Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்

குறள் 322
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பகுத்து - பகுத்தல் -  பங்கிடுதல், வகைப்படுத்துதல், வகுத்துத் தெளிவாய்க்கூறுதல், வெட்டுதல் , பிடுங்குதல், To remove impurities; கோதுநீக்குதல்.

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

பல் உயிர்  - பல உயிர்களை

ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

நூலோர் - நூலாசிரியர்; கற்றோர்; அமைச்சர்; பார்ப்பனர்.

தொகுத்தல் - திரட்டிக் கூட்டுதல், எண் கூட்டுதல், சம்பாதித்தல், சுருக்குதல்,  மதிப்பிடுதல். 
தொகுத்தவற்றுள் -  (எல்லா கற்றோரும்) தொகுத்தள் நூல்களில் 

எல்லாம்  - உள்ள எல்லா 

தலை - எல்லா அறங்களிலும் சிறந்த அறம்

முழுப்பொருள்
நாம் மட்டும் உண்டு உயிர் வாழ்ந்தால் அது சிறப்பான வாழ்வு ஆகாது. வறுமையிலும் சரி, வசதியிலும் சரி, நம்முடைய உணவை பிறருடன் பகிர்ந்து உண்ணுவதே சிறப்பாகும். அப்படி பிறருடன் பகிர்வதால் அவருடைய பசி ஆறும். ஆதலால் அவரும் உயிர் வாழவர். இதனால் நாம் மற்றோர் உயிரை பேணி காப்பாற்றுகிறோம். இதுவே நாம் மட்டும் உண்டு பசியால் பிறர் இறந்தால் அதுவும் பாவமாகும்.

ஆதலால் பிறரை உணவால் உபசரித்து உயிர் காப்பதே கற்றோர்கள் தொகுத்த அறத்திலேயே சிறந்த அறமாகும்.

பிறருடன் பகிர்வதே சிறப்பு என்று சொல்லவில்லை. இங்கே திருவள்ளுவர் பல் உயிர் ஓம்புதல் என்கிறார். அப்படி என்றார் பசியால் வாடும் உயிர்களை காப்பாற்றுவது. வறியார்க்கொன்று ஈவதே ஈகை என்பதே இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்.

விருந்தோம்பல் அதிகாரம் இருக்கும் பொழுது, ஏன் இதை கொல்லாமை அதிகாரத்தில் கூறியுள்ளார் திருவள்ளுவர்? ஏனெனில் பசியைப் போன்ற ஒரு நோய் இவ்வுலகில் வேறு ஏதும் இல்லை. மற்ற தொற்று நோய்களால் இறந்தவர்களை விட பசியாலும் பட்டினியாலும் இறந்தவர்களே இவ்வுலகில் மிக அதிகம். இவ்வுலகில் பல நோய்களுக்கு மருந்து இருக்கிறது. பல நோய்களை தடுப்பூசிப் போட்டு அழித்துவிட்டோம். ஆனால் பசிப் போன்ற ஒரு நோய்க்கு மருந்து உணவு மட்டுமே. ஆனால் இவ்வுலக மக்கள் பசித்தோருக்கு உணவு வழுங்குகிறார்களா? இவ்வுலகம் பசித்தோருக்கு உணவு வழங்காமல் ஒருவன் பசியால் உயிர் இறந்தான் என்றால் அது ஒரு கொலைக்கு சமம் என்று அர்த்தம். அதனால் தான் அது கொல்லாமை அதிகாரத்தில் வருகிறது. பசியையை போக்குவதற்கு மக்கள் வறியார்க்கு உணவை ஈத்துவக்க வேண்டும். அதனால் தான் ”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” சிறந்த அறம். 

மேலும், 
என்று நாடு அதிகாரத்தில் வள்ளுவரே கூறியிருக்கிறார். பசி என்பது கொடியது. ஆதலால் அதனை போக்குவது அந்நாட்டின் கடமை. எல்லோர் பசியையும் போக்குவது ஒரு அரசங்காத்தின் அல்லது ஒரு ராஜ்ஜியத்தின் பொறுப்பாக்கிவிட்டு மக்கள் சென்று விட முடியாது ஏனெனில் எல்லோர் பசியையும் போக்குவது அவ்வளவு எளிதானதும் அல்ல. அதனை ஒரு அரசாங்கம் செய்வது நடைமுறையில் மிக மிக சிரமம். அதனால் தான் பசி தனை போக்குவதை ஒரு சமூக அறமாக திருவள்ளுவர் கூறுகிறார். அதனால் தான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று கொல்லாமை அதிகாரத்தில் கூறுகிறார். அதனால் அதனை நாம் ஒரு விருந்தோம்பல் பண்பாகவும் கருத வேண்டும்.

ஒப்புமை
”மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளன்கெழு தொண்டி” (அகநா 10:12)

“தீதிகந், தொல்வதுபாத் துண்ணும் ஒருவனும்” (திரி 70)

மேலும்: அஷோக் உரை

1780லும் 1876லும் தமிழக நிலப்பகுதியில் மாபெரும் பஞ்சம் வந்தபோது திருவிதாங்கூர் பகுதி முழுக்க கஞ்சித் தொட்டிகளைத் திறந்தார்கள். இந்தக் கஞ்சித் தொட்டிகளைத் திறக்கும்முறை இதுதான். அந்தந்த ஊரிலுள்ள வேளாள நிலப்பிரபுக்களை பிடித்து “நீங்கள் கஞ்சி தொட்டி திறக்கவேண்டும், காலையில் பத்து மணியிலிருந்து சாயங்காலம் மூன்று மணி வரைக்கும் கஞ்சிகொடுக்கவேண்டும்” என்று மகாராஜா ஏற்பாடு செய்கிறார். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அத்தனை சாதிக்கும் கஞ்சி அளிக்கப்பட்டது – கண்டிப்பாக அதில் சாதிக்கேற்ற இடவேறுபாடு இருந்தது. அந்தக்கால பார்வை அது. ஆனால் அனைவருக்கும் கஞ்சி கொடுக்கப்பட்டது

அந்தக்கஞ்சித்தொட்டிகளால் திருவிதாங்கூரின் மக்கள்தொகை இருமடங்கு ஆகியது என மதிலகம் ஓலைகள் காட்டுகின்றன. திருவிதாங்கூரின் இன்றைய ஊர்கள் உருவாகி வந்ததெல்லாம் அப்போதுதான். அந்தக் கஞ்சித்தொட்டி முறை மதத்துடன் பிணைக்கப்பட்டிருந்தமையால் பஞ்சம் விலகியும் நீடித்தது. சுதந்திரம் கிடைத்தபின்னரும் பல இடங்களில் இருந்தது. நிலச்சீர்திருத்தங்கள் வரும் காலம்வரை. தோவாளை கஞ்சித்தொட்டியில்ன் அ.கா.பெருமாள் கஞ்சி குடித்திருக்கிறார். இன்றும் கஞ்சிமடம் போன்ற ஊர்கள் இங்கு நிறையவே உள்ளன.

நண்பர்களே, தர்மதுரைகளும் நவீனர்களுமான வெள்ளையர் ஆண்ட நிலப்பகுதிகளில் கோடிக்கணக்கானவர்கள் பஞ்சத்தில் செத்து அழிந்தனர். பழைமைவாதிகளும் சாதியவாதிகளுமான திருவிதாங்கூரில் ஒருவர் கூட பட்டினியால் சாகவில்லை. நவீனத்துவ அறம் வேறு. அங்கு உணவு என்பது ஒரு விலைபொருள். வணிகப்பண்டம். நிலப்பிரபுத்துவகால அறம் சாதிவேறுபாடுகள் மிக்கது. பலவகை அடிமைத்தனங்கள் கொண்டது. ஆனால் அங்கே உணவு அன்னம், தெய்வ வடிவம். பகிர்ந்துண்ணுதல் அதன் நெறி.

........
........
........

ஒரு பனையேறி ஆயிரம் மூடநம்பிக்கைகளும் சாதிப்பற்றும் கொண்டவராக இருக்கலாம், ஆனால் குடிப்பதற்கு என கேட்டால் பதநீருக்குக் காசு வாங்கமாட்டார். பிள்ளைக்குச் சமைப்பதற்கு என்று கேட்டால் மீனவர் மீனுக்குக் காசுவாங்கமாட்டார். பகிர்ந்துண்ணுதல் இயல்பான அறமாக இருந்தது. அதை அவர்கள் பண்டமென்றே பார்க்கவில்லை.

===

எழுத்தாளர் ஜெயமோகனின் ’ராமனின் நாடு’ கட்டுரையில் கீழ்க்காணும்வாரு வருகிறது

நான் “வண்மை இல்லை ஓர் வறுமை இல்லையால்” என்ற கம்பன் வரியை நினைத்துக்கொண்டேன். வறுமை இல்லாத இடத்தில் கொடையும் இருக்கமுடியாது. பகிர்தல் இருக்கும். அது கொடை அல்ல. பகிரும்போது கொடுப்பவனும் பெறுபவனும் சமமான நிலையில் இருக்கிறார்கள். பகிர்தல் இருந்தால் வறுமை இருக்காதுதான். எலமஞ்சலி லங்கா வாழ்வது வறுமையும் வள்ளல்தன்மையும் இல்லாத பழைய ஒரு காலகட்டத்தில்

முழுக்கட்டுரை

நான் கோதாவரியின் கரையில் பிரம்மாவரம் அருகே இருந்த எலமஞ்சலி லங்கா என்னும் ஊரில் ஒரு விருந்தினர் மாளிகையில் ஒருமாதகாலம் தங்கி எழுதினேன்.

அற்புதமான சூழல். எலமஞ்சலி ஒரு அழகிய சிற்றூர். வளையோடுவேய்ந்த நீளமான வீடுகள் நிரைவகுத்த சீரான தெருக்கள் கொண்டது. வறுமையோ குப்பைக்கூளமோ இல்லாத சூழல். வீடுகளுக்கு முன்பக்கமாகவே இரு வாசல்கள். ஒன்று ஆண்களுக்கு இன்னொன்று பெண்களுக்கு.

ஊருக்கு அப்பால் பிரம்மாண்டமான தென்னந்தோப்புகள். தென்னங்காடு என்றே சொல்லவேண்டும். நடுவே ஓடும் மண்சாலை இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று கோதாவரியை அடையும். கோதாவரிக்கரையின் ஓரமாக செம்படவர்களின் ஊர்கள். மண்ணாலான சுவர்கள் கொண்ட சிறிய வீடுகள். ஆனால் சுத்தமானவை. வாரந்தோறும் செம்மண்ணாலும் சுண்ணத்தாலும் கோலமிட்டு அவற்றை அழகுறச்செய்வார்கள்.

தென்னந்தோப்பு நடுவே இருந்தது நான் தங்கியிருந்த விருந்தினர் மாளிகை. பத்தடி உயரமான சிமிண்ட் தூண்களுக்குமேல் அது நின்றது. அதன் முகப்பு ஊரைநோக்கியிருந்தாலும் ,மறுபக்கம் மிகவிரிவான ஒரு உப்பரிகை கோதாவரியை நோக்கித்திறந்திருந்தது.  அங்கிருந்து நோக்கினால் ஏறத்தாழ பத்து கிலோமீட்டர் அகலத்திற்கு கோதாவரி விரிந்து கிடக்கும்.

கோதாவரியின் மிக அதிகமான அகலம் அங்கேதான்.  இரண்டு பெரிய நீர்வழிகளாகப்பிரிந்து கடலை அணுகியது. நடுவே பெரிய மணல்திட்டு ஒரு தீவுபோல தென்னைமரங்களும் புதர்களும் செறிந்து தெரியும். கோதாவரியின் நீரோட்டத்தில் அந்தத்தீவு கப்பல் போல மிதந்துசெல்வதாக பிரமை எழும். கோதாவரியின் நீர்ப்பாசிமணம் படிந்த காற்று அலையலையாக வீசிக்கொண்டிருக்கும்.

நானும் எனக்கு உதவியாக வந்த தனசேகரும் அங்கே குடியேறினோம். எங்களுக்குக் காவலாக ஒரு வாட்ச்மேன் மட்டும்தான். அவர்தான் அருகே ஒரு வீட்டில் சொல்லி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவை தினமும் கோதாவரியில் சிறுபடகில் சென்று எடுத்துவந்து தருவார். வயதானவர். எஞ்சிய நேரம் முழுக்க கீழே சிமிண்ட் தூண்களுக்கு நடுவே போடப்பட்ட கயிற்றுக்கட்டிலில் சுருட்டுப்பிடித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் அமர்ந்திருப்பார்.

நான் அந்த உப்பரிகையிலேயே நாள் முழுக்க அமர்ந்திருப்பேன். காலை எழுந்ததும் திரைக்கதையை கொஞ்சம் எழுதுவேன். பிறகு கண்ணை நிறைத்தபடி ஓடிக்கொண்டிருக்கும் கோதாவரியின் அலைகளையும், அதன் மேல் மெல்ல ஒழுகிச்செல்லும் படகுகளின் விரிந்து புடைத்த கொக்குச்சிறகு போன்ற வெண்ணிறப்பாய்களையும், அப்பால் வளைந்திறங்கும் வானத்தையும் பார்த்துக்கொண்டிருப்பேன். மறுகரை மெல்லிய பச்சைக்கோடு போல நெளிந்துகொண்டிருக்கும்.

படகுகளில் இருந்து செம்படவர்கள் வலைவிரிப்பதைப்பார்ப்பது ஓர் அபாரமான அனுபவம். படகுகள் சிறகு விரிப்பதுபோலத்தோன்றும். வலை சென்று நீரில் விழும் இடம் எப்படி கச்சிதமான வட்டமாக அமைகிறது என்று எண்ணி எண்ணி வியப்பேன். படகில் நின்றபடி செம்படவன் வலையை இழுக்கையில் அந்த விசைக்கு எப்படி படகு நகராமலிருக்கிறது?  சிலசமயம் படகு பெரும்பாலும் நீருக்குள் மூழ்கியிருக்க படகோட்டி வெறும்நீரில் துடுப்பிட்டு செல்வதுபோலத்தெரியும்

அந்தியில் வேறுவகை மீன்கள் வரும். ஆகவே சிறிய லாந்தல்விளக்குகளுடன் செம்படவர்கள் நீர்ப்பரப்பில் மீன்பிடிப்பார்கள். இருளுக்குள் அவை விண்மீன்கள் போலத்தெரியும். அலையடிக்கும் விண்மீன்கள். வானத்து விண்மீன்களுடன் அந்தச்செந்நிற விண்மீன்களும் கலந்துவிடும். அவர்களுக்கு என்றே பாடல்கள் உண்டு. நம்மூர் தெம்மாங்குபோல. பல மெட்டுக்களை பின்னாளில் தேவிஸ்ரீபிரசாத் சினிமாப்பாட்டுகளாக ஆக்கியிருக்கிறார். காற்றின் அலைவேறுபாடுகளுக்கேற்ப அந்த பாடல்கள் கிழிந்து கிழிந்து பிசிறுகளாக வந்து காதில் விழும்.

நான் அந்த மனநிலையை நீட்டிக்கச்செய்வதற்காக தெலுங்கு பாடல்களை மட்டுமே இரவில் கேட்பேன். ராமராவ் நடித்தபடங்களுக்காக கண்டசாலா பாடிய பாடல்கள் அற்புதமானவை. கண்டசாலா என்பது ஓர் ஊர், கோதாவரிக்கரையில்தான் அதுவும் இருக்கிறது.  ராமராவை நினைக்காமல் ஆந்திரத்தை பார்க்கமுடியாது. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். சிலைகளாக, சினிமாப்பாடல்களாக. இன்றைய ஆந்திரம் என்பது ராமராவின் சிருஷ்டி. தேங்கிக்கிடந்த ஆந்திரத்தை மறுபிறப்பு எடுக்கவைத்தவர் அவர்.என்றும் மக்களுடன் ஒருவராக இருந்தவர்

கூடவே தியாகய்யர் பாடல்கள்.அவையும் ராமா ராமா என்றுதான் கூவுகின்றன. ‘ராஜாதி ராஜ வேஷா ராஜனுத லலித பாஷா” என்கிறார் தியாகராஜர். அரசனுக்கரசனாக தோற்றமளிப்பவன். அரசனுக்குரிய எளிமையான பேச்சு கொண்டவன்” ராமன் ஒரு கனவு. ஓர் இலட்சியம்.

எங்கள் வாட்ச்மேனுக்கு தமிழ் தெரியாது. எங்களுக்கு தெலுங்கும் தெரியாது. ஆகவே பெரும்பாலும் சைகைமொழியால்தான் உரையாடல். பெரிய சிக்கலொன்றும் இல்லை. சிலநாட்களில் தெலுங்கு புரியத்தொடங்கியது. நான் அதிகாலையில் எழுந்து வேலைசெய்வதையும், என் செலவுக்கான பணத்தை தனசேகரே அளிப்பதையும், தனா அரைக்கால்சட்டை போட்டிருப்பதையும் கண்ட வாட்ச்மேன் அவரை என் எஜமான் என்று புரிந்துகொண்டார்.

காலையில் வந்ததும் என்னிடம் “பெத்தராயுடு எழுந்ததும் டீ கொண்டு வைத்திருப்பதைச் சொல்லிவிடுங்கள்” என்று பவ்யமாகச் சொல்வார். பெத்தராயுடு ஒன்பதரை மணிக்கு எழுந்து டீயை சாப்பிடுவார். மதிய உணவை பெத்தராயிடுவுக்கு வாட்மேனே அன்புடன் பரிமாறுவார். சமயங்களில் பெத்தராயிடுவை எழுப்பி உணவூட்டவில்லை என்பதற்காக என்னிடம் கோபித்துக்கொள்வதும் உண்டு

நாங்கள் ஒருமுறை வெளியே நடக்கச்சென்றபோது வாட்ச்மேனிடம் பார்த்துக்கொள்ளச்சொல்லிவிட்டுப் போனோம். அவர் சரி என்றார். திரும்பி வந்தால் விடுதி எல்லா வாசல்களும் திறந்து அனாதையாக கிடந்தது. அப்பகுதியில் எங்கும் மானுடநடமாட்டம் இல்லை. உள்ளே மடிக்கணினிகள் , செல்பேசிகள், பணம் ,நகை எல்லாம் இருந்தது. நல்லவேளை திருட்டுப்போகவில்லை.

ஒருமணிநேரம் கழித்து வாட்ச்மேன் வந்தார். கையில் இரவுணவு. தனா அவரை கண்டபடி திட்டினார். அவருக்கு என்ன புரிந்ததோ சிரித்தபடி தலையாட்டிக்கொண்டிருந்தார்.  மீண்டும் மறுநாள் அவரிடம் பலமாக எச்சரித்துவிட்டு நடக்கச்சென்றோம். திரும்பி வந்தபோது வீடு திறந்து கிடந்தது. அனு தனா உக்கிர ரூபம் கொண்டார். வாட்ச்மேன் தெய்வீகப்புன்னகை புரிந்தார்.

மீண்டும் அதேதான் கதை. அவர் அங்கே இருக்கையில் நாங்களே பூட்டிவிட்டும் செல்லமுடியாது. அப்படியும் ஒருமுறை சாவி வாங்கி பூட்டிவிட்டுச்சென்றோம். அவர் அதன் பின்னர் திறந்திருக்கிறார். அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். என்ன செய்வதென்றே தெரியவில்லை

அப்பகுதியில் டைகர்பிரான் எனப்படும் இறால்வளர்ப்புப் பண்ணைகள் மிகுதி. கோதாவரியின் நீரை மோட்டார் வைத்து இறைத்து வயல்களில் தேக்கி இறால் வளர்ப்பு செய்வார்கள்.  அங்கே கேட்டால் அதை ‘டிகர்’ என்பார்கள். டைகர் பிரான் என்பதன் சுருக்கம். வளர்ந்த இறால்களை வாங்கிச்செல்ல வந்த லாரியில் ஒருவர் தமிழ் பேசினார். எங்கள் தமிழ்ப்பேச்சைக்கேட்டு அவரே வந்து எங்களிடம் உரையாடினார். மாணிக்கம் என்று பெயர். திருப்பத்தூர்காரர்

அவரிடம் வாட்ச்மேனிடம் இந்தச்செய்தியைச் சொல்லிப்புரியவைக்க முடியுமா என்று கோரினோம். மதிப்புமிக்க பொருட்கள் இருக்கின்றன, கதவை மூடிவிட்டுச் செல்லும்படி நாங்கள் மன்றாடுவதாகச் சொல்லச் சொன்னோம். மாணிக்கம் சிரித்தார். “சார், இவனுகளுக்கு அதைச் சொல்லிப்புரியவைக்கவே முடியாது. ஏன்னா இங்க திருட்டே கெடையாது”

ஆச்சரியமாக இருந்தது. “பாத்தீங்கள்ல, ஒரு வீட்டையாவது மூடி வைக்கிறாங்களா? பலசமயம் ராத்திரிகூட கதவு தெறந்துதான்சார் கெடக்கும். இங்க திருட்டு நடக்கிறதே இல்ல. அதனால அந்த மாதிரி நெனைப்பே இவனுகளுக்கு இல்ல…. வேணுமானா சொல்றேன்”. நான் “வேண்டாம்” என்றேன். அது திருட்டை அவர்களுக்கு நாமே கற்பிப்பதுபோல.

உண்மையில் எலமஞ்சலி அப்படித்தான் இருக்கிறது என்பதை அதன்பின் கண்டேன். அங்கே குற்றம் என்பதே இல்லை. திருட்டு, அடிதடி எதுவும். இத்தனைக்கும் எல்லா மளிகைக்கடைகளிலும் சாராயம் கிடைக்கும். குடித்தால் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள், அவ்வளவுதான். எல்லா வீடுகளும் திறந்துதான் கிடந்தன. மீனவர்கள் வீடுகளை அப்படியே விட்டுவிட்டு இரண்டுநாட்கள் மீன்பிடிக்கச்செல்வதும் உண்டு

கோதாவரியில்தான் மிகச்சிறந்த உணவை உண்டேன். மிகக்காரமான உணவு, ஆனால் அற்புதமனா சுவை. மீன்குழம்புடன் இட்லி.மீன்குழம்பின்மேல் இரண்டு இஞ்ச் கனத்துக்கு எண்ணை நிற்கும். கோதாவரியில் மீனுக்கு நெய் மிக அதிகம். பளிங்குத்தயிர். காலையுணவாக உளுந்துவடை சாப்பிட்டது அங்கேதான். வாட்ச்மேன் எப்போதுமே நிறைய உணவு கொண்டுவருவார். ஏழுஎட்டுபேருக்குத் தாங்கும். ஆந்திரர்கள் நன்றாகச்சாப்பிடுபவர்கள். நாங்கள் கொறிப்பவர்கள்.

பரிமாறி எஞ்சிய உணவை வாட்ச்மேன் சாப்பிடுவார். மிச்ச உணவை வைத்துக்கொண்டு கீழே அமர்ந்திருப்பார். படகுகள் செல்லும்போது ‘ஓகே ஓ!” என கூவுவார். பசியுடன் இருக்கும் செம்படவர்கள் வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள். விலையேதும் இல்லை. நன்றிசொல்வதும் இல்லை. இயல்பாகச் சாப்பிடுவார்கள்.

ஒருநாள் நாங்கள் நடைசென்றுவிட்டு திரும்பிவந்தோம். விடுதிக்குள் இரு செம்படவர்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எங்களைக் கண்டதும் நட்புடன் சிரித்து “பசித்தது , ஆகவே வந்தோம். நீங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டீர்கள் என்றால் பாத்திரம் தரையில் இருக்கும் என்றார் அண்ணா. தரையில் இருந்தது. ஆகவே சாப்பிடுகிறோம்” என்றார்கள். 

“நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அவர் எங்கே?” என்றென். “அவர் நாங்கள் வரும்போதே இல்லை. மகள் வீட்டுக்குப்போயிருப்பார் என நினைக்கிறோம்” சாப்பிட்டு பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டு துடுப்பைத்தூக்கிக்கொண்டு படகைநோக்கிச் சென்றார்கள்.

நான் “வண்மை இல்லை ஓர் வறுமை இல்லையால்” என்ற கம்பன் வரியை நினைத்துக்கொண்டேன். வறுமை இல்லாத இடத்தில் கொடையும் இருக்கமுடியாது. பகிர்தல் இருக்கும். அது கொடை அல்ல. பகிரும்போது கொடுப்பவனும் பெறுபவனும் சமமான நிலையில் இருக்கிறார்கள். பகிர்தல் இருந்தால் வறுமை இருக்காதுதான். எலமஞ்சலி லங்கா வாழ்வது வறுமையும் வள்ளல்தன்மையும் இல்லாத பழைய ஒரு காலகட்டத்தில். கம்பன் பாடிய ராமனின் நாட்டில்.

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘காமம், உணவு, யோகம்-3’ கட்டுரையில், இவ்வாறு வருகிறது

இந்துமதத்திற்குப் பின் உருவான சமண, பௌத்த மதங்களில் கொல்லாமை நேரடியாக உணவுடன் சம்பந்தப்படுத்தப்பட்டது. ஆகவே கடும் விலக்குகள் உருவாயின. அந்த கொல்லாமை நெறி இந்தியாவுக்கு சமணம் அளித்த பெருங்கொடை. பழங்குடிப் போர்களால் கொந்தளித்துக்கொண்டிருந்த இந்த தேசம் எரியணைந்து குளிர அது வழிவகுத்தது. இன்னும் பலநூற்றண்டுகளுக்கு சமண முனிவர்களுக்கு நாம் கடமைப்பட்டவர்கள்

எழுத்தாளர் ஜெயமோகனின் அருகர்களின் பாதை பயணக் கட்டுரையில் ஓசியான் பற்றிய குறிப்பில் கொல்லாமை பற்றி கீழே வருகிறது


ஓசியான் சமணர்களுக்கு முக்கியமான ஒரு தலம். ராஜஸ்தானின் ஓஸ்வால் இனக்குழுவின் பிறப்பிடம் இது என்று சொல்கிறார்கள். ஓஸ்வால்கள் இன்று துணி வணிகத்தில் ஓங்கியிருக்கிறார்கள். அவர்களின் ஓசியா மாதாஜி கோயில் இங்குள்ளது என்று குறித்து வைத்திருந்தேன்.

இந்தக் கோயில் ஒரு மலைமேல் உள்ளது. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோயில். 12ஆம் நூற்றாண்டில் விரிவாக்கிக் கட்டப்பட்டது. இங்குள்ள இரு கோயில்கள் சண்டி கி மாதா கோயில் மற்றும் அம்பா மாதா கோயில் ஆகியவை 1178இல் கட்டப்பட்டவை.

இந்த ஊர் பற்றிய ஒரு ஆர்வமூட்டும் தகவல் வாசித்தேன். இவ்வூருக்கு ஒரு காலகட்டத்தில் உப்கேஸ்பூர் என்று பெயர் இருந்தது. இங்குள்ள சாமுண்ட மாதாவுக்கு ஒரு காலகட்டத்தில் எருமைகளை பலிகொடுத்தார்கள். ஸ்ரீ ரத்ன பிரபா சூரி என்ற ஆச்சாரியார் அதை நிறுத்தினார். ஆகவே தேவி கோபம் கொண்டு ஆச்சாரியாரைக் கடும் நோவுக்கு ஆளாக்கினார். ஆனால் அந்த வலியைத் தாங்கிக் கொள்வதையே ஒரு பெரும் தவமாக ஆச்சாரியார் செய்தார்.

தேவி மனமிரங்கி ஆச்சாரியாரிடம் மன்னிப்புக் கோரினாள். ஆச்சாரியார் தேவிக்கு நல்லுரை சொன்னார். பக்தர்கள் கொடுக்கும் உயிர்ப்பலிகளின் பாவம் முழுக்க தேவிக்கே வரும் என்றும் விளைவாக அவளே நரகத்தில் உழலவேண்டியிருக்கும் என்றும் சொன்னார். தேவி அந்த நல்லுரை கேட்டு மனம் திருந்தி இனிமேல் பலி தேவையில்லை, சிவப்புநிறமான பூக்கள் கூடத் தேவையில்லை என்று முடிவெடுத்தாள். அதன் பின் ஆச்சாரியார் சாமுண்டிதேவிக்கு சாச்சி மாதா என்று பெயர் சூட்டினார்.

இந்த ஆச்சரியமான கதை நாட்டார் வழிபாட்டுமுறையை எப்படி சமணம் மாற்றியமைத்தது என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாகும். இந்தியா முழுக்க இந்த மாற்றத்தை சமணம் செய்திருக்கிறது. இது ஒரு பெரிய பண்பாட்டு மாற்றம். உயிர்ப்பலி இல்லாமலாவதென்பது உண்மையில் அந்த இனக்குழுவின் அடிப்படை மனநிலையையே மாற்றியமைக்கிறது. வன்முறைநீக்கம் செய்யப்பட்ட சமூகத்தில் உள்மோதல்கள் குறைகின்றன. அந்தச்சமூகம் பிறசமூகங்களுடன் சுமுகமான உறவுகொள்ள ஆரம்பிக்கிறது. வணிகத்திலும் பிற சமூகச்செயல்பாடுகளிலும் வெற்றி அடைய ஆரம்பிக்கிறது. தமிழகத்திலும் சாதிகளைக் கூர்ந்து ஆராய்ந்தால் இந்த அம்சத்தைக் காணலாம்.
====================
குரு நித்ய சைதன்ய யதியின் யதி:தத்துவத்தில் கனிதல் என்ற புத்தகத்தில் “ப்ரக்ஞையின் நதியில்” என்ற கட்டுரையில் கீழ்க்கண்ட வாரு வறுமை, பசி ஆகியவற்றைப் பற்றி வருகிறது
பகிர்தல்

எங்கள் ரயில் முக்கிய ஸ்டேஷனில் வந்து நின்ற பொழுது உண்ணுவதற்காக இரண்டு உணவு பொட்டலங்களை வாங்கினோம். குரு (நடராஜ குரு) தன் பொட்டலத்தை பிரித்து முதல் கவளத்தை கையில் எடுத்த பொழுது, ஜன்னலின் வெளியே ஏழு அல்லது எட்டு வயது நிரம்பிய சிறுவன் கையை நீட்டி யாசித்தான். குரு அந்த சோற்றுருண்டையை அவனிடம் கொடுத்தார். அவன் அவசரமாக அதை முழுங்கிவிட்டு குரு இரண்டாவது உருண்டையை சாப்பிடுவதற்கு முன்பே மறுபடியும் கையை நீட்டினான்.

எனக்கு அது எரிச்சலூட்டியது. நான் அந்த பிள்ளையை தள்ளி விலக்கி விட நினைத்தேன். அனால் குரு நான் அப்படி செய்வதை தடுத்தார். அவர் இரண்டாவது உருண்டையை தான் சாப்பிட்டு விட்டு மூன்றாவது உருண்டையை அந்த சிறுவனுக்குக் கொடுத்தார்.
அவர் திரும்பி என்னைப் பார்த்து சொன்னார், “மனிதர்கள் பிச்சைக்காரர்களால் எரிச்சலடைவார்கள் என எனக்குத் தெரியும். வறுமை மோசமானது அனால் அது ஒரு குற்றம் அல்ல. ஒவ்வொரு மனிதனும் அவனால் முடிந்த அளவிற்கு வாழ முயற்சிக்கிறான். நீ இந்தியாவில் காண்பது மேலை நாடுகளில் நடக்க சாத்தியமேயில்லை. இந்த சிறுவன் நமக்கு முற்றிலும் அறிமுகமற்றவன், ஆனால் மற்றவர்களின் அன்பின் மீதும், கருணையின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறான். ஒரு மனிதன் மீது மற்றொரு மனிதன் வைத்திருக்கும் நம்பிக்கையே அவனை நம் முன் கைநீட்ட வைக்கிறது. உனக்கு இந்த காட்சியை கண்டு கண்களில் நீர் வரவேண்டும். இந்த பரஸ்பர பகிர்தலும் அடையாளப்படுத்துதலும் மேலை சமூகங்களில் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளன.”

“வறுமை ஒழிப்பதையும், உதவி தேடி நிற்கும் மனிதரின் நிலையை புரிந்து கொள்வதையும் குழப்பிக் கொள்ளாதே. முதல் பிரச்சனையை எடுத்துக் கொள்ள விரும்பினால் நீ மொத்தமாக உலக பொருளாதாரத்தை சரிப்படுத்த வேண்டியிருக்கும். உன்னால் முடிந்தால் போய் அதைச் செய். ஆனால் இரண்டாவது பிரச்சனைக்கு உடனடியான தீர்வு தேவை. அதற்காக உன் மகிழ்ச்சியை துறக்க வேண்டாம், உனக்கு இருப்பதை பகிர்ந்தால் மட்டும் போதும். உன்னுடைய மகிழ்ச்சி மற்றவருடைய மகிழ்ச்சியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்.”


பரிமேலழகர் உரை
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு ஐவகை உயிர்களையும் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -அறநூலை உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம். ('பல்லுயிரும்' என்னும் முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஓம்புதல்: சோர்ந்தும் கொலை வாராமல் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்து உண்டல் இன்றியமையா உறுப்பு ஆகலின் அச்சிறப்புத் தோன்ற அதனை இறந்தகால வினையெச்சத்தால் கூறினார். எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுபடக் கூறுதல் இவர்க்கு இயல்பு ஆகலின், ஈண்டும் பொதுப்பட 'நூலோர்' என்றும் அவர் எல்லார்க்கும் ஒப்ப முடிதலான் 'இது தலையாய அறம்' என்றும் கூறினார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - கிடைத்த வுணவை இயன்றவரை பசித்தவுயிர்கட்குப் பகுத்துக் கொடுத்துண்டு பல்வகை யுயிர்களையும் பாதுகாத்தல்; நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை- அறநூலோர் இருவகை யறத்தார்க்குந் தொகுத்த அறங்களெல்லா வற்றுள்ளும் தலையாயதாம்.

கொல்லா வறத்தைக் கடைப்பிடித்தல் கொலையை நீக்குதல். கொலை உடல் சிதைத்துக் கொள்ளுதலும் உணவளியாமற் கொல்லுதலும் என இருவகை.இரண்டும் விளைவளவில் ஒன்றே. உண்ணாதவுயிரி இறக்குமாதலால் வாழ்நாள் முழுவதும் உணவளித்துக் காத்தல் வேண்டுமென்பது தோன்ற 'ஓம்புதல்' என்றார். நூலோர் என்று பொதுப்படக் கூறியது இயல் நோக்கி அறநூலோரைக் குறித்தது, உணவளித்துக் காத்தல்போற் சிறந்த நன்மை வேறின்மையின் 'தலை' என்றார்.

மணக்குடவர் உரை
பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல், நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம். இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.

மு.வரதராசனார் உரை
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.

பொருள்: பகுத்து உண்டு பல் உயிர் (உம்) ஓம்புதல் -(தம் உணவைப் பிற உயிர்களுக்குப்) பகுந்து கொடுத்து (த்தாம்) உண்டு பல உயிர்களையும் பேணுதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -(அற) நூலோர் (சிறந்த அறங்களென எடுத்துத்) தொகுத்துச் சொல்லியவற்று ளெல்லாம் தலையாய அறம்.

அகலம்: தலையாய அறத்தைத் தலை என்றார். தொகுத்தல் - ஒன்று சேர்த்தல். தொகுத்துச் சொல்லுதலைத் தொகுத்தல் என்றார். முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.

கருத்து: பகுத்து உண்டு பல உயிரையுங் காத்தல் தலையாய அறம்.

English Meaning - As I taught a kid - Rajesh
If a person lives well only for himself then it doesn't become a good life. If one eats well while others die due to poverty, then it is a sin. During both good times and bad times, one must share his food with others and live. By sharing good with others, others hunger is reduced and their lives are saved. Hence, scholars have mentioned that quenching others hunger by sharing food with others is kept as the noblest thing one can do.
At high level, it looks we need to share food with others. But deeper if we look, we should not admit killing of others life. Sharing food is an e.g of how to save lives from dying due to hunger

Questions that I ask to the kid
What is the considered as the top thing by the authors compiled the wisdom of life? Why?

No comments:

Post a Comment