ஊழையும் உப்பக்கம் காண்பர்

குறள் 620
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]

பொருள்
ஊழ் - முதிர்தல். பெரும்பாம் பூழ்ந்து தோலுரிப்பனபோல்(சீவக. 1560).
பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை.

ஊழையும் -  தலைவிதியினையும்

உப்பக்கம் - உந்தப்பக்கம். உப்பக்கநோக்கி(வள்ளுவமா. 21). 2. The back; பின்பக்கம், முதுகு. ஊழையுமுப்பக்கங் காண்பர் (குறள், 620).

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

காண்பர் - காண்பிப்பர்

உலைவு - அழிவு; நடுக்கம்; வறுமை; கலக்கம்; தோல்வி; அலைவு; ஊக்கக்குறைவு

இன்றி - இல்லாமல்

உலைவின்றித் - உலைவு + இன்றி - நடுக்கமின்றி கலக்கமின்றி ஒருவித ஊக்கக்குறைவும் இன்றி

தாழ்தல் - அமிழ்ந்துதல்; சாய்தல்; குறைதல்; சரிதல்; நிலைகெடுதல்; தாமதித்தல்; தங்குதல்; தொங்குதல்; ஈடுபடுதல்; விரும்புதல்; ஆசைப்பெருக்கம்; வணங்குதல்.

தாழ்²-த்தல் - 11 v. Caus. of தாழ்¹-. tr.1. To bow down, let down; to deepen, depress;தாழச்செய்தல். நின்றலையைத்தாழ்த் திருகை கூப்பு(திவ். இயற். பெரியதிருவந். 84). 2. To degrade;தாழ்மைப்படுத்துதல். இன்றிவட்டாழ்த்து (பெருங்.வத்தவ. 5, 45).--intr. 1. To wait, stay, delay;தாமதித்தல். தாழ்த்திடாமல் மின்னிடை வெந்தீத்தம்மின் (சேதுபு. சங்கர. 71). 2. To be slow, dull;மந்தமாயிருத்தல். (சூடா.)

தாழாது - ஒரு குறைவுமின்றீ, மனம்தளராமல், தாளாது, தாமதிக்காமல், மந்தமாக இல்லாமல்

உஞற்று - ஊக்கம்; முயற்சி; இழுக்கு; வழக்கு.

உஞற்றுதல் - முயலுதல்; செய்தல் தூண்டுதல்

உஞற்று பவர் - ஊக்கத்துடன் முயற்சிசெய்பவர்

முழுப்பொருள்
ஒருவர் செயலை செய்யும் பொழுது இது தான் நடக்கும் என்பதை தலைவிதி என்று கருதுகிறோம். அதனை மாற்ற முடியாது என்று பலர் சொல்வர். ஒரு செயலை எடுத்து முடிக்க முடியவில்லை என்றால் அது தலைவிதி, நாம் ஒன்றும் செய்ய இயலாது என்று அங்கு நின்று விட்டு, அச்செயலை கைவிட்டுவிட்டு அடுத்தச்செயலுக்கு தாவுகிறோம். ஒருவர் செயல்புரியாதற்கு பல காரணங்களை கூறுவார். அவை: “ஒருத்தன நம்பி இருந்தேன். கடைசி நேரத்தில கால வாரிட்டான்”, “அதுக்கெல்லாம் வசதி வேணும்”, “இவ்வளவுதான் என்னால முடியும்”,“நேரம் போதவே இல்லை”,“எனக்குச் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை”, "எனக்குச் சொல்ல யாருமில்லை”, “இருக்கிறது போதும். ரொம்ப ஆசைப்பட வேண்டாம்”, “எல்லாம் என் தலையெழுத்து!”, “எனக்கு நேரம் சரியில்லை”, “என் தலை விதி”, “நம் தலையிலே என்ன எழுதியிருக்கோ, அப்படித் தானே எல்லாம் நடக்கும்?”, “எனக்கு அதிர்ஷ்டம் இல்லை”, “நம்ம கையிலே என்ன இருக்கு?”, “என் துரதிர்ஷ்டம்”. 

மேற்சொன்னவைப்போல பல காரணங்கள்!  இதுபோல “தலை விதி” என்று நொந்து கொள்வது சுய பச்சாதாபத்திற்கும் கழிவிரக்கத்திர்கும் தான் (Self Pity) உதவும். வேறு எந்தப் பிரயோஜனமும் இல்லை. 

“ஆடத்தெரியாவதனக்கு மேடை கோணல்” (A bad worker blames the tools) என்னும் பழமொழிபோல. “யார் மீது பழி போடலாம். எதனால் இப்படி ஆனது என்று சொல்லலாம்” என்று இவர்கள் யோசிக்கும் நேரத்தில் அந்தக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து விடலாம்!

ஆனால் உண்மையில் ஒரு செயலை முடிப்பதற்கு இடையுறாக வருவதை ஊழ் என்று நாம் கருதலாம். ஒரு செயலையின் தோல்வியை இக்கணத்தில் ஊழ் என்று நாம் கருதலாம். அப்படி தோல்வியினை காணும் பொழுது அச்செயலினை கண்டு கலக்கம் கொள்ளாமல் (நடுக்கம் கொள்ளாமல், மனம் தளராமல்) அதனை தாமதிக்காமால் விடா முயற்சியுடன் ஊக்கத்துடன் செயல்படுபவர் அச்செயலை வெற்றியுடன் செய்து முடிக்கமுடியும். அப்படி செய்யும் பொழுது அவருக்கு வரும் ஊழ்களுக்கு (தோல்விகள், இடையுறுகள்) தனது புறமுதுகை காண்பிப்பார்.

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த  கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? என்று இறைவன் முருகனை நம்புவதைப் போன்று நாம் நமது செயலை நம்பினால் நாம் முன்னேறலாம். கண்ணுக்குத் தெரியாத விதியை நம்புவதைவிட நம் கைகளையும் கால்களையும் நம்பி உழைக்கலாம்!

நமது பிள்ளைகள் நாம் செய்யும் செயலைப்பார்த்து வளர்கிறார்கள். நமது பிள்ளைகள் நமது செயல்களின் விளைவு. ஆதலால் ஊழின் மீது பழியைப்போடாமல் மனம் தளராமல் செயலாற்றி முன்னேறவேண்டும்.

“நாம் செய்த வினைகள்தான் நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. நாம் முன்பு செய்த செயல்களின் பலனைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.” என்பதையும் ”உன் வாழ்க்கை உன் கையில்” என்பதையும் நினைவில் கொள்க. உங்களுக்கான நேரம் வரும் பொழுது தகுதியுடன் இருக்க இப்பொழுதில் இருந்தே தொடர்ந்து நம்மை தகுதிப்படுத்துக்கொண்டே இருக்க வேண்டும். 

மேலும்


தன்னுடைய குடும்பத்திற்கு (அல்லது தனது நாட்டிற்கு) தேவையானவற்றை காலம் தாழ்த்தாமல் விரைந்து ஊக்கத்தோடு செயலாற்றிக்கொண்டு இருப்பவருக்கு அச்செயலை செய்து முடிக்கும் திறனும் அதற்கு தேவையான ஆட்களும் அவருக்கு தானாக கிடைக்கும்.

ஆதலால் ஒருவர் ஒரு செயலை செய்து முடிக்க அடிப்படையான தேவை எண்ணம், முயற்சி, ஊக்கம், சோம்பலின்மை, செயலாற்றுதல் மற்றவையெல்லாம் தானாக அமையும் என்பதை நாம் இங்கு அறிந்துக்கொள்ளலாம்.

When you want something all the universe conspires in helping you to achieve it - Paulo Coelho (The Alchemist) என்கிற வரிகள் நினைவுக்கு வருகின்றன.

தலைவனுக்கு தாளான்மை என்பது மிகவும் முக்கியமான பண்பு. அது அவனை சுற்றி உள்ள மக்களையும் உற்சாகப்படுத்தி அவர்களை முன்னே அழைத்துச்செல்லும். 

உதாரணம்: 
ஒரு போர் வீரன் போருக்கு செல்கிறான். யானை மீது வேலை எரிகிறான். அதன் பின்பு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பொழுது, எதிரி ஒருவன் அவன் மீது வேலை எரிகிறான். அந்த வேலை புன்னகையோடு பிடித்து, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று அதன் மீது மறுபடியும் எரிகிறான். அது தான் தாளான்மை என்று கருதுகிறேன். 

தலைவனுக்கு தாளான்மை என்பது மிகவும் முக்கியமான பண்பு. அது அவனை சுற்றி உள்ள மக்களையும் உற்சாகப்படுத்தி அவரகளை முன்னே அழைத்துச்செல்லும். 



மேற்காணும் காணொளியில் நாம் பல தலைவர்களை காண்கிறோம். அவர்கள் யாவரும் தங்களது செயலிற்கு முதலாவதாக முதல் அடியை எடுத்து வைத்தனர் (பலர் தங்களது வாழ்வில் அது சாத்தியப்படாது என்று முதல் அடியையே எடுத்து வைப்பது இல்லை). பின்பு அவர்கள் எடுத்த காரியங்களில் பல இடையுறுகளும் தடைகளும் வந்தாலும் அதனை எதிர்கொண்டனர். அவர்கள் செய்த தவறுகளை திருத்திக்கொண்டனர். தாங்கள் நோக்கங்களை நோக்கி இடைவிடாது விடா முயற்சியுடன் செயல்ப்பட்டனர். வென்றனர்.

”திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 38  நாள் என் செயும்”
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
   கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
      தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
         தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

......... சொற்பிரிவு .........

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
   கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
      தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
         தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

......... பதவுரை .........

நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய
இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.


மேலும்: அஷோக்

உற்றது கொண்டு மேல்வந்துறு பொருளுணருங் கோளார் 
மற்றது வினையின் வந்ததாயினும் மாற்றலாற்றும் 
பெற்றியர்” (கம்பராமாயணம் மந்திரப்படலம் 7).

“உதிக்கும் உலை....
விதிக்கும் விதியாகும்என் விற்றொழில்” (கம்ப.நகர்நீங்கு.134)


முயலாமையில்லார்க்கு முயலுக்கும் ஆமைக்குமான ஓட்டப்பந்தயத்தில் முயலுக்கு ஏற்பட்ட நிலைமைதான்

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
1) தமிழிலக்கியங்களில் ஊழ்
இவ்வினைகளின் வலிமைபற்றிச் சமணர்களால் எழுதப்பட்ட நாலடியார் என்னும் நூலில் பழவினை என்னும் பெயரில் ஓர் அதிகாரமும், திருக்குறளில் ஊழ் என்னும் பெயரில் ஓர் அதிகாரமும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழ் என்ற சொல்லுக்கு, “இருவினைப் பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி’ எனப் பரிமேலழகர் பொருள் எழுதியிருக்கின்றார். அன்றியும் ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி ஆகிய யாவும் ஒரே கருத்துடைய சொற்கள் எனவும் பரிமேலழகர் குறிப்பிடுகின்றனர். ஊழை நினைத்தால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வராமலிருப்பது அரிது. ஊழின் வலியை வற்புறுத்துவதற்கென்றே எழுதப்பட்ட காப்பியமாகக்கூட அதனைக் கருதலாம். இப்பிறப்பிலே யாதொரு தீங்கும் செய்யாத கோவலன், கள்வன் எனக் கருதப்பட்டுக் கொல்லப்படுகிறான். முற்பிறப்பிலே கோவலன் குற்றமற்ற ஒருவன் சொல்லப்படுவதற்குக் காரணமாய் இருந்தான். அத்தீவினையின் பலனையே இப்பிறப்பிலே அவன் அனுபவிக்கின்றான். கன்மம் என்பதும் ஊழ் என்பதும் இதுதான்.

2) ஊழும் முயற்சியும்
இப்பிறப்பிலே நமக்கு நிகழ்வன யாவும் முற்பிறப்பிலேயே விதிக்கபட்டுவிட்டன் என்றல் நாமாக முயன்று செய்வதற்கென எதுவுமில்லை. நாம் செய்வது, செய்யாமலிருப்பது எல்லாம் முன்வினைப்பயனானால், வாழ்வில் ஊக்கம், முயற்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடம் எங்கே என்ற வினா எழலாம். “விதியை நம்பாதவன் தான் தமிழன். விதியை நம்பினால் முயற்சிக்கு இடமில்லை” என்று இன்று சிலர் பிர்சங்கங்கள் செய்து திரிகின்றார்கள். இது விதி என்பது என்ன என்று சரியாக விளங்கிக்கொள்ளாமையால் ஏற்படும் அநர்த்தம். ஒவ்வொரு முயற்சிக்கும் ஏற்ற பலன் நிச்சயம் கிடைத்தே தீரும் என்பதே விதி என்ற சொல்லுக்குக் கருத்து. எனவே விதையை நம்பினால் தான் முயற்சிக்கு இடமுண்டு. நம்பாவிட்டால் தான் இடமில்லை. பழவினை பயனை நுகரும்போது நமது முயற்சிக்கும் இடமுண்டு என்பதைக் காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்கள் ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கியுள்ளார். பழவினையின் பயன், ஒருவன் கடன்பட்டிருத்தலை ஒத்தது. தொடக்கத்தில் அவனுடைய உழைப்பிலே பெரும்பகுதி அவனுடைய பழைய கடனைத் தீர்ப்பதிலேயே செலவாகிவிடும். தனது உழைப்பு முழுதும் கடனை அடைப்பதிலேயே செலவாகிவிடுகிறது என்று அவன் உழைக்காமல் இருக்கலமா? அங்ஙனம் இருப்பின், அவனுடைய கடன் மேலும் மேலும் பெருகும். அங்ஙமன்றி அவன் உழைக்கத் தொடங்கினால் எவ்வளவு அதிகம் உழைக்கிறானோ அவ்வளவுக்கு அவனுடைய கடனும் குறையும். பின், பணத்தை சேர்க்கவும் இடமுண்டு. அது போலவே, ஊழினால் துன்பப்படுகிறவன் முயற்சி செய்யாமலிருந்தால் இன்னும் அதிகத் துன்பத்துக்கு ஆளாவான். முயற்சி செய்தால் அதற்கேற்ப அவனது துன்பம் குறையும். 

நமது வாழ்வை ஒரு “பிறிட்ஜ்” விளையாட்டுக்கு ஒப்பிடுகிறார் பேராசிரியர் ராதாகிருஷ்ணன். இவ்விளையாட்டிலே நமக்குக் கிடைக்கும் சீட்டுகளைப்போல நமது பழவினையை வைத்துக்கொள்ளலாம். இச்சீட்டுகளை நாம் நம் விருப்பப்படி தெரிந்தெடுப்பதில்லை. சீட்டுகளைத் தெரிந்தெடுக்க நமக்கு உரிமை இல்லாவிடினும், அச்சீட்டுகளைக்கொண்டு வெற்றியோ, தோல்வியோ ஈட்டும் வாய்ப்பு நமக்கு உண்டு. இதைப் போலவே, பழவினையைத் தெரிந்தெடுக்க அதிகாரம் இல்லாவிடினும், அதனை வைத்துக்கொண்டு மேலே ஆக்குவதோ அழிப்பதோ யாவும் நம் கையிலேயே உள்ளது. 

பரிமேலழகர் உரை
ஊழையும் உப்பக்கம் காண்பர் - பயனை விலக்குவதாய ஊழினையும் புறங்காண்பர்; உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர் - அவ்விலக்கிற்கு இளையாது வினையைத் தாழ்வற முயல்வார்.

விளக்கம்
(தாழ்வறுதல் - சூழ்ச்சியினும் வலி முதலிய அறிதலினும் செயலினும் குற்றம் அறுதல். ஊழ் ஒருகாலாக இருகாலாக அல்லது விலக்கலாகாமையின் , பலகால் முயல்வார் பயன் எய்துவர் என்பார், 'உப்பக்கம் காண்பர்' என்றார்.தெய்வத்தான் இடுக்கண் வரினும் முயற்சி விடற்பாலதன்று என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர் -தளர்ச்சியின்றித் தாழ்வற விடாது முயல்பவர்; ஊழையும் உப்பக்கங் காண்பர்-வெல்வதற்கரிய ஊழையும் வென்றுவிடுவர்.

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்."

(குறள். 380)

என்று முன்னரே திட்டவட்டமாகச் சொல்லிவிட்டமையால், இங்கு 'ஊழையும் உப்பக்கங் காண்பர்' என்பது எதிர்மறையும்மை கொண்டதே; அல்லது ஊழென்று தவறாக மக்களாற் கருதப்பட்டதை வெல்வதே. இதனால், திருவள்ளுவர் முன்னுக்குப் பின் முரண்படக் கூறினாரென்று இம்மியுங் கருதற்க. முந்தின குறளையே சற்று வலியுறுத்தி விடாமுயற்சியாளரை ஊக்கினதாகவே கொள்க.

உப்பக்கம் பின்பக்கம் அல்லது முதுகு. உப்பக்கங்காணுதல் புறங்காணுதல், அதாவது வெல்லுதல். தாழ்வறுதலாவது சூழ்ச்சியிலும் வலிமுதலியன வறிதலிலும் வினைசெய்வதிலுங் குற்றங் குறையின்மை. பல முறை தவறியபின் ஒரு வினையில் வெற்றி பெறுவதும் உயிரொடுங்கியிருந்தவர் இடுகாட்டிற் புதைக்கும் போது உட்செலுத்திய மருந்தால் மீண்டும் எழுந்து இயங்குவதும், தவறாகக் கணிக்கப்பட்ட பிறப்பியத்தில் (சாதகத்தில்) குறித்த காலங் கடந்து ஒருவர் வாழ்வதும், விடாமுயற்சியின் விளைவும் அறியாமையின் நீக்கமுமேயன்றி ஊழைவென்றதாகா. ஊழை ஒருவரும் வெல்ல முடியாது. வெல்லப்படுவது ஊழாகாது. "பணத்தைக் கண்டாற் பிணமும் வாயைத்திறக்கும்" என்னும் பழமொழி பணத்தின் பெருமை உணர்த்துவது போன்றே, "ஊழையும் .......... உஞற்றுபவர்." என்னுங் குறளும் விடாமுயற்சியின் வலிமையை உணர்த்துகின்றதென அறிக. ஈரிடத்தும் உம்மை எதிர்மறை யென்றும் அறிக.

'சாத்தன் வருதற்கு முரியன்' என்பது 'வராமைக்கும் உரியன்' என்று பொருள்படுவது போன்றே, 'சாத்தன் வராமைக்கும் உரியன்' என்பது 'வருதற்கும் உரியன்' என்று பொருள்படுவதால், இவ்விரண்டும் எச்சவும்மைகளேயன்றி எதிர்மறையும்மையும் உடன்பாட்டும்மையும் என்றாகா. 'பிணமும் வாயைத்திறக்கும்.' 'ஊழையும் உப்பக்கங் காண்பர்' என மேற்காட்டியனவே உண்மையான எதிர்மறையென வுணர்க. இவை எச்சப் பொருளை அடிப்படையாகக் கொண்டனவேனும், பிணம் வாயைத்திறக்காது, ஊழை உப்பக்கங் காண முடியாது, என்னுங் குறிப்பின வாதலால், "பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்" (புறம், 2) என்பவைபோல எதிர்மறையும்மையேயாம். "எதிர்மறை யெச்சம் எதிர்மறை முடிபின" ( தொல்.எச்.31) என்றது ஏகார வோகாரங்கட்கேயன்றி உம்மைக்கன்று.

ஊழ் என்பதும் தெய்வ ஏற்பாடு என்பதும் ஒன்றேயாதலின், மாந்தன் முன்பு தவறு செய்து பின்பு திருத்திக் கொள்வது போல் இயற்கையான முற்றறிவுள்ள இறைவனுஞ் செய்யானென்றும் , அவன் அங்ஙனஞ் செய்ததாகக் கூறுவதெல்லாம் மாந்தன் கட்டுக் கதையும் தற்குறிப்பேற்றமுமே யென்றும், அறிந்து கொள்க.

"அன்றெழுதினவன் அழித்தெழுதான் ."
என்னும் பழமொழியும்,

"உறற்பால நீக்கம் உறுவர்க்கு மாகா
பெறற்பா லனையவும் அன்னவாம் மாரி
வறப்பிற் றருவாரு மில்லை யதனைச்
சிறப்பிற் றணிப்பாரு மில்."
என்னும் நாலடிச் செய்யுளும் (104) இங்கு நோக்கத்தக்கன.

மணக்குடவர் உரை
ஒரு வினையை மனத்திற் றளர்வு இன்றி நீட்டியாமல் முயலுமவர், பயன்படாமல் விலக்குகின்ற தீய வினையையும் முதுகு புறங்காண்பர். இஃது ஊழ்தன்னையும் வெல்வ ரென்றது.

மு.வ உரை
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

Thirukkural - Management - Fate
Though Valluvar has written ten Kurals to educate his readers on the influence of fate in one's life, he has left the belief in the existence of fate to the readers themselves.  Valluvar's thought  in Kural 620 is contrary to the thoughts presented by him in the chapter 38 ‘Fate’ in Thiruhhural.

Those that strive undaunted  will see
The back of Fate itself.

A person with determination, persistence,  and relentless effort will defeat his fate that interferes with his life. Our relentless efforts can defeat our fate. Many people have fought against all odds to achieve significant feats in their lives. You can find thousands of them. Probably the quote, 'Winners never quit' is an offshoot of this thought.

No comments:

Post a Comment