Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு

குறள் 515
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் 
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
[பொருட்பால், அரசியல், தெரிந்துவினையாடல்]

அறிந்தாற்றிச் - அறிந்து ஆற்றிச்
அறிதல் - செயலினை செய்ய நுட்பமாய் எல்லா வழிகளையும் அறிதல். [பேரரசியே நான் அமைச்சன். அனைத்துத் திசைகளையும் ஐயத்துடன் நோக்கக் கடன்பட்டவன்.]

ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல்; உவமையாதல்; செய்தல்; தேடுதல்; உதவுதல்; நடத்துதல்; கூட்டுதல்; சுமத்தல்; பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்.

செய்கிற்பாற்கு -  செய்கிற குணம்

அல்லால் - அக்குணம் உள்ளவர்களை தவிர வேறு எவரிடம்

வினைதான் - அந்தச் செயலை

சிறந்தானென்று - சிறந்தான் என்று - இவன் சிறதவன் என்று (தவறாக) எண்ணி

ஏவற்பாற் றன்று - ஏவல் பாற்று அன்று
ஏவல் - ஏவுகை, தூண்டுகை; கட்டளை; ஏவல்வினைமுற்று; ஓதுகை; பணிவிடை; பணியாள்; பிசாசைஏவிவிடுகை; வறுமை.
பாற்று - உரியது
அன்று - அல்ல / இல்லை

முழுப்பொருள்
ஒருவன் செயலை செய்ய வேண்டும். முதலில் அந்த செயலை முழுதாக செறிவாக நிறைவு செய்ய அதன் வழிகளை ஆராய வேண்டும். அவ்வழியில் செல்கையில் வரும் இடையூறுகளை பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்படி வருகையிலோ அல்லது எதிர்பாராத விதமாக வருகையிலோ இடையூறுகளை நீக்கி செயலை செய்து முடிக்க வேண்டும்.

ஆனால் செல்லும் வழிகளையும், வரக்கூடிய இடையூறுகளையும் வியூகிக்க முடிந்தவன் சிறந்தவனாக மாட்டான். எவன் ஒருவன் அச்செயலை களத்தில் நிறைவு செய்ய அதற்கு தேவையான பண்புகளை கொண்டவனே செயல் வீரன். (மற்றவர்கள் அனைவரும் வாய்ச்சொல் வீரர் அடி கிளியே).

ஆதலால் அத்தகைய செயல்வீரர்களிடம் மட்டும் ஒரு செயலை ஒப்படைக்க வேண்டும்.

செயல்வீரர்கள் அல்லாமால் எனக்கு தெரிந்தவன், என் சொந்தகாரன், என் பாசத்திற்கு உரியவன், என்று தனக்கு வேண்டியவர் என்பதற்காக செயலை செறிவாய் நிறைவு செய்ய திறமையற்ற ஒருவனை உயர்ந்து மதிப்பிட்டு அச்செயலை அவர்களிடன் ஏவுதல் கூடாது. அது மட்டும் இன்றி, நான் சிறந்தவன் அப்படி ஒரு பிரச்சனை வந்தால் நான் பார்த்துக்கொள்வேன் என்ற ஏளனமும் கூடாது.

உதாரணம்: இன்றை இந்திய அரசியல் சூழலில் இதுவே நடந்துக்கொண்டு இருக்கிறது. இந்திய அமைச்சரவையைப் பார்த்தாலே தெரியும். :(


மேலும்: அஷோக்

உதாரணம் (வெண்முரசு - ஜெயமோகன்)

பேரரசியே நான் அமைச்சன். அனைத்துத் திசைகளையும் ஐயத்துடன் நோக்கக் கடன்பட்டவன்.
.....

அரசுசூழ்தலில் முதன்மை விதியொன்றுண்டு, அதை தவறவிட்டுவிட்டேன்” என்றாள் சத்யவதி. “ஒருவனைப்பற்றி எந்த இறுதிமுடிவையும் எடுப்பதற்கு முன் அவனை நேரில் பார்த்தாகவேண்டும். அவனிடம் சிலமுறையாவது பேசியாகவேண்டும். எத்தனை நுணுகியறிந்திருந்தாலும் நேரில் பார்க்கையில் நம் அனைத்து கணிப்புகளும் பிழைபட்டுவிடுகின்றன.”

.....

ஆகவேதான் நேரில் பார்க்காமல் முடிவெடுக்கலாகாது என்கிறார்கள் அரசுசூழ்தல் அறிஞர்கள். பிறர் சொல்லும்போது நம் சிந்தைதான் அவற்றைக் கேட்கிறது. நம் தர்க்கம்தான் அவற்றைப் புரிந்துகொள்கிறது. அம்மனிதன் நம்மருகே நிற்கையில் நம்முடைய ஆன்மா அவனை உணர்கிறது. உள்ளுணர்வின் மூன்றாம் விழியால் அவனை நாம் பார்க்கமுடிகிறது.”


பரிமேலழகர் உரை
அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவு செய்ய வல்லானை யல்லது; வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்றன்று - வினைதான் இவன் நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று. 

விளக்கம் 
['செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம். அறிவு ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது.] 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வினைதான் - எவ்வினையுந்தான் ; அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும் வழிகளை யறிந்து செயலாலும் இடையூறுகளாலும் வருந்துன்பங்களைப் பொறுத்துச் செய்து முடிக்க வல்லானையல்லது; சிறந்தான் என்று ஏவல் பாற்று அன்று - இவன் நம் மிடத்துச் சிறந்த அன்புடையவனென்று வேறு எவனையும் ஏவத்தக்கதன்று.

'செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம் . கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை . பாலது - பாற்று ( பால் + து ) . அறிவாற்றல் பொறையூக்கங்களாலன்றி அன்பினால் மட்டும் எவ்வினையும் முடியா தென்பது கருத்து.

மு.வ உரை
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வினைதான் - எவ்வினையுந்தான் ; அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும் வழிகளை யறிந்து செயலாலும் இடையூறுகளாலும் வருந்துன்பங்களைப் பொறுத்துச் செய்து முடிக்க வல்லானையல்லது; சிறந்தான் என்று ஏவல் பாற்று அன்று - இவன் நம் மிடத்துச் சிறந்த அன்புடையவனென்று வேறு எவனையும் ஏவத்தக்கதன்று.

'செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம் . கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை . பாலது - பாற்று ( பால் + து ) . அறிவாற்றல் பொறையூக்கங்களாலன்றி அன்பினால் மட்டும் எவ்வினையும் முடியா தென்பது கருத்து.

நன்றி ரிஷ்வன்
அறிந்து தெளிந்து
தேர்ந்தவனை மறந்து 
தெரிந்தோன் எனவும்
அறிந்தவன் எனவும்
மற்றவனிடம் 
பிழன்றும் பொறுப்பை
ஒப்படைத்தல் தவறு.

No comments:

Post a Comment