இற்பிறந்தார் கண்அல்லது இல்லை

குறள் 951
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் 
செப்பமும் நாணும் ஒருங்கு.
[பொருட்பால்,  குடியியல், குடிமை]

பொருள்
இல் - இடம், வீடு, இல்லறம், மனைவி, மருத முல்லைநிலங்களின் தலைவியர், குடி;

பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்.

பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இற்பிறந்தார்கண் - ஊர் போற்றக்கூடிய உயர்ந்த குடியில் பிறந்ததனால் ஒருவர் 

அல்லது - தீவினை; தவிர

இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று.

அல்லது இல்லை - உயர்ந்தவராவது இல்லை, மாறாக

இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

இயல்பாகச் - இயல்பாக, இயற்கையாக 

செப்பம் - செவ்வை; நடுநிலை; சீர்திருத்தம்; பாதுகாப்பு; செவ்வியவழி; தெரு; நெஞ்சு; மனநிறைவு; ஆயத்தம்.
செப்புதல் - சொல்லுதல்; விடைசொல்லுதல்.

செப்பமும் - செம்மை (Straightness, Correctness, Exactness, Smoothness, Uprightness], நடுநிலை

நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று.

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

ஒருங்கு - ஒரு சேர (ஒன்றாக / ஒருங்கே / ஒருகாலத்திலே இருக்கும்
ஒருங்கு - முழுமை; முழுதும்; எல்லாம்; எல்லாங்கூடிநிற்கை; அடக்கம்; ஒருகாலத்தில்; ஒருசேர; ஒருதன்மை; அழிவு

ஒருங்குதல் - ஒருபடியாதல்; ஒன்றுகூடுதல்; ஒருவழிப்படல்; ஒதுங்குதல்; ஒடுங்குதல்; அழிதல்.

முழுப்பொருள்
ஒருவர் பிறப்பினால் உயர்ந்தவர் என்று ஆகாது. அதாவது ஒருவர் பிறக்கும் குடும்பத்தால் உயர்ந்தவர் என்று ஆகாது. 

உண்மையில், ஒருவர் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் இருத்தால் வேண்டும். அவ்வாறு கருத்தும் பணிவான இனிய சொல்லும் செயலும் அந்த ஒரு முரண்பாண்டும் இல்லாமல் இருத்தல் வேண்டும். இதுவே செப்பம் எனப்பட்டது.

அதைப்போல் பழி பாவங்களுக்கு அஞ்சி (அச்சப்பட்டு) அதன் மீது அருவருப்புக் கொண்டு இருக்க வேண்டும். இதுவே நாணம் எனப்பட்டது.

ஒருவர் செப்பமும்(ஒழுக்கம்,நேர்மை, இனிய சொல், பணிவு)  நாணும் (பழிக்கு அஞ்சி) தம்முள் இயற்கையாக ஒருங்கே (ஒரு சேர) உள்ளது போல தன்னை நடத்துக்கொள்ள வேண்டும். அப்படி ஒருவர் இருப்பாயின் அவர் உயர்ந்தவர். உயர்குடி. இல்லையே இல்லை.

ஒப்புமை
”நல்லவை செய்யின் இயல்பாகும்....
......குடிப்பிறப்பின் ஊதியம் என்னோ” (நாலடி.144)

பரிமேலழகர் உரை
செப்பமும் நாணும் ஒருங்கு - செம்மையும் நாணும் சேர; இப்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை - குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா. 

விளக்கம் 
('இல், குடி, என்பன ஈண்டு உயர்ந்தவற்றின் மேல. செம்மை - கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை. நாண் - பழிபாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உளவாம்; பிறர்க்காயின் கற்பித்த வழியும் நெடிது நில்லா என்பதாம்

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செப்பமும் நாணும் ஒருங்கு- ஒழுக்க நேர்மையும் பழிக்கு நாணுதலும் ஒருசேர; இல் பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை- குடிப்பிறந்தாரிடத் தல்லது பிறரிடத்து இயற்கையாகவாகா.

இங்கு இல் என்றது சேக்கிழார் குடிபோலுஞ் சரவடியை அல்லது சேர சோழ பாண்டியர் குடிபோலுங் கொடிவழியை.

"நாடும் ஊரும் இல்லும் குடியும்
பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி"
(தொல்.கள.23)

என்பதில் 'இல்' கொடிவழியையும் 'குடி' சரவடியையும், 'பிறப்பு' குடும்பத்தையும், 'சிறப்பு' அரசாளற்குரிமையையும் குறிக்கும். செப்பமாவது கருத்து சொல் செயலாகிய முக்கரணமும் தம்முள் முரணாத செம்மை. நாணென்பது பழிபளகம்(பாவம்) பற்றிய அச்சமும் அருவருப்பும் கொண்ட வெட்கம். இவை நல்ல குடிப்பிறந்தார்க்கு இயற்கையாக அமையும். பிறர்க்கு எத்துணைக் கற்பிப்பினும் அமையா.

மணக்குடவர் உரை
உயர்குடிப்பிறந்தார்மாட்டல்லது பிறர்மாட்டு நடுவு நிலைமையும், பழி நாணுதலும், இயல்பாக ஒருங்கே உண்டாகா. இஃது இல்பிறந்தார் இவையிரண்டும் இயல்பாக உடையரென்றது. 

மு.வரதராசனார் உரை
நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை

சாலமன் பாப்பையா உரை
சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.

எந்த ஒரு மனிதன், நடுநிலை தவறாமல் நாணயத்தோடு நடக்கிறானோ ? அவன் தான் உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டு நாணயம் தவறி, நடுநிலைமையின்றி வாழ்பவன் உயர்ந்த குடியே அன்று. இது தான் திருவள்ளுவர் சொல்ல வந்த கருத்து. பிறப்பால் தாழ்ந்த குடியில் பிறந்தாலும், நேர்மையாக வாழ்பவன் உயர்ந்த குடி தான். இது தான் திருவள்ளுவர் தரும் விளக்கம். 

No comments:

Post a Comment