Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்

குறள் 266
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]

பொருள்

தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.
தவஞ்செய்வார் - தவம் செய்வார்;  பற்று அற்று வாழ்வோர்கள்

கருமம் - செயல்; வினைப்பயன்; தொழில் வேத சம்பந்தமான சடங்கு; தொழில், இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி.
தங்கருமஞ் - தம் கருமம் - தான் செய்ய வேண்டிய செயல்களை

செய்வார் - செய்வார்கள்

மற் றல்லார் - மற்று அல்லார் - மற்றவர்கள்

அவம்  - வீண்; பயனின்மை; கேடு; ஆணை; அழைப்பு; வேள்வி; ஆகாயத்தாமரை
அவஞ்செய்வார் - அவம் செய்வார்- பயன் அல்லாதவற்றை செய்வார்கள்

ஆசை - வேண்டலுறும்பொருட்கண்செல்லும்விருப்பம்; விருப்பம்; பொருளாசை; காமவிச்சை; அன்பு; பேற்றில்நம்பிக்கை; பொன்; திசை; பொன்னூமத்தை, இச்சை, விருப்பம்
ஆசையுட் பட்டு - ஆசையுள் பட்டு -  இச்சையின் பால், விருப்பத்தின் பால், தான் வேண்டியவற்றை/கண்ணுக்கு விருப்பபடுவற்றை கண்மூடிதனமாக அடை முற்ப்படுவது

முழுப்பொருள்
பயன் இல்லாத வற்றை செய்பவர்களை அவம் செய்பவர்கள் என்று கூறுவார்கள். இத்தகையவர்கள் ஒரு பொருளின்மீதோ அல்லது ஒரு செயலின் மீதோ இச்சைக்கொண்டுச் செயலின் பயன் பற்றி ஆராயாமல் இச்சையின் விசையால் சிற்றின்பத்தை நாடி செய்வார்கள். ஒரு வலைக்குள் சிக்கிகொள்வார்கள். அது பயன் அற்றவை ஆகும். இவர்கள் தங்கள் வாழ்வு தனை ஒரு சிறிய வட்டத்திற்குள் அடக்கிக்கொண்டு வாழ்வை  ஒரு நெறியில்லாமல் உலகவாழ்வியலில் வீணாக கழிப்பர்

ஆனால் தான் செய்ய வேண்டிய செயல்களை, கடமைகளை அறிந்து அதற்கு ஏற்றார்ப்போல் வாழ்வை நெறியுடன் அமைத்து மற்ற பயன் அல்லாத செயல்/பொருள்களின் மீது பற்று நீக்கி ஒரு வாழ்வை வாழ்பவர்கள் தவம் செய்பவர்கள் போல் ஆவர்.

இக்குறளில் நாம் காண வேண்டியது என்னவென்றால் இங்கே பற்றற்ற பயனுள்ள கர்ம குறிக்கோளுடன் ஒரு இல்லற வாழ்க்கை வாழ்பவன் கூட தவ வாழ்க்கை வாழ்பவனாக கருத படுவர்.

கிட்டதட்ட இதனின் மையப்பொருளில் இல்வாழ்கை அதிகாரத்தில் ஒரு குறளில் கூறியிருப்பார் திருவள்ளுவர்

மேலும்: நன்றி: அஷோக்


பரிமேலழகர் உரை
தம் கருமம் செய்வார் தவம் செய்வார் - தம் கருமம் செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார், மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகிய வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார். (அநித்தமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் 'தம் கருமம் செய்வார்' என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம் செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.)

மணக்குடவர் உரை
தங்கருமஞ் செய்வார் தவம் செய்வார்; அஃதல்லாதன செய்வாரெல்லாம் ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார்.
இது தவம்பண்ண வேண்டுமென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரைதவம் செய்வார் தம் கருமம் செய்வார் - உலகப் பற்றைத் துறந்து தவஞ் செய்வாரே தம் கருமத்தைச் செய்பவராவர்; அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - அவரல்லாதார் பிறவிக்கேதுவான பொருளின்ப ஆசை வலையுள் அகப்பட்டுத் தமக்குக் கேடு செய்பவரேயாவர்.

'கருமம்' என்றது நன்மையான. கருமத்தை , தொடக்கமிலியாக (அநாதியாக)க் கணக்கற்ற பிறந்திறந்துழன்று வரும் ஆதன் (ஆன்மா) , அப் பிறவித் துன்பத்தினின்று விடுதலை பெற்றுப் பெயராப் பேரின்பந் துய்த்தற்கு , உடலை யொடுக்கி ஆசையை யடக்கி உள்ளத்தை யொருக்கி இறைவனொடு ஒன்றுவிக்கும் தவத்தை மேற்கொள்வதே தகுந்த வழியாதலின் , அதைச் செய்பவரைத் ' தங்கருமஞ் செய்வார்' என்றும் ; நிலையாது திடுமென்று மாய்வதும் பிணி மூப்பால் நலிவதுமாகிய உடம்பில் நின்று , மின்னல் போல் தோன்றி மறையுஞ் சிற்றின்பத்தை நுகர்தற் பொருட்டு, எல்லையில்லாது தொடந்து செல்லும் பிறவித் துன்பத்திற் கேதுவான தீவினைகளைச் செய்து கொள்பவரை ' அவஞ் செய்வார்' என்றுங் கூறினார்.

ஆசைக்கோ ரளவில்லை யாதலால் , தன்பொருட்டும் மனைவி மக்கள் பொருட்டும் ஆசைக் கடலுள் அழுந்தச் செய்யும் இல்லறத்தினும், தன்னந்தனியாயிருந்து தவத்தின் வாயிலாய் ஆசையறுக்கும் துறவறமே , வீடு பேற்றிற்குச் சிறந்த வழி யென்பது கருத்து.

இல்லறத்தானும் தன் கடமையை அற நூற்படி செய்வானாயின் தவஞ் செய்தவனாவான் என்றும் , பகவற் கீதையில் கூறியவாறு பயன் நோக்காது தன் கடமையைச் செய்பவன் கருமவோகி என்றும், இதற்குப் பொருள் கூறுவது பொருந்தாது. தவம் ஈரறத்திற்கும் ஓரளவிற் பொதுவாகுமே யன்றி இல்லறவினை துறவறவினை யாகாது.

பொருள்: தவம் செய்வாரே தம் கருமம் செய்வார் -தவத்தைச் செய்பவரே தமது கருமத்தைச் செய்பவர்; அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - தவஞ் செய்யாதார் ஆசையுட் சிக்கி வீண் கருமம் செய்பவர்.

அகலம்: கருமம் - வினை. செய்வாரே என்பதன் ஏகாரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. ‘மற்று’ அசை. தருமர், நச்சர் பாடம் ‘ஆசையுட் பட்டு’. மற்றை மூவர் பாடம் ‘ஆசையிற் பட்டு’.

கருத்து: தவஞ் செய்வாரே தம் கருமம் செய்தவராவர்.

மு.வ உரை
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.

சாலமன் பாப்பையா உரை
தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.

No comments:

Post a Comment