இல்லாளை அஞ்சுவான்

குறள் 905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
இல்லாள் - மனைவி; மருதமுல்லை நிலங்களின் தலைவியர்; வறுமையுடையவள்

இல்லாளை -  மனைவியை கண்டு / நினைத்து

அஞ்சுதல் - பயப்படுதல்

அஞ்சுவான் - அஞ்சுபவர் / பயப்படுபவர்

அஞ்சுமற் றெஞ்ஞான்றும் - அஞ்சும் + அற்று + எஞ்ஞான்றும்

அஞ்சும் - அச்சம்

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது - (அச்சம்) எப்படிக் கொள்வாயின்
ஞான்று - always

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

நல்லார்க்கு - நல்லவர்களுக்கு, நன்-மை, நற்குணமுடையோர். கற்றவர், பெரியார்,

நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான

செயல் தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு

நல்ல செயல். - நல்லது செய்யும் போது

முழுப்பொருள்
மனைவியை கண்டு (நினைத்தாலே) அஞ்சுபவர் எல்லாவற்றிற்கும் அஞ்சுவார். தான் இயன்ற பொருளாயினும் செல்வாமாயினும் எல்லா செயலையும் செய்ய அச்சம் கொள்வார்.

மனைவி திட்டுவாளோ என்று எண்ணி நல்லவர்களுக்கு உதவி செய்யக் கூட அஞ்சுவார். வீட்டிற்கு நண்பர்களோ, உறவினர்களோ, சான்றோர்களோ வந்தாள் விருந்தோம்பல் செய்ய சொல்லக்கூட அஞ்சுவார். வேளாண்மை (உபகாரம், ஈகை) செய்யக்கூட அஞ்சுவார். இது ஒரு நாள் இருநாள் அல்ல எல்லா நாட்களிலும்.

உதாரணம்: முதல் மரியாதை திரைப்படத்தில் வரும் கணவர் (சிவாஜி கணேசன்) மனைவி (வடிவுகரசி) கதாபாத்திரங்கள்.






பரிமேலழகர் உரை
இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும்-தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். வேளாண்மை தொழில் செய்ய அஞ்சுவார்,

விளக்கம் 
(நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்ய வேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். "இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக" (சீவக. மண்மகள். 217) என்றார் பிறரும்.)

மணக்குடவர் உரை
மனையாளை அஞ்சுவான், எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும். இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர்
இல்லாளை அஞ்சுவான் - தன் மனைவிக்கு அஞ்சி நடப்பவன்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளைக்கொண்டும் நல்லவர்க்கு நல்லவை செய்ய எப்போதும் அஞ்சுவான்.

நல்லார்; அரசனொழிந்த ஐங்குறவர், சான்றோர், அருந்தவர்,நல்விருந்தினர் முதலியோர். நல்லவை செய்தல் விருந்தோம்பலும் வேளாண்மை செய்தலும்.விழாநாளிலும் மனைவி மகிழ்ந்திருக்கும் போதும் என்பார் 'எஞ்ஞான்றும் ' என்றார்.

"இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்றநெஞ்சிற்
புல்லாள னாக" என்பது சிந்தாமணி(2319).

"இருந்து முகந்திருத்தி யீரோடு பேன்வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினா ளாடிப் பழமுறத்தாற்
சாடினா டோடத் தான்."

என்னும் பிற்காலத் தௌவையா ரொருவர் தனிப்பாடல் கடைப்பட்ட பெண்ணஞ்சி நிலைமையைக் குறிக்கும்.

மு.வரதராசனார் உரை
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

சாலமன் பாப்பையா உரை
தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.

No comments:

Post a Comment