குழலினிது யாழினிது

குறள் 66
குழலினிது யாழினிது என்ப-தம் மக்கள் 
மழலைச் சொல் கேளாதவர் 
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]

பொருள்
குழல் - கூந்தல்; மயிர்க்குழற்சி; ஐம்பாலுள்சுருக்கிமுடிக்கப்படுவது; மயிர்; துளையுடையபொருள்; இசைக்குழல்; குழலிசை; துப்பாக்கி; உட்டுளை; ஒருவகைக்கழுத்தணி; ஒருமீன்வகை.

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

யாழ் - பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டி யாழ் என்னும் நால்வகை நரம்புக்கருவி; மிதுனராசி; அசுவினிநாள்; திருவாதிரைநாள்; பண்; ஆந்தை

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

என்ப(ர்) - என்பார்கள்

தம் - (தன்னுடைய) - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

மழலைச் - குழந்தைகளின் திருந்தாச்சொல்; மென்மொழி; இளமை; மெல்லோசை.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்

கேட்டல் - கேள்-தல்[கேட்டல்]
kēḷ  
-, 9 v. [K. M.kēḷ.] tr. 1. To hear, hearken, listen to;செவிக்குப் புலனாக்குதல். சொல்லுநபோலவுங் கேட்குநபோலவும் (தொல். பொ 513). 2. To learn, be instructed in; பாடங்கேட்டல் ஒரு குறி கேட்போன்(நன். பொது 42). 3. To ask, inquire, question,catechise; வினாதல் என்னை நீ கேட்கையாலே (கைவல். 20). 4. To investigate; விசாரித்தல் களவு போனமை எங்ஙனே என்றுகேட்டு (Insc.) (சோழவ. 66).5. To request, solicit, crave; வேண்டுதல் படிக்கப்புத்தகம் தருமாறுகேட்டான். 6. To be informed of;கேள்விப்படுதல். தருதி நீ யெனக் கேட்டேன் (பாரத.கன்ன. 238). 7. To require, demand, claim; உரிமை கொண்டாடிக் கொடுக்கச்சொல்லுதல். 8. Toavenge, punish; தண்டித்தல் தீயரைத் தெய்வங்கேட்கும். 9. To effect a remedy, cure, as medicine;நோய்முதலியன நீக்குதல் செயச் செய வூறுகேளாது. . . அரவுகான்ற வேகம் மிக்கிட்டதன்றே (சீவக. 1274).10. To bid, offer, inquire the price of; விலைகேட்டல். 11. To accept, agree to; ஏற்றுக்கொள்ளுதல் கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் (குறள், 643  

கேளாதவர் - கேட்காதவர்

உரை
புல்லாங்குழல், யாழ் (வீணை போன்ற இசைக் கருவி) வழியாக வரும் இசை எல்லாம் இனியமாக இருக்கிறது என்று , தன் குழந்தைகளின் மழலை மொழி கேட்காதவர்  மட்டுமே கூறுவர்.

குழல் இசையும் யாழ் இசையும் சில சமயங்களில் திகட்டக்கூட செய்யும், சில சமயங்களில் அந்த இசையை கேட்க கூடிய மனநிலை இல்லாமல் இருக்கலாம். நம் கவலைகள் அந்நிலையில் மறக்க முடியாமல் போகலாம். ஆனால் மழலைச்சொல் அப்படி இல்லை. மழலைகள் இருக்கும் பொழுது நாம் குழந்தைகளின் உலகத்திற்குள் போகிறோம். அங்கு இனிமை மட்டுமே உள்ளன. குழந்தைகள் எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி சிரிக்கும். அந்தச் சிரிப்பினைப்போல் தூய்மையானது வேறேதும் உண்டா என்ன?

ஒப்புமை
”யாழ்க்குமின் குழற்கும் இன்பம் அளித்தன இவையாம் என்னக்
கேட்குமென் மழலை” (கம்ப.உண்டாட்டு 13)

“குழலும் வீணையும் யாழுமென் றினையன குழைய
மழலை மென்மொழி” (கம்ப.ஊர்தேடு 6)

“பொருளும் யாழின் விளரியும் பூவையும்
மருள நாளும் மழலை வழங்குவாய்” (கம்ப.நிந்தனை 30)

“குழுவு நுண்டொளை வேயினும் குறிநரம் பெறிவுற்
றெழுவு தண்டமிழ் யாழினும் இனியசொற் கிளியே” (கம்ப.சித்திரகூடப் 28)

“யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருளறி வாரா வாயினும் தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை” (புறநா 92:1-3)

“அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே” (இனியவை 15)

திருக்குறள் ஒரு மாபெரும் நீதிநூலாக இன்று கருதப் படுவதன் மூலமாக அதன் வாசிப்பின் ஓரிரு சாத்தியங்கள் மட்டுமே வெளிப் படுகின்றன என்பது முதல் பிரச்சினையாகும். உதாரணமாக

“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்”

என்ற அற்புதமான கவிதை இதில் உள்ளடங்கிய நீதி எது என்னும் வினாவுடன் படிக்கப் படுகையில் அவ்வரிகளில் உள்ள முடிவற்ற வாசல்கள் ஒவ்வொன்றாக மூடி இறுகி விடுகின்றன. நித்ய சைதன்ய யதி இவ்வரிகளை பற்றிக் குறிப்பிடுகையில் குழந்தையை உதடுகளால் முத்தமிட்டும், தொட்டு மார்போடு அணைத்தும், அறியும் பேரனுபவமும் இக்கவிதை வரியில் உள்ளது என்று சொன்னார். பல குறள் பாக்கள் இவ்வாறு அதி தூய கவித்துவ நிலையில் தான் உள்ளன. நீதி என்று எடுத்துக் கொண்டால் இவை சர்வ சாதாரணமான ஒரு லெளகீக உண்மையையோ, அனுபவத்தையோ சொல்லுவனவாக மாறி விடக் கூடும். எளிய உலகியலை வலியுறுத்துபவையாக அவை தோன்றும் அபாயமும் உண்டு. தம் மக்கள் சிறு கையால அளாவிய அந்தக் கூழ், தந்தையின் நெகிழ்ந்த மனமாக மாறும் அழகை அப்போது நாம் இழக்க நேரும்.

பொருள்: தம் மக்கள் மழலை சொல் கேளாதவரே - தமது மக்களுடைய மழலைச் சொல்லைக் கேளாதவரே, குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்வர்.

அகலம்: குழல், யாழ் என்பன ஆகுபெயர்கள், அவற்றின் இசைகளுக்கு ஆயினமையால். தருமர், தாமத்தர் பாடம் ‘என்பர்தம்’ . மற்றை மூவர் பாடம் ‘என்பதம்’ . ஏகாரம் கெட்டது.

கருத்து: தம் மக்கள் மழலைச் சொல் குழலினும் யாழினும் இனிது.

பரிமேலழகர் உரை
குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர். ('குழல்', 'யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார்.

மு.வரதராசனார் உரை
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
மழலை மொழியின் முன் இசை ஒன்றுமில்லை.

No comments:

Post a Comment