நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

 

குறள் 958
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்
[பொருட்பால், குடியியல், குடிமை]

பொருள்
நலத்தின்- நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நார் - மட்டைமுதலியவற்றின்நார்; கயிறு; வில்லின்நாண்; பன்னாடை; கல்நார்; அன்பு.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று.

தோன்றின் - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.

அவனைக் - அவன் - ஆண்பால்சுட்டுப்பெயர்.

குலத்தின்குலம் - நற்குடிப்பிறப்பு; குடி; உயர்குலம்; சாதி; மகன்; இனம்; குழு; கூட்டம்; வீடு; அரண்மனை; கோயில்; இரேவதிநட்சத்திரம்; நன்மை; அழகு; மலை; மூங்கில்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஐயம் - சந்தேகம்; அகப்பொருள்துறைகளுள்ஒன்று, ஐயக்காட்சி; ஐயவணி; இரப்போர்கலம்; பிச்சை; சிலேட்டுமம்; சிறுபொழுது; குற்றம்; மோர்.

ஐயப்படும்.- ஐயப்படுதல் - சந்தேகப்படுதல்., 

முழுப்பொருள்
புகழ் வாய்ந்த சான்றோர்கள் பலர் உள்ள குடியில் / குலத்தில் பிறந்த ஒருவரிடம் அன்பு அருள் கருணை இருத்தல் வேண்டும். ஏனெனில் அக்குடியில் முன்பு பிறந்தோரிடம் அன்பு இருந்தது. அவ்வழி தோன்றலால் அக்குடியில் பிறந்தோரிடமும் எதிர்ப்பார்க்கப்படும். அது இயல்பானது. சரியானதும் கூட.

ஆதலால் நற்குடியில் பிறந்த ஒருவரிடம் அன்பு இல்லை என்றால் அவர் அக்குடியில் தான் பிறந்தவரா என்று இவ்வுலகத்தில் உள்ளவர்கள் சந்தேகப்படுவர். ஆதலால் ஒரு நற்குடியில் பிறந்தால் அக்குடியில் இருக்கும் நற்பண்புகளை ஏந்தி அதன்படி நடக்க வேண்டும். இல்லையேல் வெளியே தான் அக்குடும்பத்தில் பிறந்தோம் என்று கூறிக்கொள்ளக் கூடாது. குடியின் வழி நடக்கவில்லை என்றால் அவர் பிறந்த குடியை சந்தேகப்படுவர். 

தாமற்பல் கண்ணனார் என்னும் புலவர், சோழன் மாவளத்தானோடு சூதாடிய பொழுது தாமற்பல் கண்ணனார் சூதாட்டத்தில் வட்டை மறைத்துவைத்துத் தன்னை ஏமாற்றியதாக எண்ணிய சோழன் சினமுற்று, அவ்வட்டை அவர் மீது எறிந்தான். அதனால், கோபமுற்ற தாமற்பல் கண்ணனார், மாவளத்தானைப் பார்த்து மன்னா உன் செய்கையைப் பார்த்தால், நீ சோழ மன்னனுக்குப் பிறந்தவனாக எனக்குத் தோன்றவில்லையே, ஆத்திமாலை சூடிய உன் முன்னோரெல்லாம் பார்ப்பனர்கள் நோவுமாறு எந்தச் செயலையும் செய்யமாட்டர்களே என்று இகழ்கிறார். முதற்பகுதி இக்குறளின் கருத்துக்கு இயைந்து இருப்பினும், பின்னால் அவன் நாணியதையும், அதையே பாராட்டி அப்புலவரே பாடுவதாகவும் அமைந்த புறநானூற்றுப் பாடல் இதோ.

கடுமான் கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
‘ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
நீர்த்தோ நினக்கு?’ என வெறுப்பக் கூறி,
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே; (புறநா.43:12:5)

நற்குடிப்பிறந்தோர்க்கு ஈரம் என்பது குலத்தைச் சார்ந்த பண்பு என்பதைக் கூறும் முதுமொழிகாஞ்சி வரி
“ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் 
பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப” (முதுமொழிகாஞ்சி 2:1-2)

“வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்த னேநீ பரதன்முன் தோன்றி னாயே” (கம்ப.வாலிவதை 76)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் - குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்; அவனைக் குலத்தின்கண் ஐயப்படும் - அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம். (நலமும் குலமும், ஆகுபெயர். நாரின்மையால் கொடாமையும் கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கி நின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகம் என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக என விதியாக்கி உரைக்க. இவை இரண்டு பாட்டானும் வேறுபட்ட வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமாயின் அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக.

மு.வரதராசனார் உரை
ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.

No comments:

Post a Comment