புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

 

குறள் 1259
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்] 

பொருள்
புலப்படுதல் - தெரிதல்; வெளிப்படுதல்.

புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.

புலப்பல் - பிரிந்து சென்றார் திரும்புகையில் பிணங்கி இருப்போம்

எனச் - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

சென்றேன் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

புல்லினேன் -  புல்லுதல் - ழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

நெஞ்சம் - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

கலத்தல்  - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்.

உறுவது - Thatwhich happens; சம்பவிப்பது. , வரற்பாலது; 2. That whichaccrues; gain; இலாபம் உறுவதும் . . . பேதைகளோர்கிலரே (திருநூற். 13). 3. That which resembles; ஒப்பது. இமையவர்களுலக முறுவதுவே(சீவக. 1780). 4. That which is proper; தகுவது.உறுவதாவது . . . குடக்கூத்தனுக் காட்செய்வதே (திவ்.திருவாய். 4, 10, 10). 
உறுவது - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

கண்டு காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

முழுப்பொருள்
தலைவனின் பிரிவின் பொழுது தலைவி நானோ வருந்திக்கொண்டு இருந்தேன். பிரிந்து சென்ற தலைவன் திரும்பிவந்தான். வந்த உடன் தலைவனுடன் ஊட வேண்டும் என்றே அவரிடம் சென்றேன். ஆனால் அடக்கமில்லா என் நெஞ்சமோ அவருடன் கலக்கவேண்டும் என்று விழைந்தது. ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாமல் அவரை தழுவி புணர்ந்தேன். நிறை அழிந்தது. இன்பம் அடைந்தேன் என்று தலைவி கூறுகிறாள்.

கலித்தொகைப் பாடல் வரிகள் “புலப்பென்யான் என்பேன்மன் அந்நிலையே அவர்க்காணிற் கலப்பென்” (67:8-9) என்று குறள் கருத்தையே கூறுவதிலிருந்து, சங்ககாலப் புலவர்கள் மற்ற புலவர்களது, கருத்துக்களை மேற்கோள்களாக தமது படைப்புகளில் பயன்படுத்தியதையே காட்டுகிறது. இதில் யார் முன்னவர், யார் பின்னவர் என்கிற ஆராய்ச்சி தேவையில்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன் (வாயாமை - புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.).

மணக்குடவர் உரை
புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன்: நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு. இஃது கூடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது

மு.வரதராசனார் உரை
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.

சாலமன் பாப்பையா உரை
அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.

No comments:

Post a Comment