எனைத் தொனறு இனிதே காமம்

குறள் 1202
எனைத்தொன றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில்.
[காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்]

பொருள்
எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு, எந்த நிலையானாலும்

ஒன்று - ஒன்றும் - சிறிதும்

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இனிதே - இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

காண் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை, காதல் (புணர்ச்சி).

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

வீழ் - வீழு (விழு), ஆசி,
வீழ்வார்க்கு - ஆசைப்படுபவருக்கு (காதலிக்கு)
வீழ்வார்  - ஆசைப்படுபவர் (காதலர்)

நினைப்ப - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

வருவது - வருதல் 

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.


முழுப்பொருள்
காதலரை பிரிந்து இருக்கும் பொழுது அவர்களின் நினைவு துன்பம் தராதாம். அது இன்பம் பயக்குமாம். ஏனெனில் இந்த பிரிவில் தான் அவர்கள் இருவரும் கொண்ட காதலை பற்றி, அவர்களின் ஊடல்கள் பற்றி, அவர்கள் கூடி இருந்த நாட்களை பற்றி அதிகம் நினைக்க நேரிடுமாம். அது காதலின் இனிமை சொல்லும். ஆக பிரிவில் அவர்கள் நினைவு இன்பம் தரும் என்கிறார் திருவள்ளுவர்.

திருவள்ளுவரும் பிரிவும் வைரமுத்துவும் 
எனக்கு சில பாடல்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.

(1) அழகே சுகமா (பாடலாசிரியர்: வைரமுத்து; திரைப்படம்: பார்த்தாலே பரவசம்)

உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்

காதலின் சிறப்பை, இனிமை பிரிவில் காண்பதாக சொல்ல படுகிறது.

(2) காதல் ரோஜாவே (பாடலாசிரியர்: வைரமுத்து; திரைப்படம்: ரோஜா)

தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்

ஐம்புலன்களின் சுகங்களை உணரும் பொழுது அவனுக்கு காதிலி தான் நினைவிற்கு வருகிறாள் - இது பிரிவில் காதலின் இனிமையை எடுத்து சொல்கிறது

வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ
பாவயில்லை பாவை தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை

ஐம்புலன்களே அவளுக்கு ஆகதான் என்று காதலன் சொல்கிறான். அவள் காதலி ஆகும் முன் அவன் அப்படி சொன்னது இல்லை. காதலியுடன் இருக்கும் பொழுதும் அப்படி சொன்னது இல்லை. காதலியிடம் பிரிந்து இருக்கும் பொழுதே அவளின் காதலின் இனிமை அவனுக்கு தெரிகிறது. 

பரிமேலழகர் உரை
இதுவும் அது. தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல்தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந் நினைவார்க்கு அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் - அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண்.


விளக்கம் (புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.)

மணக்குடவர் உரை
காமம் யாதொன்றினானும் இனியதே காண்; தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின். இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது.

மு.வ உரை
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.

விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.

நன்றி ரிஷவன்
விரும்பி காதலருடன்
புணர்ந்த பொழுதை
நினைத்த கணமே
இன்பம் தருவதால்
பிரிவின்பால் வரும்
துன்பமும் இன்பமாகிறது
ஆக.. காமளவு சிறிதாயினும்
காதல் என்றும் இனியது.

No comments:

Post a Comment