நிழல்நீரும் இன்னாத இன்னா

குறள் 881
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
[பொருட்பால், நட்பியல், உட்பகை]

பொருள்
நிழல் - சாயை; எதிரொளி; அச்சு; குளிர்ச்சி; அருள்; ஒளி; நீதி; புகலிடம்; கொடை; செல்வம்; மரக்கொம்பு; நோய்; பேய்.

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை

இன்னாது - தீது; துன்பு
இன்னாத - இன்னாதா-தல் - துன்புறுதல்

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி

நீரும் - 

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

இன்னா  - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு
செயின் - செய்யாதே

முழுப்பொருள்
குளிர்ச்சியான தண்ணீர் நமக்கு நோய் தருமேயானால் (அல்லது தீங்கு விளைவிக்குமே ஆனால்) அது தீங்கானதே அகும். குளிர்ச்சி என்பதனால் அது நல்லவை ஆகாது. அதுபோலவே நமக்கு உற்ற உறவினரோ  அல்லது நண்பரோ / வேண்டியவரோ பழக்கத்தில் இனிமையாக மகிழ்விக்கும்படி பேசினாலும் அவருடைய பழக்கங்கள் குணநலங்கள் எண்ணங்கள் கீழ்மையானதாக இருப்பின் பின்பு அவருடைய நட்பும் தீதே விளைவிக்கும். ஏனெனில் அவர்களுடைய எண்ணங்கள் நம்மை தாக்கும். அது நம்மில் தீய விதைகளை விதைக்கும்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நிழல் நீரும் இன்னாத இன்னா - ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் நோய் செய்வன இன்னாவாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னாவாம் - அதுபோலத் தழுவவேண்டுவனவாய தமரியல்புகளும் முன் இனியவேனும் பின் இன்னா செய்வன இன்னாவாம். (நோய் - பெருங்கால், பெருவயிறு முதலாயின. 'தமர்' என்றதனால் உட்பகை யாதற்குரியராய ஞாதியர் என்பது அறிக. இன்னா செயல் - முன் வெளிப்படாமை நின்று துணை பெற்றவழிக் கெடுதல்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நிழல் நீரும் இன்னாத இன்னா- மக்கள் இன்பமாக நுகரும் நிழலும் நீரும் பின்பு நோய் செய்வனவாயின் தீயனவேயாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னா ஆம்- அதுபோலத் தமக்குத்துணையாயிருக்க வேண்டிய தம்மைச் சேர்ந்தவர் இயல்புகளும் நன்மை செய்வனபோல் தோன்றித் தீமை செய்யின் தீயனவே யாம்.

தீய நிழலால் வரும் நோய் தலைவலி, காய்ச்சல் முதலாயின. தீய நீரால் வரும்நோய். யானைக்கால், பெருவயிறு (மகோதரம்) முதலாயின. தமர் என்பார் தம் குடும்பத்தாரும், தம் உறவினரும் தம் வகுப்பாரும், தம் கூட்டத்தாரும், தம் ஊராரும், தம் நாட்டாரும் தம் மொழியாரும் எனப் பல திறத்தார். முன் தோற்றத்தாலன்றிப் பின்விளைவாலேயே, பொருள்களும் மக்களும் முறையே நல்லனவுந் தீயனவும் நல்லவருந் தீயவருமாதல் அறியப்படும் என்பதாம். இக்குறளால் உட்பகையின் இயல்பு கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
நிழலகத்து நீர் இனிதேயாயினும் அவற்றுள் இன்னாத செய்யும் நீர் இன்னாதாகும். அதுபோலச் சுற்றத்தார் நன்மை இனிதாயினும் அவர் இன்னாதவற்றைச் செய்வாராயின் அஃது இன்னாதாயே விடும். இது சுற்றமென் றிகழற்க என்றது.

மு.வரதராசனார் உரை
இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு துன்பம் தருவனவே. அதபோல, நெருக்கமான உறவும் சொந்தக் கட்சிக்காரரும் கூடப் பழக்கத்தில் இனியவராக இருந்து, செயலில் துன்பம் தந்தால் அது பெருந் துன்பமே.

No comments:

Post a Comment