். (ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். என்பும் உரியராதல் 'தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்' (புறநா.43) முதலாயினார் கண்காண்க.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையுந் தமக்கே பயன்படுத்துவர்; அன்பு உடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையாரோ பிறிதின் கிழமைப்பொருள்களை மட்டுமன்றித் தற்கிழமைப் பொருளாகிய தம் உடம்பையும் பிறர்க்குப் பயன் படுத்துவர்.

பிரிநிலையேகாரமும், 'உரியர்' என்னும் வினைக்கேற்ற 'எல்லாவற்றாலும்' 'என்பாலும்' என்னும் கருவி வேற்றுமையுருபுகளும் தொக்கன. எலும்பு என்பதன் மரூஉவான 'என்பு' சினையாகுபெயர் . உம்மை சிறப்பும்மை , உடம்பைப் பிறர்க்கு உதவிய அன்பிற்கு, தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்காகத் தன் தசையையும் உடம்பையும் அளித்த செம்பி ( சிபி ) என்னும் சோழ வேந்தன் கதை எடுத்துக் காட்டாகக் கூறப்பெறும். ஆயின், அதனினும் சிறந்த எடுத்துக்காட்டு, தன் தம்பியால் தன் நாடு கொள்ளப்பட்டுக் காட்டிற்போய்த் தங்கியிருந்த குமணன், தன்னைப்பாடிய பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர்க்குத் தன்தலையை வெட்டிக்கொண்டுபோய்த் தன் தம்பியிடங் காட்டிப் பெரும் பொருள் பெறுமாறு தன் வாளைக் கொடுத்ததாகும். இதை,

பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்
நாடிழந் ததனினு நனியின் னாதென
வாள்தந் தனனே தலையெனக் கீயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்

என்று (புறம்.165 ) அப்புலவர் பாடியதினின்று அறிந்து கொள்க. இனி, பாரி தன்னையும் பரிசிலர்க்குத்தர அணியமாயிருந்ததும் இத்தகைய செயலாம்.

"பறம்பு பாடின ரதுவே யறம்பூண்டு 
பாரியும் பரிசில ரிரப்பின்
வாரே னென்னான் அவர்வரை யன்னே".

என்று ( புறம்.108 ) கபிலர் பாடியிருத்தல் காண்க.

மணக்குடவர் உரை
அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்: அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர். அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று.

மு.வரதராசனார் உரை
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

சாலமன் பாப்பையா உரை
அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
சுயநலவாதிகளிடம் அன்பைத் தேடாதீர்கள்.

பொருள்: அன்பு இல்லார் எல்லாம் தமக்கே உரியர் - அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரியர் ; அன்பு உடையார் என்பும் பிறர்க்கே உரியர் - அன்பினை உடையவர் (தம்) உடம்பையும் பிறர்க்கே உரியர்.

அகலம்: இல்லார் என்பதன் லகர வொற்றும், ஏகார மிரண்டும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. என்பு என்பது ஆகு பெயர், அதனை உடைய உடம்பிற்கு ஆயினமையால். பிறர்க்கே-பிறர்க்காகவே. உரியர்‡உடையர். நச்சர் பாடம் ‘உரிய பிறர்க்கு’.

கருத்து: அன்புடையார் தமது உடைமைகளை யயல்லாம் துன்புற்ற பிறர்க்கு வழங்குவர்.

English Meaning - As I taught a kid - Rajesh
There are only two kinds of people says Thiruvalluvar
1) Loveless people hold everything to themselves. They will hold all their wealth, their ancestors wealth etc They won't give even a grain of sand to others. Love is not just w.r.t people it is even w.r.t nature. For e.g., People who don't have any love for nature would loot the nature wealth (mines), pollute the nature(air, river, oceans, underground  water, land) and destruct the nature (forests, mining areas) through many means. 
2) Those who are filled with love bear even their bones for others. 
Unfortunately, the world is not full of people with Love. 

In this Kural, Thiruvalluvar paints a great ambition for humanity. i.e. World filled with people who are filled with love. 

Questions that I ask to the kid
What are the two types of people in this world?
What is the great ambition that Thiruvalluvar paints for humanity?

No comments:

Post a Comment