உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

 

குறள் 950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து
[பொருட்பால், நட்பியல், மருந்து]

பொருள்
உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.
உற்றவன் - சுற்றத்தான்; நண்பன்; நோயாளி.

தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.

தீர்ப்பான் - மருத்துவன்

மருந்து - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை.

உழை - இடம்; பக்கம்; யாழின்ஒருநரம்பு; மான்; பசு; பூவிதழ்; ஏழனுருபு; உவர்மண்; விடியற்காலம்; கதிரவன்மனைவியருள்ஒருத்தி; வாணாசுரன்மகள்; இடைச்சுரம்.

உழைச்செல்வான் - நோயாளியின் பக்கத்திலிருந்து மருந்து முதலியன கொடுப்போன்; மருத்துவனோடு உதவிக்குச் செல்பவன்.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

அப்பால் - அதன்மேல்; அப்பக்கம்.

நாற்  - நான்கு

கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன்.
கூற்றே

மருந்து - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை.

முழுப்பொருள்
வைத்திய முறை வெற்றிப்பெற நோயாளி சுகம்பெற முக்கியமான நான்கு கோட்பாடுகளை கூறுகிறார் திருவள்ளுவர்

1. உற்றான் - நோயாளி - முதலில் நோயினை பற்றியும் நோயின் ஆதிவேர்களை பற்றியும் மருத்துவர் கேட்கும் கேள்விக்கு ஒளிவு மறைவு இன்றி நேர்மையாக பதில்க்கூறவேண்டும். நோய்க்கு தரப்படும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் பரித்துரைக்கப்பட்ட காலத்தில் உட்கொள்ளவேண்டும் (பின்பற்ற வேண்டும்). நோய்க்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற தீர்வுகளான வாழ்க்கைமுறை மாற்றங்கள் உடற்பயிற்சிகள போன்றவற்றையும் பின்பற்ற வேண்டும். முக்கியமாக மனம் விட்டுவிடாமல் வாழ்க்கையிலும் வைத்தியத்திலும் நம்பிக்கை வைத்து வைத்தியதை எடுத்துக்கொள்ள வேண்டும். 

நோயாளி கொடுக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியம். மருத்துவர் என்பவர் குணம் அடைய உதவுவார். அவருடைய பொறுப்பு மருந்துக்கொடுப்பதுடன் முடிந்துவிடுகிறது. நோயாளியே வைத்தியத்தின் வெற்றிக்கு முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஏனெனில் அவரே மருந்துங்களையும் தீர்வுகளையும் பின்பற்றவேண்டியவர். தேவையெனில் மீண்டும் பரிசோதனை செய்து சிகிழ்ச்சை முறையில் மாற்றங்களை மருத்துவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

2. தீர்பான் - நோய்க்கு தீர்வு கொடுக்கும் மருத்துவன் வைத்தியத்தில் மிக முக்கிய பங்கு ஆற்றுகிறார். மருத்துவர் தனது தொழிலில் ஆற்றல் மிக்கவராக இருத்தல் வேண்டும். தொழிலில் அனுபவம் வளர்த்துக்கொள்ள வேண்டும். மருந்துகளை பற்றிய தெளிவு வேண்டும். மேலும், நோயாளிக்கு நோய் வந்ததின் ஆதியை அறிந்து அதனை நோயாளிக்கு உணர்த்த வேண்டும். 

3. மருந்து - நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தத்தாகும். நோயாளியின் தன்மை, நோயின் குறியீடுகள், நோயின் அளவு, காலம் போன்றவற்றைக் கொண்டு சிகிச்சை செய்ய வேண்டும். மருந்து என்பது வெறுமென மாத்திரைகளோ, கஷாயங்களோ என்றளவில் நிற்காமல் வாழ்க்கை முறைமாற்றங்களும், மனம் மாற்றங்களும், பழக்கங்கள் மாற்றங்களும் தேவைப்படும்.

4. உழைச்செல்வான் - ஒரு நோயாளிக்கு மிக முக்கிய தேவை வாழ்க்கை மீதான நம்பிக்கை. தன் மீது நம்பிக்கை. மருத்தவத்தின் மீது நம்பிக்கை. அதேப்போல் நோயாளிக்கு உற்சாகமும் தேவைப்படும். அதற்கு நோயாளியுடன் இருப்பவரும் மிக முக்கியமான பங்கு ஆற்றுகிறார். நோயாளியுடன் பக்கத்தில் இருப்பவர் ஆறுதலான வார்த்தைகளை நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை பேசுவது மிக அவசியம். பாறைப்போன்ற பெரிய நோய் ஆனாலும் அது ஒரு கூழாங்கல் போன்ற சின்ன நோய் என்று சொல்லி அவரது மனவலியை குறைக்கவேண்டும். மேலும் உடன் இருப்பவர் நோயாளியை காயப்படுத்தாமல் இருப்பது அவசியம். குறிப்பாக நோயாளியிடம் போனது வந்தது என பழங்கதைகளைப்பேசி மணம் நோகச்செய்யக்கூடாது. 

நோயாளிக்கு தேவையான சூழ்நிலையை உருவாக்கி தருவதும் உழைச்செல்வான் செய்யக்கூடிய மிக நற்செயல்களில் ஒன்று. நோயாளிக்கு நேரத்திற்கு உணவும் மருந்தும் அளிப்பது உடன் இருப்போர் தான். நோயாளியின் வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற ஊக்குவிப்பதும் உத்வேகம் ஊட்டுவதும் உடன் இருப்போரின் கடமையாகும். 

நோயாளிதான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு என்று தனது பொறுப்பை துறப்பது தவறு என்று கூட சொல்லலாம். ஆதலால் வீட்டில் அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள், பாட்டி, தாத்தா, தம்பி, தங்கை, நண்பர்கள் மற்றும் எல்லா உறவுகளுக்கு மனிதாபிமானத்துடன் பக்க பலமாய் மலையாக இருத்தல் வேண்டும். எதற்கும் அஞ்ச வேண்டாம், நாமாவது இந்நோயாவது ஒரு கைப்பார்த்துவிடலாம் என்ற துணிவை அளிக்கவேண்டும். மேற்சொன்னவை வீட்டில் இருந்து பாதுக்காத்துக்கொள்ளும் உறவுகளுக்கு. 

ஆனால் இன்றோ பல நேரங்களில் மருத்துவ சிகிழ்ச்சையின் தேவையாலும் மற்ற சூழ்நிலைகளாலும் சில சமயம் உறவுகள் கைவிரிப்பதாலும் ஒரு நோயாளில் மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலேயே செவிலியர் அல்லது உதவியாளர்களின் மேற்பார்வையிலும் துணையிலும் சிகிழ்ச்சியையும் காலத்தை கடக்கவும் நேரிடகிறது. அப்பொழுது செவிலியர்/உதவியாளரும் நோயாளியுடன் கணிவுடன் பக்கபலமாய் உடன் இருத்தல் அவசியம். உறவுகளுக்கு சொன்ன அனைத்தும் அவர்களுக்கும் பொருந்தும். 

மேற்சொன்ன நான்கும் வைத்தியத்தில் மிக முக்கிய பங்கு ஆற்றுகின்றன. 

ஆயூர்வேத டாக்டர் இல்.மகாதேவன்/இல்.மஹாதேவன் (Ayurveda Dr. L.Mahadevan) அவர்கள் “முதற்கால்” என்றொரு நேர்காணல் நூலில் இவ்வாறு கூறுகிறார்.
ஒவ்வொரு நோயாளியும் வரும்போது நோயாளியைப் பார்க்கிறார்கள். சாஸ்திரத்தில் இந்தந்த இடத்தில் இப்படி இப்படி சொல்லியிருக்கிறார்கள். இது சாஸ்திரம்; இது என்னுடைய யுக்தி; இது எனக்கு கிடைத்த அனுபவம் என்று மூல பாடத்தையும் எனது அனுபவத்தையும் இணைத்துத் தான் பாடம் எடுக்கிறேன்.” 
அதாவது மருத்துவர்கள் தாங்கள் கற்றதை மட்டும் கருத்தில்கொள்ளாமல், தங்கள் அனுபவத்தையும் ஞானமாக கொண்டு நோயினை அடையாளம் கண்டு, தக்க சிகிழ்ச்சை செய்யவேண்டும், தக்க மருந்துகளை வழங்கவேண்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மருந்து - பிணிக்கு மருந்தாவது; உற்றவன்- அதனையுற்றவன்; தீர்ப்பான் - அதனைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து - அவனுக்குக் கருவியாகிய மருந்து; உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்று - அதனைப் பிழையாமல் இயற்றுவான் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது. (நான்கு என்னும் எண் வருகின்றமையின், அது நோக்கி 'அப்பால்' என்றொழிந்தார், 'நான்கு கூற்றது' என்பது விகாரமாயிற்று. அவற்றுள் உற்றவன் வகை நான்காவன பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை. தீர்ப்பான் வகை நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு எய்திய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் தூயவாதல் என இவை. மருந்தின்வகை நான்காவன: பல பிணிகட்கும் ஏற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதல் என இவை. இயற்றுவான் வகை நான்காவன: ஆதுரன்மாட்டு அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை. இவையெல்லாம் கூடியவழியல்லது பிணி தீராமையின் இத்தொகுதியையும் 'மருந்து' என்றார், ஆயுள்வேதமுடையாரும் இவை கால்களாக நடக்கும்என்பது பற்றி 'பாதம்' என்றும், இவை மாறுபட்டவழிச் சாத்தியமும் முதிர்ந்து அசாத்தியமாம் என்றும் கூறினார். இதனான், அதனைத் தீர்த்தற்கு வேண்டுவன எல்லாம் தொகுத்துக்கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
நோயுற்றவனும், நோய்தீர்க்குமவனும், மருந்தும், அதற்குத்தக்க மருந்தினைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்றிவ்வகைப்பட்ட நான்கு திறத்தது மருந்து.

மு.வரதராசனார் உரை
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

சாலமன் பாப்பையா உரை
நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.

No comments:

Post a Comment