தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

 

குறள் 828
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு] 

பொருள்
தொழுத - தொழுதல் - வணங்கல்

கையுள்ளும் - கைக்குள்ளும் 

படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.

ஒடுங்கும் - ஒடுங்குதல் - அடங்குதல்; குறைதல்; சுருங்குதல்; குவிதல்; சோர்தல்; கீழ்ப்படிதல்; பதுங்கல்; ஒதுங்குதல்; ஒளிமங்குதல்.

ஒன்னார் - பகைவர் 

அழுத - அழுதல் - அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்.

கண்ணீரும்கண்ணீர் - கண்ணிலிருந்து வழியும் நீர்

அனைத்து- அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம்

அனைய - அத்தன்மையான; ஒத்த. -

முழுப்பொருள்
பகைவர் இரு கைக்கூப்பி தொழும் பொழுது உயிரக்கொல்லும் ஆயுதம் அடங்கி ஒடுங்கி அக்கைகளுக்குள்ளே இருக்கக்கூடும். பகைவர் வணங்குகையில் கூட நாம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். பூவுக்குள்ளும் பூநாகம் இருக்கும் என்பதை நினைவில் கொள்க.

அதுப்போல சில கூடா நட்புகளின் / உறவுகளின் கண்ணீர் சிந்தும் அழுகைக்குள்ளும் நம்மை அழிக்கக்கூடிய ஒரு ஆயுதம் ஒரு தந்திரம் ஒரு திட்டம் ஓரு சூழ்ச்சி இருக்கக்கூடும் என்றென்பதை நினைவில் கொள்க. அத்தையோரிடம் இருந்து (மனதளவிலாவது) விலகி நிற்க. அவர்களை நம்ப வேண்டாம்.

இன்றைய காலங்களில் குறிப்பாக சில உறவுகளிடம் இது அதிகமாய் இருக்கக்கூடும். தன்னை நியாயமாக காட்டிக்கொள்ள தன்மீது தவறே இல்லை, அடுத்தவர்மீது தான் தவறு, தன்மீது வீண்பழி சுமத்துகிறார் என்றெல்லாம் அழுவர். சிலர் சில (நிதி) உபாயங்கள் பெறவேண்டி தான் செய்த தவறு எல்லாவற்றையும் அறியாமையால் செய்துவிட்டேன் என்றும், தன்னை மன்னித்துவிடு என்றும், எனக்கு உன்னைவிட்டால் வேறு யாருமில்லை என்றும் அழுகை சிந்தி நம்மை நம்பவைப்பர். ஆனால் கூர்ந்து நோக்கினால் அவர்கள் செய்கையில் ஒருவித மாற்றமும் இருக்காது எனதை அறியலாம். ஆதலால் அவர்களை எச்சரிக்கையுடன் எதிர்கொள்க. 

புறநானூற்று (10:1) வரியொன்று “வழிபடுவோரை வல்லறிதியே”, அதாவது, “வழிபட்டு நிற்போரின் உண்மை நிறத்தை விரைந்து அறிவாய்” என்று சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னிக்கு ஊன்பொதி பசுங்குடையார் என்னும் சங்கப்புலவர் பாடியது. சீவக சிந்தாமணிப் பாடல் இக்குறளின் கருத்தையே, இவ்வாறு கூறுகிறது.

“தொழுத தம் கையின் உள்ளும் துறு முடி அகத்தும் சோர
அழுத கண்ணீரின் உள்ளும் அணிகலத்து அகத்தும் மாய்ந்து
பழுது கண் அரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றாது
ஒழிக யார் கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே” (சீவக.1891)

பகைவுறவோர் தொழுத தம் கையிலும், மயிர் நெருங்கிய முடியிலும், ஒழுக அழுத கண்ணீரிலும், அணிகலன்களிலும், கொல்கின்ற படை சேர ஒடுங்கும்; அதனை ஆராய்ந்து, அக் கூடா நட்பைத் தம்மிடமிருந்து நீக்கி, யாவரிடத்தும் தெளிதலைப் பற்றாது விடுக, அன்றித் தெளிதல் கொண்டவர் இறந்தோரே யாவர், என்பதே இப்பாடல் சொல்லுவது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்: அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம். '(தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் கோறற்கு வாங்க இருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வழித் தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார். 'ஒடுங்கும்' என்றார். பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும், அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தௌ¤யற்க'' என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்: பகைவர் அழுதகண்ணீரும் அத்தன்மையதாமென்று கொள்க. மெல்லியராகத் தொழுதுவந்து ஒத்தார்போல ஒழுகுவாரது நட்பென்றவாறு. இது கூடாநட்பினால்வருங் குற்றங் கூறிற்று. கூடா நட்பினர் வேறு காலத்தினும் அழுதகாலத்தினும் தேறப்படாரென்க.

மு.வரதராசனார் உரை
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.

சாலமன் பாப்பையா உரை
பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.

No comments:

Post a Comment