Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

ஆற்றுவார் ஆற்றல் பசி

குறள் 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

ஆற்றுவார் - தவம் ஆற்றுபவர்கள் / நோன்பு இருப்பவர்கள்

ஆற்றல் - நெடும் நேரம் தவம் (நோன்பு) இருக்கும் வல்லமை, மன உறுதி.

பசிஆற்றல் - தன் பசியை பொருட்படுத்தாது பொறுத்தல் எனும் வல்லமை / ஆற்றல்

அப்பசியை - அத்தகைய கொடும் பசியை

மாற்றுவார் - மற்றவர்களிடம் பசியை போக்குவார்; அதாவது அன்னம் (உணவு) (அல்லது தானம்) இட்டு பசியை போக்குவது.

ஆற்றலின் - வல்லமைக்கு / வலிமை

பின் - பிறகு தான்

முழுப்பொருள்
தவம் இருப்பவர்கள் நெடு நேரம் தன் பசியைப் பொருட்படுத்தாது பசியைப் பொறுத்தல் வேண்டும். அதற்கு மிகுந்த மன உறுதியும் ஆற்றலும் வேண்டும். அத்தகைய ஆற்றல் போற்றத்தக்கது. ஆனால் அத்தகைய ஆற்றல் ஒருவர் மற்றவரின் பசியை தானத்தினால் (கொடையால், ஈகையால்) போக்கும் (தானம் கொடுப்பது, தானத்திற்கு ஊதியமில்லாமல் செல்லும் உடலுழைப்பு) ஆற்றலுக்கு அடுத்தபடியே. ஆக ஈகை நன்று என்கிறார் திருவள்ளுவர்.

"ஐயமிட்டு உண்", "தானமது விரும்பு", என்று ஒரே வரியில் இரண்டு வார்த்தைகளில் ஒளவையார் ஆத்திச்சூடியில் கூறியிருப்பார்

நன்றி: அஷோக்
பெரியாரைப் பிழையாமை அதிகாரத்தின் முதற்குறளிலும் (891, சான்றாண்மை அதிகாரத்தின் ஐந்தாவது குறளிலும் (985) “ஆற்றுவார் ஆற்றல்” என்ற தொடரே துவக்கமாக உள்ளது. இவ்விரண்டிலும், தாங்கள் எடுத்துக்கொண்ட கருமத்திலே ஆற்றலில் சிறந்தவர்களில் என்றே பொருள்கொள்ளப்படுகிறது. உண்ணா நோன்பிருக்கும் வலிமையும் ஆற்றலும் தவத்தில் சிறந்தவர்களுக்கே இயலுமாகையால், ஆற்றுவார் ஆற்றல் என்பது, இவண் அவர்கள் மேலே ஏற்றிச் சொல்லப்பட்டது.

குறட் கருத்து (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் )

பசி தாங்கி பல விதத்தில் தவங்கள் செய்யும்
பரம் தேடி நின்றிருக்கும் தவ நெறியார்
கசிகின்ற காதலிலே கடவுளையே
காலமெல்லாம் நினைக்கின்ற மிகப் பெரியார்
பசி தீர்த்து மற்றவரின் துன்பம் தீர்த்து
பண்பதுவே பசி தீர்த்தல் என்று வாழும்
இசை வாழ்வாய் தன் வாழ்வை மாற்றிக் கொண்ட
எளியார் பின் துறவியரை வைப்பேன் என்றார்

குறட் கருத்து 2 (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் )
புலன்களையே வென்று நிற்கும் துறவியரை
பொறுப்பான நல் மனிதர் தமக்குப் பின்னே
உளர் என்று வள்ளுவரும் சொல்லுகின்றார்
உலகுக்கு வழிகாட்டும் பொதுமறையில்
வளர்கின்ற பசிதன்னைப் பொறுத்து வெல்லும்
வடிவான துறவியரை விடவும் மற்றோர்
தளர்வானின் பசி தன்னைத் தீர்த்து வைக்கும்
தனி மனிதர் மிக உயர்ந்தார் என்றே சொன்னார்

மற்றுமொரு கண்ணோட்டம் (நன்றி: தியாகராஜா ராஜராஜன்)
வரியம் முன்னூத்து அறுபத்தைஞ்ஞு நாளும் விரதம் கிடக்கிறம் பேர்வழி எண்டு கடவுளை கும்பிடாமல் பசிக்கிது எண்டு வாறவனுக்கு வயிறு குளிரப்பண்ணி அனுப்பிறதுதான் உலகத்திலேயே பெரிய கொடை.

பசியை பொறுத்துக்கொள்ளும் நோன்பை கடைப்பிடிப்பதைவிட பிறரின் பசியை போக்குவது தலை சிறந்தது

பரிமேலழகர் உரை
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல்-தவத்தான் வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்- அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின். 
விளக்கம்
(தாமும் பசித்துப் பிறரையும் அது 'தீர்க்க மாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் அற்றல் நன்று என்பதாம்.) ---

மணக்குடவர் உரை
பெரியாரது பெருமையாவது பசியைப் பொறுத்தல்: அதுவும் பெரிதாவது பிறர் பசியைத் தீர்ப்பாரது பெருமைக்குப் பின்பு. இது தவம்பண்ணுவாரினும் தானம் பண்ணுவார் வலியுடைய ரென்றது.

சாலமன் பாப்பையா உரை
வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் - (தவம்) இயற்றுவாரது வலிமை (தம்) பசியைப் பொறுத்தல்; (அஃது) அப் பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - அஃது (பசித்தோர்க்கு உணவு கொடுத்து) அப்பசியை நீக்குவாருடைய வலிமைக்குப் பின் நிற்பது.

அகலம்: அஃது என்பது தோன்றா எழுவாயாக வருவிக்கப்பட்டது. பின் என்பது ஆகுபெயர், பின் நிற்பதற்கு ஆயினமையால்.

கருத்து: ஈகை தவத்திலும் மேற்பட்டது.

No comments:

Post a Comment