Index Pages

Monday, March 20, 2017

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை

குறள் 891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
[பொருட்பால், நட்பியல், பெரியாரைப் பிழையாமை]

பொருள்
ஆற்றுவார் - எடுத்த செயலை தன் அறிவார், மிகுந்த முயற்சியால் வெற்றிகரமாக முடிப்பவர்
ஆற்றல் -  சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்

இகழ்ச்சி - அவமதிப்பு; குற்றம் விழிப்பின்மை; வெறுப்பு
இகழாமை - அவமதிக்காது இருத்தல்

போற்றுதல் - துதித்தல், வணங்குதல், பாதுகாத்தல், வளர்த்தல், பரிகரித்தல், கடைப்பிடித்தல், உபசரித்தல், விரும்புதல், கருதுதல், மனத்துக்கொள்ளுதல், கூட்டுதல்
போற்றுவார் - நம்மை பாதுகப்பார்
போற்றலுள் - வணங்குதலில்
எல்லாம் - எல்லாவற்றிலிலும்
தலை - சிறந்தது

முழுப்பொருள்
ஒரு செயலை எடுத்து அதற்கு தேவையான விடாமுயற்சியினை எடுத்து வெற்றிகரமாக முடிப்பவரே ஆற்றுவார் ஆவார். அவருடைய ஆற்றலை அதாவது வலிமையை குறைத்து மதிப்பிடவோ இகழவோ கூடாது.

அதுபோல நம்மை பாதுகாக்கும் பெரியோர்களை (சான்றோர்களை) இகழாது போற்றுவதே (பாதுகாப்பது, வணக்குவதே) சிறந்ததாகும். (அல்லது) நம்மை பாதுகாத்து கொள்ள இப்பெரியோர்களுடைய தயவு பின்நாளில் தேவைபடக்கூடும். ஒருவேளை அவர்களை இகழ்ந்திருந்தால் அவருடைய தயவு கிடைக்காமல் போகும். நம்மை காத்துக்கொள்ளவதில் சிறந்தது பெரியோரை இகழாது போற்றுவது ஆகும். 

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக்கொண்டன யாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தங்கண் தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது. (ஆற்றல் என்பது பெருமை,அறிவு,முயற்சி என்னும் மூன்றன் மேலும் நிற்றலின், சாதியொருமை. இகழ்ந்தவழி களைய வல்லார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும், அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின் அவ்விகழாமையைத் தலையாய காவல் என்றும் கூறினார். பொதுவகையால் அவ்விருதிறத்தாரையும் பிழையாமையது சிறப்பு இதனால் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக்கொண்ட வினை முயற்சிகளை யெல்லாம் வெற்றியாக முடிக்கவல்லவரின் வல்லமையைத் தாழ்வாக மதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தமக்குக் கேடுவராமற் காத்துக் கொள்வார் செய்யுங் காவல்க ளெல்லாவற்றுள்ளும் தலைமையானதாம்.

'ஆற்றல்' என்பது ஆக்கத்திற்கும் அழித்தற்கும் ஏதுவான பல்வகை வலிமைகள். இகழ்ந்தவிடத்து அழித்துவிடுவார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும், படை,அரண்,நட்பு முதலிய பிறகாவல்கள் அழிக்கப்பட்டு விடுமாதலின் 'தலை' என்றும், கூறினார். இதனால் பெரியாரைப் பிழையாமையின் இன்றியமையாமை கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழாதொழிதல், தம்மைக் காப்பார்க்குக் காவலாகிய எல்லாவற்றுள்ளும் தலையான காவலாம். இது பெரியாரைப் பிழையாமையால் வரும் பயன் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை
எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

No comments:

Post a Comment